என் தந்தையே
அடிக்கடி இருமுகின்ற எண்ணச்
சிதறல்களிலே சிந்துகிறது சந்தோசம்
சளிக் கீற்றுக்களாய் துப்புகிறேன்
ஒரு சில தூர்ந்துபோன நினைவுகளை
அப்பாவித் தனத்துடன்
அண்ணார்ந்து பார்த்த முதல் அழகோவியம்
அது தான் தந்தை முகம்
இதுவரை என்னுள் மாறாத புது யுகம்
என் தந்தையின் சுவாசப்
புற்களில் மேய்ந்த மந்தை நான்
அவரின் காந்தப் பார்வையில்
கவரப்பட்ட மனித ஆணி நான்
இப் புவியினில் துருப்பிடியா
வண்ணம் என்னை புதைத்துவிட்டு
மறு உலகம் சென்ற மதிப்புக்குரிய மாமனிதர் அவர்
கறுந் தாடிக்குள் இழையோடிப் போன
வெண் முதுமைக் கோடுகள்
நேரம் தவறாத தொழுகையால்
காய்ச்சிப்போன நெற்றி
பல வருடங்கள் கத்தியுடன்
சங்கமித்த மரத்துப்போன விரல்கள்
வெட்டப்பட்ட மீன்களின்
ஞாபகார்த்தமாய் ஒரு சில ரத்தத் துளிகள்
தூங்கும் முன்னே சாப்பிட்டாயா
என்ற பாசக் கேள்வி
தொழுகைக்கு போகாமல்
நான் ஒழிந்து செல்லும் போதெல்லாம்
பள்ளிக்குப் போனாயா?
என்ற எச்சரிக்கை கேள்விகள்
தந்தையே! தெவிட்டாத
நினைவுகள் நீங்கள் என்றும் எங்களுக்கு.
குர்ஆன் ஓதித் தரும்
போதெல்லாம் மருதாணிக் கம்புடனே
ஒவ்வொரு வரியாய் பாடம் தர
பதறிடுவேன் நானும் பயத்தினிலே
இஸாக்குப் பிறகு வரும்போது
மகனுக்காய் இறைச்சி றொட்டி
பேப்பரிலே சுத்தி தலைமட்டில்
காத்திருக்கும் ஒரு ஜூசு முடித்ததற்கு.
ஒவ்வொரு நிமிடமும்
இறைஞ்சுகிறேன் இறைவனிடம்
என் தந்தையின் ஈமானியச்
சாற்றினிலே என்னையும் புரட்டியெடுக்க
ஒவ்வொரு நாளும்
உங்களுக்காய் பிரார்த்தித்தவனாய்.
என் கண்ணீரின் ஒரு துளி
தந்தையே உங்களுக்காய் உதிரட்டும்