வாருங்கள் இளைஞர்களே - கே-எஸ்-கலை
வாருங்கள் இளைஞர்களே..!
நீண்ட நாட்களாக மனத்துள் தேங்கி கிடந்த ஒரு எண்ணத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சியை தொடங்குகிறேன் !
இந்த முயற்சியில் சமகால கவிஞர்களின் கவிதைகளும் அவை பேசும் கருத்துகளும் பற்றி கொஞ்சம் விரிவாக பேசுவதில் என் சிந்தையை புகுத்துகிறேன்...
அந்தவகையில் தளத்தில் நுழையும் ஒரு புது படைப்பாளி எழுதிய புதிய படைப்பொன்றை எடுத்துக் கொண்டால் எனக்கும் இலகுவாக இருக்கும் என்பதால் "வாருங்கள் இளைஞர்களே" என்ற தலைப்பில் ஒரு துடிப்பான, சமூக ஆர்வமிக்க இளைஞரின் பதிவை எடுத்துக் கொள்கிறேன் !
======================
வாருங்கள் இளைஞர்களே....
அருமையான தலைப்பு !
முதல் படைப்பிலேயே ஏதோ ஒரு அறைகூவலுடன் வருகிறார் கவிஞர்....ஏதோ செய்தி சொல்ல போகிறார் என்பதை அறிந்துக் கொண்ட வாசகனுக்கு...அது என்ன செய்தியாக இருக்கும் ? என்ற ஆர்வத்தை ஊட்டுகிறார் தலைப்பிலேயே....
தலைப்பில் வாசகனுக்கு ஆர்வமூட்டும் படைப்பாளிகள் ஒரு படைப்பை எழுதியதன் முக்கிய இலக்கை அடைந்துவிடுகிறார்கள் !
விடா மழையாய் படைப்புகள் கொட்டிக் கொண்டிருக்கும் இணைய தளங்களில், ஒரு படைப்பை வாசகன் திறப்பது என்பது வரமாகவே இருக்கிறது என்றால் அது தப்பாகாது !
"வாருங்கள் இளைஞர்களே" என்ற தலைப்பும் அப்படி தான்...
என்னதான் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தாலும், யாரோ ஒருவர் எங்களை அழைக்கிறார் என்றால் திரும்பிப் பார்க்காமல் ஓடவா போகிறோம்?
சரி..அழைத்தார்..நின்றோம் இனி என்ன சொல்லப் போகிறார் என்று அவசரப் படுவது சாதாரணமே !
==எதையேனும் கவிதையாய்
==எழுதிவிடவேண்டும் என்று
==எழுதுகோலும் தாளுமாய் நான்..
==எழுதப்போவது எதைப்பற்றி
==என்று யோசித்தபோது....
"அட நம்ம சாதிக்கார பையனாச்சே..." என்று சில திரைப் படங்களில் பேசுவதைக் கேட்டிருப்போம் அல்லவா ? அந்த மாதிரியான ஒரு உணர்வை தருகிறார் ஆரம்ப வரிகளிலேயே...
நாங்கள் எல்லோரும் கவிதை எழுதும் சாதியாச்சே...அப்போ யாராவது கவிதை பற்றி பேசினாலே உஷார் ஆகிவிடுவோமே? இந்த மந்திரத்தை ஏற்கனவே அறிந்து வைத்துக் கொண்டு தான் இந்த கவிஞர் வந்திருப்பார் போலும்...
"எழுதுகோலும் தாளும் இருக்குது என்னடா எழுதுறது" என்று ஒரு அங்கலாய்ப்பு..இது எல்லோருக்கும் பொதுவாக வரும் எண்ணம் தான்..
அட..எழுதுறதுக்கா பஞ்சம்..எவ்வளவோ இருக்கே....
என்று நாங்கள் நினைக்கும் முன்பே....எதை எழுத போகிறேன் என்று சொல்லாமல், எதை எழுத மாட்டேன் என்று சொல்ல தொடங்கி விட்டார் கவிஞர்...
===ஊழலுக்கு எதிராக கோடிகளின் செலவில்
===நடைபெறும் உண்ணாவிரதங்கள் குறித்து
===எழுதவும் எனக்கு மனமில்லை..!
