பிடிபடாததின் ரகசியம்

திருவள்ளுவர் பேருந்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். இருக்கையில் அமர்ந்தபடியே உறங்குவது எனக்கு கடினமாயிருந்தது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தபடியால் நடைப்பதையில் ஒரு விரிப்பை விரித்து என்னை அம்மா படுக்கச் சொன்னாள். நான் ஒருக்களித்து படுத்திருந்தேன். கீழே வேகமாய் சாலை ஓடிக் கொண்டிருப்பது போல தோன்றியதாலும், வண்டியின் சப்தம் காதுகு வெகு சமீபமாய் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கேட்டதாலும் என்னால் உறங்க முடியவில்லை. உறங்கினேனா இல்லையா என்று யோசிக்கும் படியான ஒரு உறக்கம் அது. உறங்கிய மாதிரியும் தெரிந்தது உறங்காத மாதிரியும் தெரிந்தது.

உண்மை என்று எதைச் சொல்கிறோம் நாம்? எதை நாம் நம்புகிறோமோ அதைத்தானே..? நான் சென்னை வந்து இறங்கியது உண்மையாய் இருக்குமா என்ற பயம் மெலிதாய் என்னை தொற்றிக் கொண்டதற்கு காரணம் உண்டு. காரணம் அன்று இரவு நான் பேருந்திற்குள் நடைபாதையில் படுத்திருந்த போது அதிலிருந்த ஒரு ஓட்டையின் வழியாக ஒரு காட்டிற்குள் விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் உருண்டு சாலை ஓரமாக இருந்த புதருக்குள் விழுந்து, தூக்கம் தெளியாமலேயே இன்னமும் நான் உறங்கிக் கொண்டே இருக்கிறேன். அந்த உறக்கத்தில் வந்த கனவுதான் என்னுடைய தற்போதைய வாழ்க்கை. கனவிலேயே சென்னை வந்து கனவிலேயே விடுமுறை கழிந்து மீண்டும் ஊர் திரும்பி, பள்ளி, கல்லூரி, காதல், கவிதை வேலை, திருமணம், பிள்ளை என்று என்னைச் சுற்றி எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆனால் இது எல்லாமே கனவுதான். நான் இன்னமும் பேருந்திலிருந்து விழுந்த புதருக்குள் உறங்கிக் கொண்டே இருக்கிறேன்.

ஏன் இப்படி இருக்கக் கூடாது....? என்று இப்போது நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது இதைத் தட்டச்சு செய்து கொண்டிருப்பது என் கனவில், இதை நீங்கள் வாசிப்பதும் என் கனவில் என்று வைத்துக் கொள்ளுங்களேன். கனவு முடிந்த பின்பு ஒரு வேளை நான் எட்டு வயது பாலகனாய் அந்த புதருக்குள் இருந்து எழுந்து ஓ....என்று அழுதபடியே என் பெற்றோரைத் தேடவும் கூடும். இப்படி எல்லாம் இருக்க சாத்தியமில்லை என்று கூற முடியாததுதானே...? கனவில் இது கனவா என்று கேள்வி கேட்டு இது கனவில்லை என்று கூறிக் கொண்டால் அது கனவு இல்லாமல் போய்விடுமா என்ன?

