அவனை போல் நான்
அவனை போல் நான்
இந்த நகருக்கு வாழ வந்து இரண்டு வருடமாகிறது. ஒரு ட்ரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் ‘ட்ரான்ஸ்போர்டில்’ கிட்டத்தட்ட நாற்பது வகையான ஊர்திகள் இருக்கின்றன லாரிகள், வேன்கள், ஜீப், ட்ராவல்ஸ் பஸ் கூட நான்கு இருக்கிறது.
காலை ஒன்பது மணிக்கு ஆஜரானால் இரவு ஒன்பது ஆகிவிடும். பெரும்பாலும் பார்சல் சர்வீசில்தான் என்னுடைய வேலை. ஒரு நாள் பார்சல் ஒன்றை அனுப்ப வந்தவன் என் முகத்தை உற்று உற்று பார்த்தான்.
அவன் என்னை உற்று பார்த்துக்கொண்டிருப்பதை நான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை, பார்சலை பதிவு செய்யும் வேலையில் இருந்தேன். ரிஜிஸ்டரில் எழுதி அவனிடம் ஒரு கையெழுத்துக்காக தலை நிமிர்ந்த போதுதான் உணர்ந்தேன், அவன் நீண்ட நேரமாக என்னையே பார்த்து கொண்டிருக்க வேண்டும்.!
அவன் கிளம்பும்போது ஜீ நீங்க எவ்வளவு பெரிய ஆளு, சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான், செல்லும் போதும் என்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவன் என்னை யாரோ என்று நினைத்து கொண்டான் என்று புரிந்தது. “நான் அவனில்லை” என்று அவனிடம் எப்படி சொல்வது?
அதற்குப்பின் நான் தனியாக ஒரு வீட்டில் குடியிருந்தேன். அதுவும் மாடியில் வரிசையாக நான்கு வீடுகள் ரோட்டை பார்த்தவாறு இருக்கும். அதில் ஒன்றில் நான் குடியிருந்தேன்.
நான் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுத்து விடுவேன், ஆனால் பக்கத்து வீட்டில் இருவரோ, மூவரோ ஆண்கள் குடியிருக்கிறார்கள். அவர்கள் மாலை வீட்டிற்குள் வந்து விட்டால் இரவு முழுவதும் கத்திக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பார்கள். இது எனது தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருந்தது. இதுவரை நான் அவர்களை அதிகமாக பார்த்ததில்லை, மாலையில் அவர்கள் அறையின் கதவை திறப்பது மட்டுமே கேட்கும், அதன் அடைத்து விட்ட பின்னால் சத்தம் ஆரம்பித்து விடும்.
இரவு நானே சமைத்து கொள்வதால் வெளியே செல்வதில்லை. இவர்களின் சத்தம் அங்குள்ள மற்றவர்களுக்கு மிகுந்த இடைஞ்சலை கொடுத்தது, என்றாலும் அவர்கள் ஓரிரு முறை சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் அவர்களுடன் சண்டைக்கு சென்று விட்டார்கள். அதன்பின் யாரும் அவர்களுடன் வம்பை வளர்த்துக் கொள்ளவில்லை.
என்னால் அவர்களின் சத்தம் தாளமுடியாததாக இருந்தது, ஒரு நாள் தாள முடியாமல் எனது அறையிலிருந்து வெளியே வந்து அவர்களின் கதவை தட்டினேன். நீண்ட நேரம் தட்டியும் ஒருவரும் கதவை திறக்கவில்லை. அதற்குள் அக்கம் பக்கம் இருப்பவர்கள், நான் அவர்கள் அறைமுன் நின்று கதவை தட்டிக்கொண்டிருப்பதை பார்த்ததும் இன்று ஏதோ நடக்க போகிறது என்பதை போல வேடிக்கை பார்க்க நின்றிருந்தார்கள்.
எரிச்சலும் கோபமுமாக அறைக்கதவை ஓங்கி தட்டினேன். திடீரென கதவு திறக்கப்பட்டு ஒருவன் கோபமாக வெளியே வந்தவன் எதிரில் என் முகத்தை பார்த்ததும் சட்டென பணிவானான். ஜீ….இழுத்தான்.
எனக்கு அவன் செய்கை ஆச்சர்யமாக இருந்தாலும், உங்கள் சத்தம் இங்கு குடியிருப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. வேகமாய் சொன்னேன்.