"அட....எடுத்த எடுப்பிலேயே ஊழல் பத்தி எழுதுராண்டி...இவன் கொஞ்சம் விவரமான ஆளாதான் இருப்பாம் போலருக்கு" என்று கொஞ்சம் வாசிக்க வந்தவனை உசுப்பேற்றும் வித்தையை செய்கிறார்...
அதுவும் நேரடி தாக்குதல்...நெற்றிப் பொட்டில் சுத்தியலடி போல...
ஊழலுக்கு எதிராக கோடிக் கணக்கு செலவு செய்து உண்ணாவிரதமா? எல்லாமே முரண்பாடாக இருக்கிறதே?
எழுத மாட்டேன் என்று சொல்வதால் தானே வாசகன் யோசிக்கிறான்...ஏன் எழுத மாட்டேன் என்று இவன் சொல்லுகிறான் என்று....இது ஒரு கவிதை யுக்தி...வாசகனைச் சிக்க வைக்கப் போடும் தூண்டில் இது...
அந்த வரிகளை மீள வாசியுங்கள்....
ஊழலுக்கு எதிராக பாரிய அளவில் பணம் செலவழித்து போராட்டம் செய்கிறார்கள்..அதுவே ஒரு தவறு என்பதை உணர்த்துகிறார் முதலில்...
பிறகு அதைப் பற்றி எழுத மாட்டேன் என்று சொல்லுவதன் மூலம்..இதெல்லாம் வெறும் போலி நாடகங்கள்..இவற்றைப் பற்றி நாம் கண்டுக் கொள்ளக் கூடாது, இவை ஊரை ஏமாற்றும் வித்தைகள் அதனால் நாங்கள் இவரை முற்றாக புறக்கணிக்க வேண்டும்....என்று சொற்களை விதையாக்கி வாசகன் நெஞ்சில் விதைக்கிறார்....
இந்த நுணுக்கம் அற்புதமானது...இது கவிதையில் ஒரு ஆயுதம்..ஆனால் இந்த மாதிரியான ஆயுதங்கள் சில் வாசகர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை...கைகளுக்கு அகப்படுவதுமில்லை!
கவிஞன் எழுத மாட்டேன் என்று சொல்லிவிட்டான் அதனால் நான் அதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை என்று அடுத்த வரிக்கு அல்லது...அடுத்த கவிதைக்கு தாவி விடுவதும் நடக்கத் தான் செய்கிறது !
அதே நடையில் தொடருகிறார் கவிஞர்....
கறுப்பு பணம், விலைவாசி, அரசியல் சுயநலம், ஓட்டைச் சட்டங்கள் எதைப் பற்றியும் எழுத தனக்கு விருப்பம் இல்லை என்று...எல்லா இடத்திலும் தான் ஏன் எழுத விரும்பவில்லை என்று சொல்லுவதாக ஒரு உத்தியை பயன்படுத்தி, குறித்த அட்டூழியங்கள் குறித்து விளக்கம் சொல்லிப் போகும் விதம் தனிச்சிறப்பு !
எழுதுகோல் இருக்கு தாள் இருக்கு எதையாவது எழுதணும்னு சொல்லி வந்துட்டு என்னடா எதுவுமே எழுத மாட்டேன்னு அடம் பிடிக்கிது தம்பி....என்று யோசித்துக் கொண்டே வரும் போது
"ஆனால்..."
என்று ஒரு சொல்லைக் காணக் கூடியதாக இருக்கிறது....
"ஆஹா...தம்பி இப்ப சொல்லப் போறாரு எத எழுதப் போறேன்னு....சரி பார்க்கலாம் என்னத்த எழுத போறாருன்னு...."
என்ற திருப்புமுனை அமையப் பெற கவிதை நீளுகிறது..அங்கிருந்து புதிய கோணத்தில்.....
நிற்க....
மேலே எதையெல்லாம் எழுத மாட்டேன் என்று கவிஞர் சொல்லி இருக்கிறார்..இவை தானே இன்றைய உலகின் அடிப்படை பிரச்சினைகள்..? இவற்றை எழுத மாட்டேன் என்று சொன்ன ஒரு கவிஞன் இதைவிட பெரிதாக எதை எழுதுவானாக இருக்கும் ?
