வேகாத வெயில்
[சிறு கதை]
சுள்ளென்று அடித்த வெயில் பரமனை மேலும் நடக்க விடாமல் தடுத்தது. பரமனுக்கு சோர்வாக இருக்கவே ஒரு மர நிழலில் கொஞ்சம் இளைப்பாறலாம் என்று நினைத்தான்.
சற்றுத் தொலைவில் இருந்த வேப்ப மரம் அடர்த்தியாய் தழைத்து இருந்தது. வேம்பூக்களின் வாசனை இவன் வரும் பகுதி வரை வீசியது. பங்குனியில் எல்லாமே காய்ந்து போய் இருக்க வேம்பு மட்டும் செழிப்பாய் இருப்பது மகிழ்வைத் தந்தது அவனுக்கு.
மனதளவில் சோர்வும் உடலளவில் தளர்வும் அடைந்த பரமன் மரத்தின் அருகில் நின்று அன்னாந்து பார்த்தான். மரம் ஒரு குடையைப் போல் விரிந்து இருந்தது. வேம்பூக்களின் வாசனை, அவனுக்கு வெயிலால் வந்திருந்த கிரக்கத்தையும் மீறி மலர்ச்சியை ஏற்படுத்தியது.
சுவாசிக்க மட்டுமே காற்று இருக்கிறது. அதன் வேகம் சுத்தமாய் இல்லை. அவ்வளவு மௌனம். "ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிமா இல்ல இருக்கு", என்றபடியே தனது தலையில் இருந்த துண்டை அவிழ்த்து தனது முகத்திற்கு நேராக விசிறத் துவங்கினான்.
மர நிழல் சுகமாய் இருந்தது. வீட்டில் அடைந்து கிடந்து மனைவியின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவதைவிட இந்த மரத்தின் நிழல் எவ்வளவோ மேல் என்று அவனுக்குப் பட்டது.
இன்று காலையில் நடந்த சம்பவம் அவன் கண்களில் ஓடிக் கொண்டே இருந்தது. தன் குடும்பத்தில் உள்ளவர்களின் குறுகுறுப்பான பார்வையும் அருகில் உள்ள மக்களின் விரோதமான அனுகுமுறையும் அவனை சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த நிலையில் இருந்து தன்னை விடுவிக்க தற்போதைக்கு வீட்டை விட்டு வெளியேறுவதுதான் நல்லது என்று முடிவு செய்து அப்படியே காலாற நடந்து வந்து விட்டான்.
தனது கருத்தை சொல்லக் கூட முடியாத நிலையில்தானா நாம் இத்தனை காலமாய் இந்த ஊருக்குள் இருக்கிறோம் என்பதை நினைக்கும்போது பரமனுக்கு இன்னும் ஆத்திரமாய் வந்தது. ஒரு காலத்திலும் சில விசயங்களை நாம் வெளிப்படுத்தியது இல்லை. இன்று எதோ சட்டென்று தனது எண்ணத்தை., அதுவும் ஒரு நல்ல காரியத்திற்காக எடுத்துச் சொன்னது எத்தனை பெரிய பிரச்சனையாகிவிட்டது என்று மனம் பதைபதைத்த பரமன், மரத்தின் முடிச்சுப் போன்ற வேரின்மேல் உட்கார்ந்து கொண்டான்.
