நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு - சிறுபஞ்ச மூலம் 36
அனுயெதுகை அமைந்த நேரிசை வெண்பா
மயிர்வனப்புங் கண்கவரு மார்பின் வனப்பும்
உகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு. 36
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
தலைமயிராலுண்டாகும் அழகும், கண்டவர் கண்களைக் கவர்தற்குரிய மார்பினாலுண்டாகும் அழகும், நகத்தால் உண்டாகும் அழகும், செவியினால் உண்டாகும் அழகும், குற்றம் நீங்கிய பல்லினால் உண்டாகும் அழகும் அழகல்ல; நூல்கட்குப் பொருந்திய சொல்லழகே அழகாகும்.
பொழிப்புரை:
தலைமயிரால் வருமழகும், கண்டார் கண்ணைக் கவரும் மார்பினால் வருமழகும், நகத்தினால் வருமழகும், காதினால் வருமழகும், குற்றந்தீர்ந்த பல்லினான் வருமழகும் என இவ் ஐந்தழகும் ஒருவற்கு அழகல்ல; நூல்கட்குப் பொருந்திய சொல்வன்மையால் வரும் அழகே அழகாகும்.
கருத்துரை:
தலைமயிர், மார்பு, நகம், செவி, பல் இவற்றினழகினும் சொல்லழகே சிறந்தது.
மயிர் - மக்கள் தலைமயிர். கண்கவர்தல் - பார்த்த கண் பார்த்த பொருளினின்றும் பெயராதபடி வயப்படுதல், நெஞ்சத்து நல்லம்யா மென்னுமளவு நிலைமையாற் கல்வியழகே மற்றெவ்வழகினும் மேம்பட்டது என்றபடி. நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு என்பதற்கு இலக்கண வரம்பின்படி பேசும் அழகு என்று வேறு பொருள் கூறலாம்.