ஒருவேளை இதெல்லாம் எனக்கு பிரச்சினையே இல்லை....
"என் பப்பி செல்லம் ஐ லவ் யூ னு ஒத்த வார்த்த சொல்லுடி ..நான் எட்டு ஜென்மமும் உன் காலடியிலேயே கிடக்கேன்...உன்னப் பத்தியே எழுதுறேன்"
என்று கவிதை அலங்கோல பல்டி அடித்து விடுமோ என்று கூட யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் ! புதியன புகுத்தி புரட்சிகள் செய்வோம் என்ற அடிப்படையில் இப்படியான அமில வீச்சு நகைச்சுவைகளும் படைப்புகளில் நடந்துக் கொண்டு தானே இருக்கிறது....
சரி...
கவிதைக்கு "வாருங்கள் இளைஞர்களே..."
ஆனால் என்ற சொல்லுக்குப் பிறகு கவிஞர் சொல்லுகிறார் இப்படி....
==நிஜவாழ்வின் கொடூரங்கள்
==சுடும் மனதிலிருந்து என்னை
==தனிமைப் படுத்திக்கொள்ள முடியாதபோது
==எனது எழுதுகோலும் போர்வாளாய்
==பரிணமிக்க வேண்டிய அவசியம் புரிகிறது.!
மிக ஆழமாக குமுறுகிறார்..நிஜ வாழ்வின் கொடூரங்கள் என்ற வார்த்தையின் மூலம் தமது இன்னல்களின் விஸ்வரூபத்தை கண்முன் கொண்டு வருகிறார்...
பொதுவாக் கவிதைகளை வாசிக்கும் போது எழுதியவர் சொல்லாமல் சொல்லும் விடயங்களை நாம் காட்சிப் படுத்தி காண வேண்டும்...அந்த காட்சி தான் நமக்கு முக்கால்வாசி விடயங்களை சொல்லுகிறது கவிதையின் வாயிலாக....
போர்வாளாய் பரிணமிக்க எழுதுகோலை தயார் செய்த கவிஞர் எந்த இன்னலை வெட்டி வீழ்த்தப் போகிறார்....?
==வாருங்கள் இளைஞர்களே.!
==கவிதைகள் என்பது அழகியலைப்
==பாட மட்டுமல்ல..,
==வாழ்வின் அவலங்களை போக்கவும்தான்.!
தனியே செல்ல தயாரில்லை...இளைஞர்கள் எல்லோரையும் அழைக்கிறார்...தலைப்பில் எழுதிய வார்த்தைகளுக்கு உயிரூட்டுகிறார்....
எழுதுகோலும் தாளும் இருக்கிறது என்ற காரணத்தினால் நாம் வெறும் அழகியலை மட்டும் எழுதிக் கொண்டிருக்க கூடாது...நமது வாழ்க்கை அவலங்களில் வீழ்ந்துக் கிடக்கிறது ! அந்த அவலங்களை அழிக்க எழுதுகோலை எடுத்துக் கொண்டு ஒன்று திரளுங்கள் இளைஞர்களே என்ற அவரது அழைப்பில் ஒரு வீரியம் தெரிகிறது....
சமுதாய மாற்றம் என்பதும், வளர்ச்சி என்பதும் இளைஞர்களின் கையில் தான் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார் !
==மக்களின் நலனுக்காக வழிகாட்டவும்
==எதிரானதை முடக்கி வைக்கவும்
==நம்மைத் தவிர நாட்டு மக்களுக்கு
==இங்கே யாருண்டு..?
கவிதையில் புகுத்தும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் எவ்வளவு ஆழமான விடயங்களைப் புகுத்தலாம் என்பதற்கு இந்த வரிகளும் உதாரணம்.....
மக்களுக்காக பாடுபட நம்மைத் தவிர வேறு யாருண்டு? இதை மிக சரளமான ஒரு வார்த்தையாக பார்த்து கடந்து போய்விடலாம்....ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் பயணியுங்கள் மீண்டும்....
