கத்தாரிலிருந்து
கரிச காடு கட்டி வச்ச
ஆத்தாளும் அப்பனும்!
கெடா வெட்டி சோறு போட்ட
மாமனும் மச்சானும்!
கல்லு முட்டி ஒடச்சு தந்த
சேக்காளி பயலுவளும்!
கல்யாண கிறுக்க ஏத்தி விட்ட
மாமன் பொண்ணும்!
கட்டாந்தரை கவி பாடும்
மயிலக் காளையும்!
கக்கத்துல வச்சு என்ன காத்து
வந்த அம்மாயி உன் நெனப்பும்
என்னை நித்தம் வந்து நெருடுதே!
ஆடு மாடு மேச்சா அப்பு!
அவமானமா போகுமுன்னா
என்ன ஒட்டகம் மேய்க்க
ஏத்தி விட்டீக???
ஆத்தா! பழைய கஞ்சி தின்னா
எம்புள்ள வெறுத்துடும்னா
காஞ்ச ரொட்டி திங்க
அனுப்பி வச்ச???
கடல் காத்துல கறுத்து
போவேன்னா! இந்த கத்தாரு
வெயிலு பக்கம்
வெரட்டி விட்டீக???
கைநாட்டு பய கணக்கு
பாடம் படிக்கவா
காசு கட்டி
சேர்த்து விட்டீக???
வெள்ளாம பூமியிலே
வேலை செஞ்சா வேர்க்குமுன்னா
ஒன்னுமத்த பூமியலே
மண்ணு மூட்டை
சுமக்க வச்சிக???
திண்ணையிலே படுத்தா ஆத்தா
உம் புள்ள பயப்படுவேன்னா
ஒட்டகத்தோட படுக்கவச்சே???
அஞ்சு தினார் ஆறுநிமிச
போனுக்காக ஆத்தா
நான் நாலு நாள்
தூங்கலையே அது தெரியுமா
உனக்கு???
பஞ்சு பஞ்சாய் தலமுடிக்கு
பக்குவமா அம்மாயி அரச்சு
தந்த சீயக்காய்க்கு வேல
ஏதும் கொடுக்கல!! குளிக்க
தண்ணி கேட்டா??!!
கெட்ட வார்த்த பழமொழி
ஒன்னு கேலியா வந்து
விழுகுது இங்கே! வேர்வைதான்
ஆத்தா இங்கே நான் குளிக்கும்
பன்னீரு!!!
சுட்ட கல்லு கேள்வி பட்ட
ஆத்தா எனக்கு! நட்ட
கல்லு சுடுமின்னு இங்கநான்
கண்டுகிட்டேன்..
ஏதேதோ வேதனையில் நான்
பாட வேட்டு சத்தமா
சாட்டையடி ஒன்னு விழும்
எல்லாம் எங்க கபிளோட
கைங்கர்யம்...
மிச்ச சொச்சம் எல்லாமே
நித்திரையில் சொல்லிகிறேன்
ஓஞ்சு கெடக்கு பாலைவனம்
எழுப்பி விட்டு!!
முடிஞ்சா வந்து சேர்றேன்
நடுஜாமத்துல ...
(வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் சமர்ப்பணம்)