சுற்று முற்றும் பார்த்தான். தொலைவில் அனல் கக்கும் வெயிலில் கானல் நீர் மட்டுமே அலையடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நிலத்தின் நிறமாய் கலந்து தெரிந்த செம்மறி ஆடுகள் அந்தக் கானல் நீரில் ஆவியாய் பறப்பது போலத் தெரிந்தது. ஆடுகள் வெந்து கரைந்து போகுமோ என்ற வருத்தப்பட்ட பரமன் ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தான். [ எச்சரிக்கை விளம்பரம்: புகை உயிருக்குப் பகை]
மூக்குத்திப் பொட்டுக்களாய் வேப்பம் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. காலணியை விடுவித்தவன் அந்தப் பூக்கள் மீது கால் வைத்துப் பார்த்தான். அது மிருதுவாய் இருக்கவே அதன் மீது படுத்துப் புரள வேண்டும் போல் இருந்தது. கீழே தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிளையினை ஒரு ஆட்டு ஆட்டி விட்டான். மலர்கள் அவன்மீது பொலபொலவென உதிர்ந்தது. மரம் பூக்களால் தன்னை வாழ்த்துவது போல இருக்கவே இன்னும் நிம்மதி அடைந்தான்.
கிழக்கே பார்வையை திருப்பியவனுக்கு தொலைவில் ஒரு உருவம் மிதி வண்டியில் வருவது தெரிந்தது.. அலையடிக்கும் தண்ணீரில் நீந்தி வருவதுபோல் அந்த உருவம் தெரிந்தது. பக்கத்தில் வரவர அது .தொட்டியபாளையத்தைச் சேர்ந்த மாற நாயக்கர் என்பது தெரிந்தது. எப்படியோ கானல் நீரில் தஷ்புஷ் என்று நீந்தி வந்து கரை சேர்ந்து விட்டார் என்பதை அறிந்து தனக்குள் சிரித்துக் கொண்டவன் பீடியை இன்னொரு இழுப்பு இழுத்தான். [ எச்சரிக்கை விளம்பரம்: புகை உயிருக்குப் பகை]
அந்தப் புகை வேப்பம் பூக்களின் ரம்மியமான வாசனையை கலங்கடித்தது.
அருகில் வந்த அவரும் பரமனைப் பார்த்ததும் வண்டியை மெதுவாக இயக்கி நிறுத்தி இரண்டு கால்களையும் நிலத்தில் ஊன்றி நின்றார் மிதிவண்டி பாரில் அமர்ந்தபடியே. அந்த வண்டியில் பிரேக் என்ற ஒன்று இருக்கும் என்பது மாற நாயக்கருக்கும் தெரியாது.
“பார்த்து பெருசு. நல்லா உக்காரு... “ பாதியில் நிறுத்தினான்.
“எல்லாம் எனக்குத் தெரியுண்டா.. படவா”. சொல்லிக் கொண்டே அவர் 'கெக் கெக்' என்று சிரித்தார்.
“இல்ல கீழே கீது விழுந்து தொலைஞ்சிடாதீங்கன்னு சொன்னேன்.. அப்புறம் ஏது இந்த வேகாத வெய்யில்ல.. இப்படி ?”
“பொகிலக் குச்சி [புகையிலை] வாங்கலாம்னு வந்தேன்டா. நீயென்னடா இப்படி தன்னந்தனியா தேவாங்காட்டம் உட்கார்ந்திருக்கே பீடிய பொகைச்சுட்டு?”
“ஆமாங்க நாயக்கரே. மனசு சரி இல்ல. அதான் அப்படியே வந்திட்டேன். ஊர்ல ஒரு பிரச்சனை ஆகிப் போய்ட்டுது. வீட்டுல சம்சாரமும் மொறைச்சிட்டே இருக்கா. எவ்வளவு நேரம் அவ மூஞ்சிய பாத்திட்டே இருக்கறது” அலுத்துக் கொண்டான் பரமன்.
“இதென்னடா... என்னைக்கும் இல்லாம இன்னைக்கு புதுசா அலுத்துக்கறே... பாப்பாத்தி கூட ஏதாவது தகராறாடா?”. வலது காலை மிதிவண்டி பாரில் இருந்து மெதுவாக தூக்கிப் போட்டு கீழே இறங்கி வண்டியை வேப்ப மரத்தில் சாய்த்து நிறுத்திவிட்டு அவன் அருகில் வந்து குந்தலிட்டு அமர்ந்தார்.வண்டியில் ஸ்டாண்டும் இல்லை.
“உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான் நாயக்கரே.” பேசிக்கொண்டே ஒரு பீடியை உருவி எடுத்து அவருக்குக் கொடுத்தான். [ எச்சரிக்கை விளம்பரம் ]
“என்னடா இது பத்தா நெம்பர் பீடியாட்ட இருக்குது. செய்யது இல்லையாடா பரமா. சரி எதோ ஒரு கெரகம்... என்னதான் பிரச்சனைன்னு சொல்றா ”
பீடியை பற்ற வைத்து சுவாரஷ்யமாக இழுத்தார். [ எ. வி. ]
“எல்லாம் அந்த வெளங்காதவன் அம்புலியால வந்ததுதான். அந்தப் பிரச்சனையாலதான் .வீட்டிலயும் முட்டிக்கிச்சு ”
“அம்புலிக்கும் உனக்கும் என்னடா திடீர்னு. நீ எந்த வம்பு தும்புக்கும் போகாதவனாச்சே”. இரண்டு மூன்று இழுப்பில் அவர் பீடி காலியானது. [ எ. வி. ]
“நாயக்கரே... மனசுக்குப் பட்டுதுன்னு ஒரு வார்த்த சொல்லிட்டேன். அது அம்புலிய ரொம்பப் பாதிச்சுருச்சு போல. ஊர்ப்பிரச்சனையா அத மாத்திட்டான் ... நானும் உட்டுக் குடுக்கல... எகிறிட்டேன்ல...”
நெருப்பு கையைச் சுட விருட்டேன்று பீடியை தூக்கி எறிந்து மண்ணைப் போட்டு மூடினான். [எ. வி.] நேற்றும் இன்று காலையிலும் நடந்த சம்பவம் மீண்டும் பரமனை ஆத்திரம் கொள்ள வைத்தது. மாற நாயக்கர் காதை தீட்டிக் கொண்டு அவனுடைய பிரச்னையைக் கேட்டார்.
பரமனின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த அம்புலி என்பவன் ஒரு கட்சியின் தீவிர ஆதரவாளன். அவனுடைய கட்சியைத் தவிர எந்தக் கட்சிக்கும் மரியாதை தர மாட்டான். பரமனைப் பொறுத்தவரை எந்தக் கட்சியையும் சாராதவன். எல்லோருடனும் சமமாய் நடந்து கொள்வான். அப்படி இருக்கையில் இவனுக்கும் ஒரு சோதனை வந்தது.
பஞ்சாயத்துத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உதிரிக் கட்சி ஊதாரிக் கட்சி ஊர்க்கட்சி என்று வரிந்து கட்டிக் கொண்டு ஆட்டம் போடத் துவங்கினர். டீ காப்பி சாப்பாடு மாட்டன் சிக்கன் குவாட்டர் என்று கலகலக்கும். எந்த பார்ட்டியிடமும் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கிடைத்தவரை லாபம் தானே. இந்த பஞ்சாயத்துத் தேர்தல் வந்து விட்டாலே ஊர் உருப்பட்ட மாதிரிதான். மக்களை அந்தந்தப் பக்கம் இழுத்துப் போட முயற்சித்துக் கொண்டு இருப்பார்கள். தெரியாமல் ஒரு வேட்பாளரிடம் சென்று நலத்தைக் கூட விசாரித்து விடக் கூடாது. அப்படி விசாரித்து விட்டால் வந்து விடும் பொல்லாப்பு. நீ அவன் பக்கமா. எனக்கு எதிரியா மாறிட்டியா. என்று விரோதமே வந்து விடும். அதனால்தான் எதுக்கு நமக்கு வீண் பகை என்று நடு நிலைமையாக இருந்தான். ஆனால், அன்று யதார்த்தமாகப் பேச அது வில்லங்கமாகி விட்டது.