எனக்கு அந்த சென்னைப் பயணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாய் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இப்படி தோன்றிக் கொண்டே இருக்கும். அந்தக் கனவில்தான் உண்கிறேன், பேசுகிறேன், சிரிக்கிறேன், அழுகிறேன், உறங்குகிறேன், கனவு காண்கிறேன். கனவிற்குள் கனவு அந்தக் கனவிலும் சில கனவுகள் வேறு வித கனவுகளைக் காண்கின்றன. இது ஒரு முடிவிலி போலவே இருக்கிறது எனக்கு. இது புரிந்தும் புரியாமலும் நீங்கள் வாசிப்பது போலவே நான் நித்தமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இது சர்ரியலிசம் என்னும் மிகை எதார்த்தவாதமாகக் கூட இருக்கலாம். இல்லாததை இருப்பது போன்று சொல்லி அது இல்லை என்று உணர முயலும் போது அது இருப்பது போல உங்களுக்கும் எனக்கும் தோன்றலாம். யாருமே பார்த்திராத விசயங்களைப் படைப்பதுதான் சர்ரியாலிசம். சால்வடோர் டாலி, மேக்ஸ் எர்னஸ்ட், ரெனே மக்ரிதே போன்றவர்கள் படைத்த ஓவியங்கள் எல்லாம் சர்ரியலிசத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். கனவில் விரியும் கற்பனையோடு ஒரு புதிர்தன்மையை சேர்த்து நிஜத்தில் அதைப்படைத்துக் காட்டுவதுதான் சர்ரியலிசம் அல்லது மிகை எதார்த்தவாதம் என்பது. உங்கள் முன்பு அந்த படைப்பு இருக்கும் ஆனால் அது போல நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. அதற்காக அப்படி ஒன்று இருக்கவே இருக்காது என்று நீங்களும் நானும் மறுக்க முடியாது. அது இருக்கலாம். நாம் பார்த்திருக்கவில்லை அவ்வளவுதான்.

எனக்குத் தோன்றுவது எந்த வகையில் சர்ரியாலிசத்தோடு ஒத்துப் போகும் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும் இந்த வாழ்க்கை முழுதுமே நான் கண்டு கொண்டிருக்கும் கனவாய்த்தான் எனக்கு அழுத்தம் திருத்தமாய் தோன்றுகிறது. இங்கே இறக்கும் போது ஒருவேளை கனவு முடிந்து நான் புரண்டு எழுவேனோ என்னவோ...? யார் கண்டது..? எல்லாவிதமான அமானுஷ்யத்தன்மையும் கொண்ட காலத்தின் நகர்வுகளில் எது இல்லை என்று மறுக்க முடியும். எதுவும் நடக்கலாம். இந்த உலகமே யாரோ எங்கோ காணும் ஒரு பெருங்கனவாகவும் கூட இருக்கலாம்...!

நேற்று மதியம் உறங்கும் போது எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் சிறுவயதில் குடி இருந்த அந்த வாடகை வீட்டிற்குள் கொல்லைப் புறம் வழியாக நுழைகிறேன். அது ஒரு இருளத் தொடங்கும் மாலைப் பொழுதாக இருக்கிறது. வீட்டிற்குள் சிறிது கூட விளக்கு வெளிச்சம் கிடையாது. கவலைகள் இல்லாது துள்ளித் திரிந்த அந்த வீட்டிற்குள் ஒரு சிறுவனாய்த்தான் நான் நுழைகிறேன் என்றாலும் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கும் எல்லா அனுபவங்களும் எனக்குள் இருக்கிறது. பெற்றது இழந்தது இரண்டும் சமவிகிதத்தில் மூளைக்குள் இடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறது. பெற்றதைப் பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு இல்லை என்றாலும் இழந்தது எல்லாம் கிடைத்துவிடக் கூடுமே என்ற ஒரு புதிரான ஆவல் எனக்குள் இருக்கிறது. வீடு சப்தம் ஏதுமின்றி பாழடைந்து கிடப்பது போல இருக்கிறது.

வீட்டின் வாசல் கதவு ஒருக்களித்து திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிறு இடைவெளியில் மெலிதாய் வெளிச்சம் வீட்டிற்குள் வந்து விழுகிறது. வாசலில் என் 10 வயதில் இருந்த எதிர் வீட்டுக்காரர்களும் பக்கத்து வீட்டுக்காரர்களும் பேசி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என் வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு கிணறு இருக்கிறது. அதில் எப்போதும் போல எல்லா வீட்டுக்காரர்களும் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் சப்தம் மட்டும் கேட்கிறது. தண்ணீர் இறைக்கும் போது சகடை ஒரு போல சத்தம் கொடுக்கும். அடிக்கடி சைக்கிள் துடைக்கும் போது எண்ணை போடும் டப்பாவிலிருந்து நான் தான் அதற்கு எண்ணை போடுவேன். சகடை சத்தம் கிரீச்...கிரீச் என்று கேட்கிறது. நான் இல்லாவிட்டால் யாருமே எண்ணை போட மாட்டீர்களா இந்த காலனியில் என்று ஒரு கோபம் வேறு என்னுள் இருந்து எட்டிப்பார்க்கிறது. எல்லா வீட்டிலும் ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால் என் வீட்டில் மட்டும் யாருமில்லை. எனக்கு அழுகையாய் வருகிறது. அந்த சிறிய ஹாலில் உட்கார்ந்து நாங்கள் அனைவரும் உணவருந்தி இருக்கிறோம். அங்கேயேதான் பாய் விரித்து உறங்கவும் செய்வோம்.அந்த ஹாலின் வலது மூலையில் சாலிடர் சிலைடிங் டோர் டிவி தூசு படிந்து கிடக்கிறது.

