அரசியல் களம்
தேர்தல் நாட்களில்
மதுபானக் கடைகளுக்கு
விடுமுறை விட்டால் என்ன
விடாவிட்டால் என்ன –
சரக்கை அள்ளிச் செல்லும்
தொண்டர்களால்
காலியாகத்தானே கிடக்கிறது
கடை !
************
கட்சிகள்
தங்கள் சாதனைகளை
பட்டியிலிடாமல்
மாற்றுக் கட்சிகளின் குறைகளை
வெளிப்படுத்துவதும் நல்லதுதான் –
எல்லோருடைய வண்டவாளமும்
தண்டவாளம் ஏறுகிறதே !
**************
வாக்குக்காக
பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு
பயமிருக்க நியாயம் இல்லைதான் –
வாக்காளன்
தான் கையேந்தி வாங்கியதை
ஒப்புக் கொண்டு
தானும் கம்பி எண்ண
நினைப்பானா என்ன ?
**********
திட்டங்களை நிறைவேற்ற
இன்னும் ஒரு முறை
வாய்ப்புத் தாருங்கள் என்று
இந்த முறையும்
கெஞ்சுகிறார்கள் -
எதையும் மறக்கும்
நம்மை
புரிந்து கொண்ட
அவர்கள் !
************
வெற்றி பெற்றபின்
ஐந்தாண்டுகளில்
நீங்கள் சாதித்தது என்ன என்று
சம்பந்தப்பட்டவரைக் கேட்டால்,
அவரின் பதில் இதுதானாம் –
“பதவியைக் காப்பாற்றியது”
************
ஆண்டவன்கூட
ஆண்டுக்கு ஒரு முறை
பக்தர்களைச் சந்திக்க
ஊர்வலம் வருகிறான் –
ஐந்தாண்டுக்கு
ஒரு முறைதான்
தலை காட்டுகிறார்
அரசியல்வாதி!
************