“இந்தத் தடவ நம்ம ஓட்டு வெள்ளிமலை முருகசாமிக்குத்தான்” என்று பரமன் சொன்ன வார்த்தைதான் பெரிய பூதமாக ஊருக்குள் கிளம்பி விட்டது.
“நாச்சிபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஐந்து ஊர்லயும் நல்ல மனுசன்னு பேர் வாங்கினவரு முருகசாமி. அவர் வாக்கும் செயலும் சுத்தமா இருக்கும். நம்ம ஊருக்குள்ள யாரும் பிரசிடெண்டுக்கு இந்த வாட்டி நிக்கல. இந்த அம்புலிதான் நிக்கிறதா முடிவு பண்ணி இருக்கான். அவன் ஒரு நாதாரி. காசுக்காக எதையும் செய்வான். கட்டப் பஞ்சாயத்து அது இதுன்னு காலத்த ஓட்டிட்டு இருந்தவன் இப்போ திடீர்னு போட்டி போடறான்.
அவன் இப்பத்தான் நம்ம ஊருக்கு குடி வந்து இருக்கான். அவனோட ஊர்ல இருந்த வரைக்கும் அப்படி ஒன்னும் நல்ல பேரு வாங்கிய ஆளப்போல இல்ல. நம்மள மாதிரி ஆளுங்கள அவன் எங்கே மதிக்கிறான். அதனால நம்ம ஓட்டு முருகசாமி அண்ணனுக்குத்தான்”
என்று வெள்ளந்தியாய் அவன் சொன்ன பேச்சு ஊருக்குள் ஒரு சலசலப்பை உருவாக்கிவிட்டது. அம்புலிக்கும் இது பெருத்த அவமானமாய் பட்டது.
“நம்ம ஊருக்குள் இருந்துட்டு நமக்கு ஓட்டுப் போடமாட்டானா அவன். அப்புறம் எப்படி அடுத்த ஊர்க்காரன் நம்ம மதிப்பான். இனி அவனுக்கு இருக்குது வேட்டு”. அம்புலி கொக்கரித்தான். அவனுடைய சகாக்களை வைத்து ஊருக்குள் எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்பி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தான்.
அம்புலியின் வீட்டில் கூட்டம் கூடியது. பரமனுக்கு வேண்டியவர்களும் முக்காட்டைப் போட்டுக் கொண்டு அம்புலியின் வீட்டிற்குச் சென்றார்கள். “பரமன் ஒருத்தனுக்காக இந்த அரசியால்வாதிய பகைச்சுக்கிட்டு இங்கே குப்பை கொட்ட முடியுமா” என்ற பயத்தில் ஓடினார்கள்.
இல்லாத மீசையை தடவிக் கொண்டே அம்புலி அறிக்கை விட்டான்.
“பரமன் ஒரு கருப்பு ஆடா மாறிட்டான். அவன் நம்ம ஊருக்குள் இருந்தும் நமக்கு சாதகமா இல்ல. என்ன கேவலப் படுத்திட்டான். அதுக்கு என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்க. இங்கே இருக்கிற நெறையப்பேரு இந்த ஊரச்சார்ந்தவங்க தானே.. அவனோட சொந்த பந்தம் தானே உங்களக் கேட்காம நான் ஒரு முடிவு செய்யக் கூடாது பாருங்க .” அம்புலி பொடி வைத்து ஏவி விட்டான். காசுக்கும் சரக்கிற்கும் ஆசைப்பட்ட கூட்டம் அவனுக்கு ஜால்ரா போட ஆரம்பித்தது.
“ஆமாமா. இந்த பரமன் நாட்டுக்கே துரோகம் பண்ணிட்டான். அவனோட வேஷம் கலஞ்சு போய்ட்டுது பார்த்துக்குங்களேன்....”
“இது வரைக்கும் நல்லவனாட்டம் இருந்தவன்., யாருக்கும் எதிர்ப்பா பேசாதவன் இப்போ... என்ன தெனாவட்டா பேசறாம்பாரு...”
