கனவு

கனவு...

சாமானியனுக்கு சாதனை மேடை !
சாதிப்பவனுக்கு சோதனை கூடம்!!
சின்னஞ்சிறுசுகளுக்கு சொர்க்க வனம்
இந்த சொப்பனம்...

உந்தப்பட்ட ஆசைகளுக்கு இடையூறு
கூட்டி காட்டும் திரைத்
தொட்டில்...

எப்பொழுதும் இதமளிக்கும்
எப்பொழுதாவது இடமளிக்கும்
இம்சைக் கட்டில்...

அவனுக்காகவோ அவளுக்காகவோ
வரையப்படாத வாழ்த்துகளை
தாங்கி நிற்கும் தற்குறிப்பு
தாள் கீற்றுகள்...

இதயச் சிரங்கின் அத்தனை
இம்சைகளையும் சுகச் சுரண்டல்களுக்காக
சிந்தி வைக்கும் கறுப்புக்
குவியல்கள்...

பலமுறை பிரசவித்தும் ஒரே
குழந்தையை பெற்று போடும்
வித்தியாச வெளிப்பாடு காதற்
கனவுகள்...

விடிய விடிய ஆட்டுவிக்கும்
அஞ்சியவனின் அலறல் சுரக்
கனவுகள்...

காமக் கோடுகளில் கண்தாழ்த்தி
அங்கம் சிலிர்க்கும் அசைவக்
கனவுகள்...

பிரசவ பிரவேசத்திற்கு பந்திபோடும்
மஞ்ச குழைவு மாராப்புக்
கனவுகள்...

அரற்றி அவிந்துபோன எழுபதுகளின்
ஈனசுவர தொண்டைகளுக்கு பாசக்கயிற்றின்
நேசக்கனவுகள்...

கவிக் குழந்தைகளை பிரசவித்து
சிசுக் கொலைபுரியும் கவிஞனுக்கு
சோகக்கனவுகள்...

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (21-Apr-14, 12:47 pm)
Tanglish : kanavu
பார்வை : 148

மேலே