இனிமே சத்தம் வராம பார்த்துக்கறோம், நீங்க போங்க, ஜீ கையெடுத்து கும்பிட்டவன் சட்டென கதவை மூடிக்கொண்டான். எனக்கு புரிந்தது, என்னை யாரோ என்று நினைத்து கொண்டுவிட்டான். நான் அவனில்லை என்று அவனுக்கு சொல்ல விரும்பாமல் என் அறைக்குள் வந்து விட்டேன்.
பக்கத்து குடியிருப்புவாசிகளுக்கு ஒரே ஆச்சர்யம், என்னை கண்டு அவர்கள் அறையை மூடிக்கொண்டதை பார்த்தவர்கள், மறு நாள் நான் வெளியே வரும்போது ஒரு வித மரியாதையுடன் பார்த்தார்கள்.
அதன்பின் தொடர்ந்து இதுபோல சூழ்நிலைகளை சந்தித்தேன். ஒருவன் என் கையை பிடித்து ஜீ எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன், அவர்களை காலி செய்ய வையுங்கள், என்றான். அவனிடம் “நான் அவனில்லை” என்று சொல்லி சிரமபட்டு அங்கிருந்து நகர்ந்து வந்தேன்.
யார் அவன்? என்னப்போல்? இல்லை நான் அவனைப்போல்? இந்த சந்தேகம் நாளுக்கு நாள் என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. என்றாவது ஒரு நாள் அவனை சந்திக்க வேண்டும். நிச்சயம் அவன் ஒரு தாதாவாகவோ, இல்லை இந்த ஏரியாவில் செல்வாக்குடனோ, மிகுந்த பணம் படைத்தவனாகவோதான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொண்டேன்.
நிறுவனத்தில் கூட வேலை செய்து கொண்டிருக்கும் பெண்ணின் கணவனை உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்து எங்கள் அலுவலகத்திலிருந்து மூவர், நால்வராக அலுவலக நேரத்திலேயே சென்று பார்த்துவர நிர்வாகம் அனுமதி கொடுத்தது.
நானும் கூட இரண்டு ஆண் ஒரு பெண், நால்வராக, எங்கள் அலுவலக ஜீப்பிலேயே மருத்துவமனைக்கு சென்றோம். அந்த பெண்ணின் கணவனை பார்த்து விட்டு கிளம்பும் போது எதிரில் வந்த டாக்டர் ஒருவர் “என்ன நோயாளியா” கட்டில்ல படுத்திருக்காம இப்படி சுத்திகிட்டிருக்கீங்க? கேட்டுவிட்டு கடந்து போனார்.
கூட வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, எனக்கு புரிந்து போனது, அப்படியானால் அந்த நபர் மருத்துவமனையில்தான் இருக்க வேண்டும். நான் என்னுடன் வந்தவர்களை போக சொல்லிவிட்டு அரைமணி ஒரு மணியில் வந்து விடுவதாக சொல்லி அனுப்பினேன்.
மருத்துவமனையில் தேட ஆரம்பித்தேன். பெயர் தெரியாது, ஊர் தெரியாது, ஆளும் தெரியாது, ஒரே ஒரு செய்தி அவன் என்னைப்போல இருப்பான், இது மட்டும்தான். தேடினேன். ஒவ்வொரு படுக்கையாக தேடினேன்.
இறுதியாக மருத்துவமனை ஊழியன் ஒருவன் நான் தேடுவதை பார்த்து விட்டு “படுக்கையில படுக்காம” சுத்திகிட்டிருக்கீங்க? என்று கேட்டான். சட்டென அவன் கையை பிடித்து “நான் அவனில்லை” என்று விளக்கி விட்டு எந்த படுக்கையில் அவன்? விசாரித்து அங்கு ஓடினேன்.
இவனா? உடல் மெலிந்து முகம் என் முகத்தை போல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை, ஒரு வேளை நன்றாய் இருக்கும்போது என்னைப்போல இருந்திருக் கலாம்.அந்த நிலையிலும் அவன் என்னை கண்டு திகைத்ததை நான் கண்டேன். அப்படியானால்..! நான் நினைத்தது சரிதான் என்று மனதுக்குள் தீர்மானம் ஆனது.
மூன்று நாட்கள் ஓடியிருந்தது. பக்கத்து அறையில் இருந்தவர்கள் இடம் மாறி போய்விட்டார்கள். அது மட்டுமல்ல, சுற்றிலும் இருந்தவர்கள் என்னை மரியாதையாய் பார்ப்பதை உணர்ந்தேன். அவர்களுக்கு ஒன்று என் மீது பயம், இருக்க வேண்டும், அல்லது இவனுக்கு பின் புலம் இருக்கவேண்டும் என்று நினைத்து கொண்டிருக் கலாம்.