“அந்த முருகசாமி பரமன நல்ல கவனிச்சு இருப்பானோ”
“அட நீ வேற. முருகசாமிக்கு நல்ல மனுசன்னு ஒரு பேரத்தவிர ஒரு சல்லிக்காசு கெடையாது. பரமன்கிட்ட இருந்து புடுங்கினாப் பத்தாது...”
“யாரு எந்தக் கட்சில நின்னாலும் நாம அம்புலி பக்கமா நிப்போம். இதுதான் நம்ம ஒரே முடிவு”
காரசாரமாய் எல்லோரும் பக்கவாத்தியம் பக்காவாய் வாசித்தார்கள். இதனால் அம்புலிக்கு மிகவும் பெருமையாய் போய்விட்டது. மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து பரமனைப் பார்த்து ஏசினார்கள். ஏசியதை அப்படியே அடுத்த நாள் காலையில் வந்து பரமனின் காதுகளிலும் சிலர் வீசினார்கள். இவனையும் பகைத்துக் கொள்ளக் கூடாதே என்றுதான் இந்தக் கூத்து. இதனால் ஆத்திரம் வந்த பரமன் கொஞ்சம் நிதானம் இழந்து விட்டான்.
பரமனுக்கு கோபம் வரக் காரணம் இருந்தது. அம்புலி கூட இந்த ஊர்க்காரன் இல்லை. அவன் அப்படி ஒன்று யோக்கியவாதியும் இல்லை. அவனுக்குத் தெரிந்தது அரசியல் ஒன்றுதான். ‘
"இந்த ஊர் மக்களுக்கு எங்கே புத்தி போனது. நல்லது கெட்டது கூடத் தெரியாம போயிட்டுதா. நம்ம ஊர் பெரியவங்க எல்லாம் இப்போ அரசியல் வேண்டான்னு ஒதுங்கிட்டாங்க. அவுங்களுக்கெல்லாம் பித்தலாட்டம் செய்யத் தெரியாது. இப்போ இருக்கிற சில்லறைக கூட எதுக்கு நாம மல்லுக்கு நிக்கோனும்னு அரசியல விட்டே ஒதுங்கிட்டாங்க. அப்படிப்பட்டவங்க பிரசிடெண்டுக்கு நின்னா நான் எதுக்கு இப்படி பேசப்போறேன்” என்ற விரக்தியில்தான் முருகசாமிக்கு ஆதரவை தெரிவித்தான்.
“வாங்கய்யா வாங்க. ஊரு பெரிய மனுசனுக எல்லாம் இப்படித்தான் சாமி மாடு மாதிரி தலைய ஆட்டுவீங்களா. அந்த அம்புலி எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சும் பயத்துல எம்மேல காரித் துப்பிட்டீங்க. அந்த ஈரம் கூட காயல. அதுக்குள்ளே வந்து எங்கிட்ட நல்ல நாயம் பேச வந்துட்டீங்களா. உங்க விருப்பத்துக்கு மாறா இதுவரைக்கும் நான் நடந்து இருக்கேனா. இத்தன வருசத்துல இன்னாருக்குத்தான் என்னோட ஓட்டுனு சொல்லி இருப்பேனா. என்னமோ முருகசாமி ஊருக்கு உபகாரம் செய்யற மனுசன்னு நெனச்சு என்னோட மனசுல உள்ளத சொன்னேன். அது தப்பா? நீங்க மட்டும் அம்புலி காலக் கழுவ ஓடலாம். அது தப்பில்ல ... இல்லையா? ”
மூச்சு விடாமல் பேசிய பரமனின் பேச்சால் எல்லோரும் அதிர்ந்து போய் நின்றார்கள். பரமனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. பரமன் மீண்டும் தொடரந்தான்.
