உன் உள்ளங்கையில் உலகம் சுழலும்


இளைஞனே!
வாழ்க்கை
ஒரு புன்னகைத்

திருவிழா!

அதில் நீ ஏன்
கண்ணீர் கவிதை
வாசிக்கிறாய்?

விழிகளில்
வழியும்
வியர்வையை
துடை
புன்னகை
உடுத்து

கவலை இருளில்
கரையும்
உனக்கோர்
கவிதை
தீக்குச்சி
கிழிக்கிறேன்
வா!

மூலையில்
சேமித்த உன்
மூளையை
செலவாக்கு
விஞ்ஞானிபோல்
புத்தி செதுக்கு
மெய்ஞானிபோல்
ஆன்மா துலக்கு
அன்பு ஒன்றுதான்
வாழ்வின் இலக்கு

எதிர்வரும்
தடைகளை
விலக்கு
இனி வெளுக்கும்
உன் கிழக்கு

தோல்வி துளைகளில்
தான் வெற்றிப்
புல்லாங்குழல்
வாசிக்க முடியும்

எனவே தோல்வி கண்டு துவண்டு விடாதே!

விழுவதெல்லாம்
எழுவதற்குத்தான்
நீ புண்படுவதெல்லாம்
பண்படுவதற்குத்தான்.
குப்பை கிளறித்
திரிய கோழி
அல்ல நீ
குன்றின் மேல்
கூடுகட்டும் ராஜாளி!

வாழ்வைப் பிழிந்து
அனுபவம் அருந்து
உழைப்பு ஒன்றுதான்
உன் கண்ணீருக்கு
மருந்து!
தேன்துளி
அல்ல நீ
தித்திப்போடு
முடிந்திட
தீத்துளி!
மழைத்துளி
அல்ல நீ
மண்ணில்
வீழ்ந்ததும்
மறைந்திட
மனிதத் துளி!

நின்றுகேள்
ஒன்று சொல்வேன்

நீ எந்த
சிகரத்தின்
உச்சி தொட்டாலும்
சரி
மனித நேசம்
மறந்துவிடாதே

அச்சம் தவிர்
அறியாமை அகற்று
நம்பிக்கை கொள்
உன் உள்ளங்கைக்குள்
உலகம் சுழலும்.

- இவண் பேனாமுனை பாரதி

எழுதியவர் : இவண் - பேனாமுனை பாரதி (21-Apr-14, 2:45 pm)
சேர்த்தது : penaamunaibharathy
பார்வை : 1030

மேலே