பொய்மான்-1

அத்தியாயம் - 1

ஒரே தொழிலைச் சேர்ந்தவர்கள் நாலு பேர் ஓரிடத்தில் கூடினால் தங்கள் தொழிலைப் பற்றிப் பேசுவது இயற்கையேயாகும். நகைக் கடை வியாபாரிகள் நாலு பேர் ஓரிடத்தில் சேர்ந்தால் தங்கம், வெள்ளி விலைகளைப் பற்றிப் பேசுவார்கள். மளிகைக் கடைக்காரர்கள் துவரம் பருப்பு மிளகாய் வற்றல் அல்லது மிளகு விலையைப் பற்றிப் பேசுவார்கள். பத்திரிகையாளர்கள் சிலர் ஓரிடத்தில் கூடினால் அந்த அந்தப் பத்திரிகைகளின் 'சர்க்குலேஷன்' என்ன, யார் அதிகப் பொய் சொல்லுகிறார்கள் என்பது பற்றி விவாதிப்பார்கள்.

ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் ஐந்தாறு பேர் சேர்ந்தால் எதைப்பற்றிப் பேசுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? சில நாளைக்கு முன்னால் ஒரு 'டீ பார்ட்டி'க்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் தாமதித்துச் சென்றபடியால் எங்கே உட்காரலாமென்று அங்குமிங்கும் பார்க்க வேண்டியதாயிற்று. ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் சிலர் சேர்ந்திருந்த மூலையிலே தான் ஓர் இடம் காலியாக இருந்தது. அங்கே சென்று உட்காரும்படி நேர்ந்தது.


அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் தெரியுமா? 'கொலைக் கேஸுகளைப் பற்றித்தான். கொலை வழக்குகள் எந்த எந்த ஜில்லாக்களில் குறைந்திருக்கின்றன எந்த ஜில்லாக்களில் அதிகமாயிருக்கின்றன என்னும் விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். 'மதுவிலக்குச் சட்ட அமுலுக்குப் பிறகு திருநெல்வேலி ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன' என்று ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு அபிப்பிராயப்பட்டார். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. "கோயமுத்தூர் ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் முன்போலவே இருக்கின்றன; குறையவும் இல்லை. அதிகமாகவும் இல்லை" என்றார் ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு. அதையும் யாரும் ஆட்சேபிக்கவில்லை.

இன்னொருவர், "சேலம் ஜில்லாவில் கொலைக் குற்றம் அதிகமாகியிருக்கிறது" என்று சொன்னார். "அப்படியா? அது எப்படி சாத்தியம்?" என்று ஒருவர் கேட்டார். "எப்படி என்றால், அப்படித்தான்! உண்மை அப்படியிருக்கிறது!" என்று முதலில் பேசிய ஹைக்கோர்ட் ஜட்ஜு கூறினார். இதற்கு அப்பீல் ஏது?

பார்ட்டி முடிந்தது. அவரவர்களும் எழுந்துசென்றார்கள். ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் தனித்தனியே பிரிந்ததும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் சேலம் ஜில்லாவில் கொலை அதிகமாயிருக்கிறது என்று ஒரு ஜட்ஜு சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சேலம் ஜில்லாவுக்கு நான் போயிருந்தேன். அங்கே தற்செயலாக ஒரு கதை கேள்விப்பட்டேன். அந்தக் கதையில் முக்கியமான சம்பவம் ஒரு கொலைதான்! குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாத மர்மமான கொலை! அதன் வரலாறு என் மனத்தில் வந்து வட்டமிட்டது. அதை சுற்றிச் செங்கோடக் கவுண்டன், செம்பவளவல்லி, பங்காருசாமி, சுந்தரராஜன், குமாரி பங்கஜா முதலியவர்கள் வட்டமிட்டு வந்தார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் பொய்மான் கரடு, ஒரு பெரிய கரிய பூதம் தன்னுடைய கோரமான பேய் வாயைத் திறந்துகொண்டு நிற்பது போல் நின்று கொண்டேயிருந்தது.