எது என்னவோ என்னை போல இல்லையில்லை அவனை போல இருந்த நான் மருத்துவமனையில் உயிரை விட்ட அவன் உடலை உறவினனாக எரித்தது நான்தான். அன்று மருத்துவமனையில் பார்த்த ஒரு மணி நேரத்தில் அவன் இறந்து போயிருந்தான். அங்கு அவனை “அநாதையான நோயாளி” என்னும் அடிப்படையில் தான் சேர்த்திருந்தார்கள். அவன் இறந்த போது நான் அவனருகில் நிற்பதை பார்த்தவர்கள் கேட்டபோது நான் தயங்காமல், உறவுக்காரன் மற்றும் நண்பன்தான் என்று சொன்னேன். நானே பொறுப்பு என்று அவனது உடலை வாங்கி கொண்டு போய் எரித்துவிடுவதாகவும் கையெழுத்து போட்டு உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரித்து விட்டுத்தான். எனது அறைக்கு திரும்பினேன்.
இறக்கும் முன் அவன் என்னிடம் பேசியது மனதுக்குள் இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது. மக்கள் ஏதோ ஒரு விதத்தில் என்னிடம் பயப்பட்டார்கள், எனது தோற்றத்தை பார்த்தா? என்று தெரியாது. இது எனக்கு நல்ல பலனை கொடுத்தது. காசு பணம் நிறைய பார்த்தேன். அரசியல், அசிங்கம் எல்லாம் கைவைந்த கலையாயிற்று, எல்லாம் ஒரு காலகட்டம்தான். திடீரென இந்த வியாதி வந்து உடல்நிலை சரியில்லாமல் போனது, யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து சேர்ந்து விட்டேன். எனது இறுதி காலம் தெரிந்து மருத்துவமனை ஏற்று கொண்டது. அதன் பின் சுற்றி வர, நோயாளிகளை பார்க்க வரும் உறவுகளை கவனித்தபோது யாருமே இல்லை எனக்கு என்பதை நானே உணர்ந்தேன். நன்றாய் இருக்கும் போது என்னை சுற்றி வந்து கொண்டிருந்தவ்ரகள் எங்கே போனார்கள்? அன்று எனக்காக உயிரை கொடுப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம்..? இதை உணர்ந்த போது, எல்லாம் கை மீறிப் போய் விட்டது. நீ யாரோ எனக்கு தெரியாது, ஆனால் சிறுவயதில் நான் உன்னைப் போலவே அச்சு அசலாக இருந்தேன். இறக்கும் தருவாயில் என் முன்னால் நிற்கிறாய், கடவுள் சித்தம் எனக்கான இறுதி கடமையை செய்வதற்காக உன்னை அனுப்பி இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் இறக்கும் போது கைவிட்டு விடாதே, உடலை முறைப்படி எரித்து விடு.
உன்னிடம் இப்படி கேட்க சொல்கிறது என் மனம். காரணம் தெரியவில்லை, ஆனால் நீ எதற்காக என்னை தேடி வந்தாய் என்பது எனக்கு புரிகிறது, நான் என நினைத்து உனக்கு இந்த சமுதாயம் ஏதோ செய்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் உனக்கு என்னை பார்க்கவேண்டும் என்னும் உந்துதல் ஏற்பட்டிருக்கலாம்.
என்றாலும் இனிமேலும் என்று நான் என நினைத்து உன்னிடம் பேச வருபவர்களிடம் “நான் அவனில்லை” என்று சொல்லி விடு, காரணம் என் மீது ஏராளமான புகார்கள் காவல்துறையில் நிலுவையில் இருக்கின்றன. உனக்கு அதனால் சிக்கல் வரலாம். என்னை எங்கே அவன்? என்று கேட்டால் தெரியாது என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விடு.
நான் எல்லோர் மனதுக்குள்ளும் இன்னும் உயிரோடு இருப்பதை விரும்புகிறேன். என்று சொன்னவன் அடுத்த பத்து நிமிடத்தில் மூச்சை சத்தமாய் வெளியே விட்டு திரும்ப மூச்சை இழுக்க முயற்சிக்கவேயில்லை. அப்படியே முடிந்து போனான்.