நான் எட்டு மாதக் குழந்தையா இருந்தேனாம் அந்த வீட்டிற்கு நாங்கள் குடி வந்த போது. காலி செய்து போனது என்னுஐய 21வது வயதில் என்றாலும் இப்போது காலி செய்து போனதை வேண்டுமென்றே மறந்து கொள்கிறேன். அலமாரி, ஜன்னல், ஜன்னல் கம்பிகள், நிலைப்படி, அடுப்படி, இருக்கும் ஒரே ஒரு அறையில் இருக்கும் சாமிப் படங்கள், அப்பா, அம்மா மட்டுமே திறக்கும் பச்சைக் கலர் காட்ரேஜ் பீரோ, சுவற்றில் ஓடும் பள்ளிகள், மழை வந்தால் ஒழுகும் மேலே இருக்கும் ஒடுகள், பனை உத்திரம், அந்த உத்திரத்தில் ஆங்கங்கே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒட்டடைகள், அலமாரியில் கலைந்து கிடக்கும் என் பள்ளிப் புத்தகங்கள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அக்காவின் புத்தகங்கள். என் புத்தகத்துக்கு நடு நடுவே இருக்கும் சினிமாப் பாட்டுப் புத்தகங்கள்..... என்னுடைய பள்ளிக்கூடப் பை, அக்காவின் வயர் கூடை, பானாசோனிக் டேப்ரிக்கார்டர், அது இருக்கும் செல்ஃபில் இருக்கும் சோனி 90 கேசட்டுகள், கேசட் டப்பாக்கள், இன்னொரு அமலரியில் இருக்கும் அக்காவின் கேசவர்த்தினி தைலம்...., தேங்காய் எண்ணை தூக்கு, மேல் செல்ஃபில் இருக்கும் அமிர்தாஞ்சனம் டப்பா, மூட்டு வலிக்குத் தேய்க்கும் தென்ன மரக்கரகூடி எண்ணை, ஏதேதோ மாத்திரைகள், ரேஷன் கார்டு, கரண்ட் பில் அட்டை, இன்ன பிற ரசீதுகள்....

எல்லாமே இருக்கிறது ஆனால் வீட்டில் யாருமில்லை. பயந்து கொண்டே ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து ஹாலில் மஞ்சள் குண்டு பல்பைத் மாற்றிவிட்டு நாங்கள் போட்டிருந்த ட்யூப்லைட்டைத் தட்டுகிறேன்......ட்யூப் லைட் எரியவில்லை. அப்பா எங்கே, அம்மா எங்கே....கேள்விகள் துளைக்க அம்ம்ம்மமா என்று அழுதபடியே என் உடையாத குரலில் சப்தமெழுப்புகையில் பட்டென்று விழிப்பு வந்து விட்டது.

ஹாலில் சோபாவில் நான் கழுத்து வரை போர்த்தியபடி படுத்திருக்கிறேன். கனவு கலைந்தது போல எனக்குத் தோன்றவில்லை....வாழ்க்கை முறிந்தது போலத் தோன்றியது. நெஞ்சு பட பட என்று அடித்துக் கொண்டிருந்தது. எழுந்து ஏசியை அமர்த்தினேன். குளிர் நிற்கவில்லை உடம்பு தூக்கி தூக்கிப் போட்டபோது அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தேன்....அம்மா....! அழைப்பைத் துண்டித்து விட்டு மறுபடி அம்மாவை அழைத்தேன்....அம்மாவின் குரலைக் கேட்டதும் வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் அம்மா...சிறுவயதில் வாடகை வீட்டில் இருந்த போது இருந்த மகிழ்ச்சி சொந்த வீட்டில் இல்லை என்பது போல பேசிக் கொண்டிருந்தாள்....நான் கனவில் கண்டதை எல்லாம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தவள் எப்போது நான் ஊருக்கு வருகிறேன் டிக்கட் எடுத்துவிட்டாயா என்று கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டார்.