*******

சேலத்திலிருந்து நாமக்கல்லுக்கு ஒரு சிநேகிதரின் மோட்டார் வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். காலை நேரம். வானத்தை நாலாபுறமும் மேகங்கள் மூடியிருந்தன.

"இந்த ஜில்லாவில் மழை பெய்து ஆறு மாதம் ஆயிற்று. இன்றைக்குத்தான் மேகம் மூடியிருக்கிறது. மழை பெய்தால் நல்லது. ஒருவேளை மேகம் இன்றைக்கும் ஏமாற்றிவிட்டுப் போய்விடுமோ, என்னமோ?" என்று மோட்டார் டிரைவர் கூறினான்.

"இந்த ஜில்லாவில் மட்டும் என்ன? தமிழ்நாடு முழுவதிலுந்தான் மழை இல்லை!" என்றேன்.

"மற்ற ஜில்லாக்களில் மழை இல்லாததற்கும் இந்த ஜில்லாவில் மழை இல்லாததற்கும் வித்தியாசம் உண்டு ஸார்! இங்கே கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் கொஞ்சநாள் மழை பெய்யாவிட்டால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது!" என்றான்.

மேகத்துக்கும் மழைக்கும் மனிதனுடைய வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கினேன். கார் 'விர்' என்று போய்க்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் சேலம் ஜில்லாவில் சாதாரணமாகத் தென்படும் காட்சிகள்தான். விஸ்தாரமான சமவெளிப் பிரதேசங்கள், இடையிடையே கரிய நிற மொட்டைப்பாறைகள். சோளமும் பருத்தியும் முக்கியமான பயிர்கள். மழையில்லாமையால் சோளப் பயிர்கள் வாடி வதங்கிக் கொண்டிருந்தன.


பாலைவனத்து ஜீவ பூமிகளைப்போல் அபூர்வமாக அங்கங்கே பசுமையான சிறு தோப்புகள் காணப்படும். அந்தத் தோப்புகளுக்கு மத்தியில் ஒரு கேணி இருக்கிறதென்று ஊகித்தறியலாம். ஒவ்வொரு கேணியைச் சுற்றிலும் ஐந்தாறு தென்னை, ஒரு வேம்பு, இரண்டு வாழை, அப்பால் சிறிது தூரம் பசுமையான பயிர் இவற்றைக் காணலாம். கேணிகளில் கவலை ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள். கேணிகளில் ஒரு சொட்டு ஜலம் இருக்கும் வரையில் விடாமல் சுரண்டி எடுத்து வயலுக்கு இறைத்து விடுவார்கள்!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, குடியானவர்களின் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு, மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு தூற்றல் போடத் தொடங்கியது. சாலையில் சென்றவர்கள் மழைக்குப் பயந்து ஓடவும் இல்லை; ஒதுங்க இடம் தேடவும் இல்லை. வேகமாய் நடந்தவர்கள் கூடச் சிறிது நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து மழையின் இன்பத்தை அநுபவித்தார்கள்.

சற்றுத் தூரத்தில் ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன சிறுவன் ஒருவன் குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.

தூற்றல் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேகங்கள் சற்று விலகிச் சூரியன் எட்டிப் பார்த்தது. காலைச் சூரிய கிரணங்களில் மழைத் துளிகள் முத்துத் துளிகளாக மாறின. வானம் அச்சமயம் முத்து மழை பெய்வதாகவே தோன்றியது.

சாலை ஓரத்துக் கிராமம் ஒன்று வந்தது. ஒரு பக்கத்தில் பத்துப் பன்னிரண்டு குடிசை வீடுகள் இருந்தன. ஒரு குடிசையின் வாசலில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் பெரியவர் ஒருவர் உட்கார்ந்து மழையை அநுபவித்துக் கொண்டிருந்தார். கட்டிலில் விரித்திருந்த ஜமக்காளத்தை கூட அவர் சுருட்டவில்லை.

