யாரோ ஒரு தோழி

யாரோ ஒருத்தியை
தோழியென்று
சொல்லமுடியுமா?

சரிவிடுங்கள்!!!

தோழியைத்தான்
யாரோ
ஒருத்தியெனச்
சொல்லலாகாது.

பல காலைகளில்
பார்த்திருக்கிறேன்
அம்மாவை இரண்டு மைல்
வண்டியில் அழைத்துச்சென்று
பேருந்து நிறுத்தத்தில்
விட்டுவிட்டு
உடனே
வீடுதிரும்பி
அதே
பேருந்து நிறுத்தத்திற்கு
அதே
வீட்டிலிருந்து
நடைபோடுவாள்
அவள்

என் இப்படிச்
செய்கிறாள்
அந்தத் தோழி?

அவள் முகம்
அமைதியான முகம்
மெல்லிய தேகம்
வழிநெடுக மௌனம்

அவள் பேசிப் பார்த்ததில்லை
அவள் கோபம் பார்த்ததில்லை
அவள் சிரிப்பாளோ பார்த்ததில்லை
அவள் அதிர்வாளோ தெரியவில்லை

அவள் அவளுக்குள்
எப்போதும் ஏதோ ஒன்றை
விசனித்துப் கொள்வதுபோல்
தோன்றுகிறது
எனக்குத்தான் தோன்றுகிறதோ?
இல்லை.......?

என் இப்படிச் செய்கிறாள்?

வேறுயாராவது அந்த
வாகனத்தை உபயோகிப்பார்களோ ?

வாகன நிறுத்தங்களில்
அவளுக்கு நம்பிக்கையில்லையோ?

டோக்கன் செலவு கூடுதலோ?
அந்த காசும் வீட்டிற்குப் பயன்படுமோ?

அந்த நாட்களின் போது சிரமப்படுவாளோ?
அவள் சந்தோசமாகத்தான் செய்கிறாளோ?

அவள் நிலையில் என்ன நினைப்பாள்
தினமும் நடந்துகொண்டே?

சில மாலைகளில்
கவனித்திருக்கிறேன்
வாகனத்தை அனைத்துத்
தள்ளிக்கொண்டே
அவளும் அவள் அம்மாவும்
கதைத்துக்கொண்டே
செல்வதை
அம்மா சிரிக்க
அவள் கவனத்துடன்
மெல்லிய மௌனத்தோடே
மெல்ல நகர்ந்திருக்கிறாள்

அம்மா அவளுக்கு நன்றி
சொல்லி பாராட்டியிருப்பாளோ?

பேசியாவது மகளின்
மனவோட்டம் தேடுவாளோ?

அவள் முன்னமே
அறிந்திருக்கக்கூடுமோ?

அப்பொழுதும் அவள்
அம்மாதான் பேசிக்கொண்டிருப்பாள்

ஏழ்மை பிழையில்லை
என்றபோதும்
இழப்புண்டு என்றே
தோன்றியதெனக்கு!

பெரும்பாலும்
அதிகம் மௌனித்திருப்பவர்கள்
அவரவர் இளவயதில்
பரம ஏழைகளாக
இருந்திருக்கவேண்டும்
அல்லது
பெரும் பணக்காரர்களாக
இருந்திருக்கவேண்டும்.

தேவைக்கே
இல்லாதவனுக்கும்
தேவையே
இல்லாதவனுக்கும்
தேவை மொழி
மௌனம்.

எது எப்படியோ?

அவள் பேச்சு
விசனங்களைக் கலைக்கட்டும்

அவள் கோபம்
வறுமையை ஒழிக்கட்டும்

அவள் சிரிப்பு
நம்பிக்கையை வளர்க்கட்டும்

அவள்
அவளோடு நன்றாகட்டும்.

எழுதியவர் : சர்நா (29-Apr-14, 1:49 pm)
Tanglish : yaro oru thozhi
பார்வை : 226

மேலே