என்ன தொடர்பு இது? எனக்கு விசித்திரமாய் தோன்றியது. வெகு நேரம் எதுவும் பேசாமல் கனவையும் அம்மாவின் அழைப்பையும் யோசித்தபடி அமர்ந்திருந்தேன். வாழ்க்கை என்னை பணி நிமித்தமாய் எவ்வளவு தூரம் அழைத்து வந்து விட்டது என்று யோசித்தேன். எனக்கு கனவு சுகமாயிருந்தது. கனவுகள் இன்னும் நிறைய நிறைய வேண்டும் என்று தோன்றியது. வண்ணத்துப் பூச்சிகளுக்கு துதிக்கை வைத்து தந்தத்தோடு பார்க்கும் கனவு.....சிறுபிராயத்தில் புல்வெளிக்குள் வண்ண வண்ண வண்டுகள் தேடியதைப் போல புற்களுக்கு இடையே யானைகளைத் தேடும் கனவு..., நட்சத்திரங்கள் எல்லாம் நீரில் நீந்திக் கொண்டிருக்க ஆகாயத்தில் வண்ணத்துப் பூச்சிகள் நட்சத்திரங்களைப் போல பலவண்ணங்களிலும் படபடத்து ஒட்டிக் கொண்டிருக்கும் கனவு.....

நிறைய நிறைய நிகழவேண்டும் கனவுகள். அதை ததும்ப ததும்ப நிரப்பி வைக்கவேண்டும் காதிங்களில். யாரும் காணாத காட்சிகளைக் கனவிலிருந்து கைப்பிடித்து அழைத்து வந்து இதோ பாருங்கள் என்று என் சமூகத்தாரிடம் காட்டும் பேராசை ஒன்று உண்டு எனக்கு.....ஜீசஸ் கிரைஸ்ட்டைப் போல...

சிலுவையில் அறைந்து கொள்ளுங்கள்
கவலையில்லை என்றுதானே தேவன்
லில்லி மலர்களின் அழகிற்குள் மயங்கிக் கிடந்தான்...
அவன் படைக்க விரும்பியதைப் போன்ற ஒன்றை
அதுவரையில் அறிந்திராததால்தானே....
விசாலமான பார்வையற்றவர்கள் தங்கள் குருட்டு உலகத்திற்குள்
வெளிச்சத்தை அனுமதிக்க மறுத்தார்கள்...!
சாக்ரடீஸுக்கு கொடுத்தது போல,
ஓஷோவிற்கு செலீனியம் கொடுத்து கொன்றது போல..
ஏதாவது ஒன்றை உலகம் செய்து கொண்டுதானிருக்கும்...
அதற்காக படைப்பவன் நிறுத்தமுடியுமா அவன் கற்பனைக் குதிரையை...?
கனவிலிருந்து ஒரு இழை
கற்பனையிலிருந்து ஒரு இழை
புதிர்த்தன்மையிலிருந்து ஒரு இழை
அமானுஷ்யத்திலிருந்து ஒரு இழை...
தத்துவத்திலிருந்து ஒரு இழை....
கொஞ்சம் காமம்,
நிறைய காதல் என்று
அவன் பின்னிக் கொண்டேதான் இருக்கவேண்டும் வலையை...

முடிந்து விடுவதும், தொடங்கி நிகழ்வதும் எப்படி, எப்போது என்று தெரிந்து விட்டால் அந்த படைப்பு என்ன படைப்பு? அதைப் படைப்பவன் என்ன படைப்பாளி...?!




தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா (10-May-14, 6:52 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 288

சிறந்த கட்டுரைகள்

மேலே