குடிசைகளை யொட்டியிருந்த சில்லறைக்கடை ஒன்றில் ஒரு வாழைப்பழக் குலையும், ஒரு முறுக்கு மாலையும் தொங்கிக் கொண்டிருந்தன. வீதி நாய் ஒன்று முறுக்கு மாலையை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது. அதைக்கூடக் கவனியாமல் கடைக்காரப் பையன் மழையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

மோட்டார் வண்டி நின்றது. சாலையின் ஒரு பக்கத்தில் குடிசைகள் இருந்தன என்று சென்னேனல்லவா? இன்னொரு பக்கத்தில் ஒரு செங்குத்தான கரிய பாறை. அதற்கு முன்புறம் ஓர் அரசமரமும் வேம்பும் பின்னித் தழுவி வளர்ந்திருந்தன. அரச வேம்பு மரங்களைச் சுற்றிக் கருங்கல் மேடை எடுத்திருந்தது.

டிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான். வேறு ஏதோ காரியமாக இறங்குகிறான் என்று நினைத்தேன்.

"ஸார்! கொஞ்சம் கீழே இறங்குங்கள்! உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன்!" என்றான்.

வேண்டா வெறுப்புடன், "இந்த வம்புக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டோ மே?" என்று அலுத்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினேன்.

"என்ன வேடிக்கை? எங்கே?" என்று கேட்டேன்.

"அதோ பாருங்கள்!" என்று சாலைக்கு ஐம்பது அடி தூரத்தில் செங்குத்தாக உயர்ந்திருந்த கரிய பாறையைக் காட்டினான்.

"என்னத்தைப் பார்க்கிறது? மொட்டைப் பாறையாக நிற்கிறதே! ஒரு மரம் செடி புல் பூண்டுகூடக் காணோமே?" என்றேன்.

"இல்லை, ஸார்! அவசரப்படாமல் நிதானமாய்ப் பாருங்கள்! பாறையில் ஒரு பொந்து மாதிரி இருக்கிறதே அதற்குள் பாருங்கள்! நீங்கள் கதை எழுதுகிறவர் ஆச்சே, அதற்காகத்தான் பார்க்கச் சொல்லுகிறேன். உங்கள் மாதிரி ஆட்கள்தான் இதைப் பார்க்கவேண்டும்!", என்றான்.

இதைக் கேட்டதும் நானும் அவன் சொல்வதில் ஏதோ இருக்கவேண்டும் என்று கவனமாகப் பார்த்தேன். கரிய பாறையின் இருண்ட பொந்துக்குள் ஏதோ ஒன்று தெரிந்தது.

"தெரிகிறதா? மான் தெரிகிறதா?" என்று டிரைவர் கேட்டான்.

ஆம்; அவன் சொன்னபிறகு பார்த்தால் அந்தப் பாறையின் பொந்துக்குள்ளேயிருந்து ஒரு மான் எட்டிப் பார்ப்பது நன்றாய்த் தெரிந்தது. ஆனால் அந்த மான் அசையாமல் நகராமல் நின்ற இடத்திலேயே நின்றது.


"ஆமாம்; அந்தப் பொந்தில் மான் நிற்பது தெரிகிறது. உள் பாறையில் அப்படி மான்போல் செதுக்கி வைத்திருக்கிறதா?" என்று கேட்டேன்.

"அதுதான் இல்லை. அருகில் போய்ப் பொந்துக்குள் பார்த்தால் ஒன்றுமே இல்லை. வெறும் இருட்டுத்தான் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் மட்டும் அந்த மாயமான் தெரிகிறது!" என்றான்.

"நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. அதோ மான் நிற்பது நன்றாகத் தெரிகிறதே! அங்கிருந்து நம் பேரில் அப்படியே தாவிக் குதிக்கத் தயாராக நிற்கிறதே!" என்றேன்.