கவிஞன் என்பவன் என்ன நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்கும் வல்லமை கொண்டவனா ? ஆட்சி அமைக்கும் அதிகாரம் கொண்டவனா ? அரசியல்வாதிகளையே ஆட்டுவிக்கும் பெண்ணாம் பெரிய சூத்தாட்டக் காரனா? மந்திரவாதியா? சூனியக் காரனா? அல்லது கடவுளா ?
ஒன்றுமே இல்லாதவன் எதை வைத்து சொல்லுகிறான் நாட்டு மக்களுக்கு நம்மை தவிர யாருண்டு என்று ?
இங்கே தான் ஒரு கவிஞன் தனக்கான கடமையை சரியாக செய்கிறான்....தைரியம் ஊட்டிக் கொள்கிறான்,
எழுத்து என்பதும் கவிதை என்பதும் வெறும் அழகியல், அலங்கார பாவனைக்கான சரக்கு அல்ல..அது ஒரு தேசத்தையே கட்டியெழுப்பும் வல்லமைமிகு ஆயுதம் ! அந்த ஆயுதத்தை ஏந்தி நாட்டுக்காக போராட அல்லவா இந்த இளைஞர்களை அழைத்திருக்கிறார்...
ஒருவன் தன்னுடைய முதல் கவிதையில் இதைவிட என்ன பெரிய செய்தியைச் சொல்லிவிடப் போகிறான்?
ஈழம் முதல் எத்தியோப்பியா வரை தன்னுடைய சிந்தையை ஓட விட ஒரு கவிஞனுக்கு எந்தளவு பெரிய மனது வேண்டும் ?
முதல் கவிதை ....அதுவும் சமூகத்தின் மாற்றத்தை வலியுறுத்தும் கவிதை....இந்தக் கவிதையைப் பார்த்து கை தட்டுவதா அல்லது கண்களைத் திறந்துக் கொள்வதா என்பதை நான் சொல்லி தான் நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமா என்ன ?
முதல் கவிதை என்று கூற முடியாத அளவிற்கு கருப்பொருளை நகர்த்திச் சென்ற கவிஞர்....சொல்லாடல் குறித்து மட்டும் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுக்க வேண்டும் !
கட்டுரைக்கு கருத்தாடல், கவிதைக்கு சொல்லாடல்!
இந்த விடயத்தை நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும்...கவிஞன் என்பவன் நெஞ்சுள் (சில் அல்ல சுள்) பச்சைக் குத்தும் வித்தைக் காரனாய் மாறுவது சொல்லாடல் மூலம் தான் !
சமையலில் கொஞ்சம் சுவையூட்டிகள் சேர்த்துக் கொள்வதைப் போல (சத்திற்குப் பாதிப்பிலாமல்) கவிதைக்கு கொஞ்சம் இலக்கிய அலங்காரங்கள் காட்டாயம் தேவை !
எந்த கவிதைக்கு எது அலங்காரம் என்ற விடயத்தை கவிஞன் எழுத எழுத அனுபவம் மூலம் படித்துக் கொள்வான். படித்துக் கொள்ள வேண்டும்!
அது குறித்து மாத்திரம் கவிஞர் சிந்திக்க வேண்டும்! வேறெந்த குறையும் தேடினாலும் கண்டுப் பிடிக்க முடியாத கவிதை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை !
சரி..இவ்வளவு தூரம் பேசிக் கொண்டு வந்தேன்..யார் இந்த கவிஞர் என்று சொல்லவே இல்லையே......
நான் எழுதும் முதல் விமர்சனம் (தனி படைப்பாக) இதற்கு நான் எடுத்துக் கொண்டது என் அன்புத் தோழர் பொள்ளாச்சி அபியின், எழுத்து தளத்தின் முதல் கவிதையான "வாருங்கள் இளைஞர்களே...." என்ற இந்த கவிதையை !
வாசிக்கப் படாமல் கிடக்கும் எண்ணற்ற நற்கவிதைகளில் இதுவும் ஒன்று....இந்த கவிதையை முழுமையாக வாசித்து கருத்துகள் கூறுதல் உங்கள் கடமையென நீங்கள் நினைத்தால் அதில் எந்த தப்பும் இருக்கப் போவதில்லை......
கவிதை எண் - 41174