கஸ்டமர் கேர்
கஸ்டமர் கேர்
என் பெயர் சந்திரன் நான் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒரு அதிகாரி என்னுடன் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்யும் பலர் வேலை செய்கின்றனர். வீட்டில் வாங்கும் முக்கிய பொருள்களான வாஷிங் மெஷின்,அடுப்பில் இருந்து வரும் புகையை எடுத்து வெளியே விடும் மெஷின்,குளிர் சாதன பெட்டி, டிஷ் வாஷர் முதலியவற்றை வாங்குபவரிடம் மூன்று வருடங்கள் பராமரிக்க வேண்டிய அக்ரீமெண்ட் எழுதி அதற்கு பணமும் பெற்றபின் அதன் செயல்பாடுகளில் எதாவது குறை வந்தால் அதைப் பழுது பார்க்கவும் தேவைப்பட்டால் அதை மாற்றி புதியதைக் கொடுக்கவும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் கூறி விட்டு அவர்களிடம் எனது பிரிவின் அலுவலக தொலைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு அனுப்புவேன் . எங்களை அழைக்கும் வாடிக்கையாளர் அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டால் தானியங்கி பதில் அளித்து அந்த நபரை பேசவேண்டிய நபருடன் இணைக்கும்.இதைச் செய்ய அது அவர்களிடம் இந்த எண்ணை அழுத்தினால் இதைப் பற்றி கூறலாம் என்று தரம் பிரித்து வழி வகுக்கும் இந்த செயல் சில சமயம் முப்பது நிமிடங்கள் ஒருவரிடமும் பேச முடியாமல் சுற்றி சுற்றி கூப்பிட்டவரை பொறுமை இழக்கச் செய்யும்.இதனால் பலரும் தங்கள் தேவைகளைக் கூற முடியாமல் தொடர்பை துண்டித்து பேசாமல் விட்டுவிடுவார்கள் . எங்கள் அலுவுலகத்திற்கு தொடர்பு கொள்வதை ஒரு பெரிய சிரமாக எண்ணி பலமுறை கூப்பிட்டுத் தொடர்பை துண்டிப்பார்கள்.
என்னிடம் வாங்கிய பொருளைப் பற்றிய நல்லசெய்தியையும் அல்லது அவர்களது சங்கடத்தையும் பகிர்ந்து கொள்வர். அவ்வாறு ஒருவர் என்னைத் தினமும் தொடர்பு கொண்டு என்னிடம் பலமுறை தனது மனதில் உள்ள கஷ்டங்களைக் கூறி வந்தார். அவர் எங்களிடம் நிறைய பொருள்களை வாங்கியதாகவும் அவர்மூலம் அவருடைய நண்பர்களும் எங்களிடம் நிறைய பொருள்கள் வாங்கியதாகவும் கூறி எங்கள் அலுவலக தானியங்கி பேசுவதை மாற்றி அமைத்து தொடர்பு கொள்பவர்களிடம் மனிதர்கள் பேசுவது நன்றாக இருக்கும் அதனால் எல்லோரும் பயன் அடைவார்கள் என்று எனக்கு அறிவுரையும் கொடுக்க நான் அவரைக் கண்டு அவரிடம் தானியங்கியின் அவசியத்தையும் அவருக்கு உள்ள எல்லா கேள்விகளுக்கும் விடையளித்து அவரை சமாதானம் செய்யலாம் என்று அவர் வீட்டிற்கு செல்ல நினைத்து அவர் முகவரியை பெற்று கொண்டேன். அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் சங்கடங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும்.. அது முடியாவிட்டால் இனிமேல் எங்களுக்கு தொல்லை கொடுக்க முடியாதவாறு சிறிது கடுமையாக பேசிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அவரது வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது. எனது , வண்டியை நிறுத்திவிட்டு,
வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது....
அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றேன்.
அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே காலிங் பெல்லை அழுத்தினேன்.
"வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினேன்.
பின் குரல் தொடர்ந்தது...
"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...
for english press 2." என்று சொன்னது...
என்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1ஐ அழுத்தினேன்.
இப்பொழுது.....,
தெரிந்தவர் என்றால் எண் 1ஐ அழுத்தவும்,
தெரியாதவர் என்றால் எண் 2ஐ அழுத்தவும்,
கடன் வாங்க வந்தவர் என்றால்
எண் 3ஐ அழுத்தவும்,
கடன் கொடுக்க வந்தவர் என்றால்
எண் 4ஐ அழுத்தவும்,
பேசியே அறுப்பவர் என்றால்
எண் 5ஐ அழுத்தவும்,
நண்பர் என்றால் எண் 6ஐ அழுத்தவும்,
சொந்தக்காரர் என்றால் எண் 7ஐ அழுத்தவும்,
கூட்டமாய் வந்திருந்தால் எண் 8ஐ அழுத்தவும்,
பால், பேப்பர், தபால் காரர் என்றால் எண் 9ஐ அழுத்தவும், மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்"என்ற அறிவிப்பு வந்தது.
ஒன்றுமே புரியாதவர் போல ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில் வேலை பார்க்கும் நான் எண் 2ஐ அழுத்திட
.
மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...
"வாருங்கள் வாருங்கள்"
"வீட்டின் முதலாளி சில வேலை காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்"என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.....
"சோதனைமேல் சோதனை
போதுமடா சாமி!
வேதனைதான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி!
சோதனைமேல் சோதனை
போதுமடா சாமி!"
என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....
பாடல் முடியும் முன்பே எண் 2ஐ அழுத்திட. உடனே,
"அன்பரே! நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.
"நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்" என்று பாடியது...... நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து, நேரம் ஆக ஆக என் பொறுமையை இழந்து கொண்டிருந்தேன் .பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2ஐ அழுத்த.
இன்று அவரை பார்க்க இயலாது இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார்..., ஆனால் உங்களால் திரும்பிப் போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டுமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும் என அறிவித்தது.
என்னை நானே நொந்துகொண்டு,"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது.
என் கோபத்தை எல்லாம் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி வரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை... வேக வேகமாக அதைத் தள்ளிக்கொண்டு, அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே என் வீடு நோக்கி கிளம்பினேன் .அப்பொழுது எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
என்று
வாடிக்கையாளர்கள் கஷ்டத்தை உணர்ந்தேன் அடுத்த நாள் அலுவலகம் சென்று என்னிடம் வேலை செய்பவர்களை அழைத்து தானியங்கி மெஷினை நிறுத்தி வைத்து தொடர்பு
கொள்பவர்களிடம் பேசிடவும் உடனே பேசமுடியாவிட்டால் அவர்கள் எண்ணை ரெகார்ட் செய்தபின் பேசுவதாக சொல்லி அதை நிறைவேற்றவேண்டும் என்று நான் கூறிட, சில மணி நேரங்களில் என் வாடிக்கையாளர்கள் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தானியங்கி உதவியின் மறுபக்கத்தை அறிந்து கொண்டேன் அதை எனக்கு என் வழியிலேயே உணர்த்திய வாடிக்கையாளருக்கு நன்றி தெரிவித்தேன்.
இந்த கதை
customer care ஐ தொடர்பு கொள்ளும்போதுஎவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம் என்று கூறும் எல்லோருக்கும் சமர்ப்பணம்