"அதுதான் ஸார், வேடிக்கை! அதற்காகத்தான் உங்களை இறங்கிப் பார்க்கச் சொன்னேன். உண்மையில் அந்தப் பொந்துக்குள் ஒன்றுமேயில்லை. இங்கிருந்து பார்த்தால் மான் நிற்பது போலத் தெரிகிறது. இன்றைக்கு நேற்றைக்கு இல்லை. வெகுகாலமாக இப்படி இருக்கிறது. அதனாலேதான் இந்தப் பாறைக்குப் 'பொய்மான் கரடு' என்ற பெயரும் வந்திருக்கிறது. உங்களையும் என்னையும் போல் எத்தனை ஆயிரம் பேர் எத்தனை காலமாக இங்கே நின்று அந்தப் பொய் மானைப் பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்களோ?" என்றான் டிரைவர்.

"நான் ஒன்றும் ஏமாறவில்லை! கட்டாயம் அங்கே ஒரு மான் இருக்கிறது!" என்றேன்.

"உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை போல் இருக்கிறது. வாருங்கள், என்னுடன்!" என்றான்.

அவனைப் பின்பற்றித் தட்டுத் தடுமாறி மலைப் பாறையில் ஏறினேன். குகைக்குச் சமீபத்தில் சென்று எட்டிப் பார்த்தேன். அதற்குள் ஒரு மான் - பாறையில் செதுக்கிய மான் - கட்டாயம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பார்த்தேன். ஆனால் ஏமாந்துதான் போனேன். வெறும் இருட்டைத் தவிர அந்தப் பொந்துக்குள் வேறு ஒன்றுமே இல்லை.

"இப்போது நம்புகிறீர்களா?" என்று டிரைவர் கேட்டான்.

கீழே இறங்கி வந்தோம். சாலையில் நின்று மறுபடியும் பார்த்தேன். பொய் மான் சாக்ஷாத்தாக நின்று எட்டிப் பார்த்து என்னைக் கேலி செய்தது.

முண்டும் முரடுமாக நின்ற நெடும் பாறையில் ஏதோ ஒரு பகுதியின் நிழல் அந்தப் பொந்துக்குள் விழுந்து மாயமான் தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்குள்ளே அந்த ஊரிலுள்ள சின்னப் பசங்கள் எல்லோரும் வந்து எங்கள் வண்டியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கிவிட்டு டிரைவர் வண்டிக் கதவைத் திறந்தான். நான் ஏறி உட்கார்ந்ததும் வண்டி நகர்ந்தது.

"ஒருவராவது இந்த நாளில் ராமேசுவரம் காசி போகிறதில்லை. ஆனால் ஊருக்கு ஊர் பிள்ளைகள் வசவசவென்று பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்!" என்றான் டிரைவர்.

என்னுடைய ஞாபகமெல்லாம் அந்தப் பொய்மான் பேரிலேயே இருந்தது. அதைப்பற்றி உள்ளூரில் ஏதாவது கதை வழங்கி வரவேண்டும் என்று நினைத்தேன்.

"அந்தப் பொய்மான் கரடு ரொம்ப விசித்திரமானதுதான். அதைப்பற்றி ஏதாவது பழைய கதை உண்டா?" என்று கேட்டேன்.

"பழைய கதை ஒன்றும் இல்லை. நான் கேள்விப் படவில்லை. ஆனால் புதிய கதை ஒன்று உண்டு; ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்தது. ஐயாவுக்குக் கேட்க இஷ்டம் இருந்தால் சொல்லுகிறேன்" என்றான்.

"இது என்ன வார்த்தை? இஷ்டம் இருந்தால் என்ன வந்தது? நான் தான் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறேனே! நடக்கட்டும்; நடக்கட்டும்! காரை மட்டும் எதிரே வரும் லாரிகளுடன் மோதாமல் ஜாக்கிரதையாக விட்டுக்கொண்டு கதையைச் சொல்; கேட்கலாம்! நாமக்கல் போய்ச் சேருவதற்குள்ளே கதை முடிந்துவிடும் அல்லவா? அப்படியானால் சரி, உடனே ஆரம்பி கதையை!" என்றேன்.

எழுதியவர் : படித்தது (25-Apr-14, 12:32 pm)
சேர்த்தது : இஸ்மாயில்
பார்வை : 74

மேலே