“நீங்க மட்டும் உங்க கட்சியப் பத்தியும் கட்சிக்காரனப் பத்தியும் உங்க தலைவரப் பத்தியும் பெருமையா பீத்திக்கலாம். ஆனா நான் என்னோட நெலமைய சொன்னா மட்டும் கருப்பு ஆடு, வங்க நரி, கொங்காடை, பன்னாடை அப்படி இப்படின்னு வாய் கிழிய பேசலாம். அதுக்கு பத்துப் பேரு மானங்கெட்டுப் போய் அல்லைல வடை சுடலாம்... அப்படியே வந்து எங்கிட்டயும் வாயப்புடுங்கலாம்... கொஞ்சமாவது வெளிப்படையா இருங்க... அடிமரம் சாஞ்சா அத்தனையும் சாஞ்ச மாதிரி .நீங்களும் இருக்காதீங்க...”
இப்படிப் பேசியதைப் பார்த்தவர்களுக்கு., இவனே ஒரு அரசியல்வாதி ஆகிடுவான்போல இருக்க வாய் பொத்தி அமர்ந்திருந்தனர். ஆனாலும் அம்புலியைப் பகைத்துக் கொள்ள யாருக்கும் மனம் இல்லை. தைரியமும் இல்லை. அதனால் ஒரு பெரியவர் மட்டும் மெள்ள வாயைத் திறந்தார்.
“இதப்பாரு நீ சொல்றது நாயந்தானப்பா. ஆனா அவன் வசதியான ஆளு. நம்ம ஊர்ல அவன்தான் பிரசிடண்டுக்கு நிக்கிறான். அவனப் பகைச்சுக்கிட்டு நாம இருக்க முடியாது. ஒருவேளை அம்புலி நாளைக்கு ஜெயிச்சுட்டான்னு வெச்சுக்க, அவன்கிட்டத்தானே தொட்டதுக்கெல்லாம் ஓடனும். முருகசாமியா வந்து நமக்கு உதவப் போறான். அதனால எங்க முடிவு அம்புலி பக்கம்தான். அதே சமயம் நீ உன்னோட கருத்த சொன்னதுக்காக எங்களுக்கு ஒன்னும் வருத்தம் கெடையாது......வாங்கப்பா போகலாம்”
சொல்லிவிட்டு அவர்கள் சென்று விட்டனர். அதன் பின்புதான் வீட்டில் பூகம்பம் வெடித்தது. இவ்வளவு நேரம் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த பாப்பாத்தி இப்போது குதிக்க ஆரம்பித்தாள்.
“ஓட்டுக் கேக்க வந்தவுங்க அஞ்சு பத்துக் குடுத்தா வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே. ஆரு வந்தாலும் உனக்குத்தே எம்பட ஓட்டுன்னு சொல்லிடலாம் இல்ல. அத வுட்டுட்டு உனக்குத்தே எம்பட ஓட்டுன்னு ஒருத்தருக்காகச் சொல்லி இப்படி ஊர பகைச்சுக்க வேணுமா...
என்னைக்கும் இல்லாத அரசியலு இப்போ எப்படி வந்தது. வந்தாலும் வந்தது. இன்னைக்கு வரைக்கும் நல்ல மனுசன்னு இருந்த பேரு எல்லாம் போய்ட்டுதல்லோ... வாயில்லாப் பூச்சி உனக்கெல்லாம் எதுக்கு இந்த வெவரங்கெட்ட நாயம்.... ”
என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் போனவள் எதை எட்டி உதைத்தாளோ. வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல் சட்டி பானைகள் உருண்டு கொண்டு இருந்தது. இனியும் இங்கு இருந்தால் இவளுடனும் களுத்துக்கட்ட நேரிடும் என்று வெளியே கிளம்பினான்.
அதே நேரம் முருகசாமியும் தொட்டியபாளையம் போக தனியாய் வந்து கொண்டு இருந்தார். பரமனையும் மாற நாயக்கரையும் பார்த்தவர் அப்படியே நின்றுவிட்டார்.
“என்ன தனியா ரெண்டுபேரும் உக்காந்திட்டீங்க.”
