எவராலே எல்லாம் இறைவனாலே---அஹமது அலி---

உயிரணுவில் உரமிட்டு
கருப்பையில் குடியமர்த்தி
கொடிவழியே உணவு புகட்டி
மடிமீது பிறக்கச் செய்தவனாலே..!
************************************************
உனக்கென்று ஓர் உருவம்
உனக்கென்று ஓர் உறவு
உனக்கென்று ஓர் பெயரும் தந்த
உலகாளும் பெரியோனாலே.!
************************************************
உண்பதற்கு உணவுகள் படைத்து
உறவாட உறவுகள் கொடுத்து
உலவிச் செல்ல உலகமும் படைத்த
நிகரில்லா நீதி தேவனினாலே..!
****************************************************
சிந்திக்க அறிவும் தந்து
சீர் பெற கல்வியும் தந்து
சிறப்பான வாழ்க்கையும் தந்த
ஞானம் மிகைத்தவனாலே..!
********************************************
தேவைகள் யாதுமற்று
தேவைகள் எல்லாம் தந்து
நாடியவை நல்கிடும் அந்த
நாயனின் நற்கிருபையாளே.!
*************************************************
புகழ்ந்தவருக்கும் புசித்திட தந்து
இகழ்ந்தவர்க்கும் இன்னும் தந்து
அகிலமெல்லாம் ஆளும்
ஆற்றல் படைத்தவனாலே.!
***********************************************
அண்ட சராசரங்கள் படைத்து
அழகாய் அதை நிலை நிறுத்தி
அடியவர்கெல்லாம் அருளிய.
கருணை மிக்க காவலனாலே.!