முதியோர் இல்லம்

உழைத்து களைத்து
ஓய்ந்து முடங்கிய தேகங்கள்
வலிகள் நிரம்ப கதறுகிறது
முதியோர் இல்லத்தில்
கைப்பிடி சோற்றுக்கு கையேந்தும்
சடமாய் .....

வளர்த்த
குஞ்சுகளின் எலும்புகள்
எட்டி உதைக்கும்படி வலுவானதால்
விரட்டப்பட்டது
வீட்டிலிருந்த தெய்வங்கள்
வீதிக்கு பரதேசியாய் .......

சுமந்த பாவத்துக்காய்
கொடுக்கப்பட்ட சிறையிருப்பை
உடைத்தெறிய வழியின்றி
மகிழ்ந்தபடியே தேம்பி நனைகிறது
சுமைதாங்கியாகவே இருக்கப்பட்டு பழகிப்போன வாழ்க்கை .....

பிள்ளைகளின்
கறிகள் உயிரோடிருந்தும்
வளர்த்தெடுத்த உயிர்கள்
அனாதையாய் வதைப்பட்டு கிழிப்படும்போது
அனல்திரண்ட நெருப்பாய் வெடித்து
தெறிக்கிறது சமூகக்கோபம்...

மொத்த தெம்பையும்
உறிஞ்சு செரித்து
வேண்டாத குப்பையாய்
வீசியெரிந்தப்பின்
விதியில் மிதிபட்டது விரையமானது தியாகம்
பூமிக்கு பாரமென ! .....

இரத்தம் சுண்டி
நாடிதளர்ந்த கிழட்டு பிண்டமாய்
நீதிதேட தெம்பற்று
புதைந்து தொலைகிறது முதியோர் இல்லத்தில்
பிள்ளைகளுக்காய் முகவரிதந்த
பொக்கிசங்கள் .....

நடக்க வலுவற்று
முடங்கி சுருண்ட நேரத்தில்
திட்டலையும் துப்பலையும்
கிரகித்தப்படியே
வெந்து கொப்பளிக்கிறது வயதான மனம்
வாழ்வதைவிட
உயிரை முடக்கிகொள்வது பாக்கியமென்று ......

எரிகிறது
இவர்களின் அடிவயிறு
கைப்பிடி சோறு கிட்டியப்பின்
அடங்கும் பசிக்காய் மட்டுமல்ல
தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகளை
தம் பிள்ளையாய் வளர்த்த
பாவத்துக்காய் .....

முதியோர் இல்லத்தை பார்க்கும்போதெல்லாம்
ஞாபகம் கசிகிறது
தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் பற்றியே !

எழுதியவர் : நேதாஜி.அ (1-May-14, 5:33 pm)
Tanglish : muthiyor ellam
பார்வை : 239

மேலே