இருவரும் எழுந்து அவரின் பக்கமாகச் சென்று வணக்கம் செலுத்தினார்கள். பதிலுக்கு அவரும் வணக்கம் சொன்னார்.
“என்ன அண்ணே தனியா கெளம்பிட்டீங்க....” பரமன் கேட்டான்.
“ஆமா பரமா. காலங்கார்த்தால கூலி வேலைக்கு கெளம்புன தொட்டியபாளையத்து சனங்க மத்தியான நேரம் வீடு வந்திருப்பாங்க. போனா எல்லார்த்தையும் பார்த்திடலாம். எனக்கு வாக்களியுங்கன்னு கேட்கலாம். எதோ ஒரு தைரியத்தில நான் பஞ்சாயத்துத் தேர்தலுக்கு போட்டி போடலாம்னு முடிவு பண்ணிட்டேன். எப்படி நடக்குமோ நடக்கட்டும். ஆமா...எனக்கு வாக்களிக்கறதா சொன்னதால உனக்கு எதோ பிரச்சனையாமா. அப்படியெல்லாம் என்னால உனக்கு ஒரு பிரச்சனை வரவேண்டாம் பரமா”
“இல்ல அண்ணே. அது கெடக்கட்டும். நீங்கதான் ஜெயிக்கணும். அதுதே என்னோட விருப்பம்” என்று வாஞ்சையுடன் சொன்னான். அது முருகசாமிக்கு மிகவும் தெம்பாய் இருந்தது. எதையோ சற்று யோசித்த பரமன் பேசினான்.
“மாற நாயக்கரே. நீங்க கடைக்குப் போயிட்டு வாங்க. நான் அண்ணனோட போயிட்டு வாறன்” என்றான்.
அதைக்கேட்ட பெரியவர் “கடைல நான் என்னத்த வாங்கப் போறேன். பொகில குச்சிதான் வாங்கலாம்னு வந்தேன். அது கெடக்குது. எங்க ஊருக்கு ஓட்டுக் கேக்க தம்பி வருது. நான் ஊருக்குள்ள இருக்க வேண்டாமா. நல்ல மனுசனுக்கு ஒதவாம இருந்தா அதுவே ஒரு பாவந்தாண்டா... நானும் கூடவே வாரன்டா...” என்று சொல்லிக் கொண்டே, சாய்த்து வைக்கப்பட்ட வண்டியை எடுத்து உருட்டிக் கொண்டு வந்தார்.
முருகசாமி ஒரு கணம் திகைத்து நின்று விட்டார். தான் இப்போதே வெற்றி பெற்றதாக நினைத்து உள்ளம் நெகிழ்ந்து போனார். பெரியவரின் வார்த்தைகள் பரமனுக்கும் நல்ல நம்பிக்கையைத் தந்தது.
“தலைவரே [!] நீங்க உங்க சைக்கிள்ள போங்க... நாங்க பின்னாடியே வர்றோம்” என்று பெரியவரிடம் இருந்த மிதிவண்டியை வாங்கி கொஞ்ச தூரம் தள்ளிக் கொண்டு ஓடி தாவிக் குதித்து ஏறினான். தள்ளாடும் வயதை மறந்த மாற நாயக்கரும் பின்னாடியே ஓடி எட்டிக் குதித்து பின் இருக்கையில் தொப்பென்று உட்கார்ந்தார்.
"அழுத்தறா பரமா... பார்த்துடுவோம் ஒரு கை" என்றார் பெரியவர். வண்டி பறந்தது.
இப்போது காற்று கொஞ்சம் வேகமாய் வீச ஆரம்பித்தது. அதனால் வேப்பம் பூக்களின் வாசம் காற்றில் கலந்து எல்லாப் பக்கமும் சுழன்று அடித்தது. காற்றின் தாக்கத்தினால் வெயிலின் கடுமையும் சற்றுத் தணிந்து இருந்தது.
[முற்றும்]