நட்பு

நட்பு....

விடிவெள்ளி முளைத்து பகல் வந்தது;
இடிமின்னல் தோன்றி மழை வந்தது;
கொடி முல்லை விரிந்து மணம் வந்தது;
நொடிநேரம் சேர்ந்து நாள் வந்தது;
தடைபல கடந்து இங்கு
நல்ல நட்பு பிறந்தது.

வானை விட உயர்வானது;
அலைகடலை விட ஆழமானது;
தென்றலை விட இதமானது;
மலரை விட மணமானது;
இளநீரை விட இனிப்பானது;
இதயம் மகிழ்ந்து வரவேற்போம்-இந்நட்பை.

ஆதவனின் உதயத்தை தாமரை அறியும்;
தென்றலின் இன்னிசையை செடிகள் அறியும்;
நிலவின் குளுமையை வானம் அறியும்;
உனது உள்ளத்தினை உன் நண்பன் அறிவான்.

நட்சத்திரங்கள் சிரிக்காதவரை அந்த
நாயகன் வானத்திற்கு அழகில்லை;
மழைத்துழிகள் விழாதவரை-இந்த
மகிழ்விலா மண்ணுக்கு அழகில்லை;
உன்னைப்பற்றி அறியும் நண்பனில்லாதவரை
உன் நட்பிற்கு அழகில்லை.

பூக்களின் புன்னகை அதன்மேல்
ஸ்பரிசிக்கும் மழைத்துழியால்;
புற்களின் புன்னகை அதன்மேல்
ஸ்பரிசிக்கும் பனித்தளியால்;
உனது புன்னகை- உன்
உள்ளமறியும் நண்பனால் மட்டுமே!

இரவினை வெளிச்சமாக
தோன்றும் நிலவினைப் போல;
ஒளியினை வருவிக்க
எரியும் மெழுகினைப் போல;
சாதி வேற்றுமை அழிகிறது
நல்ல நண்பர்களின் சங்கமத்தில்!


புருவ மத்தியில் வீசிடும் மெல்லிய
குங்கும வாசனை;
பூக்கள் மத்தியில் வீசிடும் மெல்லிமெல்லிய
கதம்ப வாசனை;
எஙகள்
நட்பு வரலாற்றில் முத்திரை பதிப்பது
அன்பு வாசனை.

தனது நிழலை விரட்டத் தெரியாத
தீபங்கள் போல சில இருள்கள்;
தனது கறையை போக்கத் தெரியாதெரியாத
நிலவினைப் போல சில தடைகள்;
காட்டாறு பாய தடங்களென்ன ?
காந்தமாய் நல்ல நட்பு இணைய
தாமதம் என்ன?


மனிதனே!
கருகப் போகும் மலர் கூட
மலரத்துடிக்கும் இந்நாளில்
காட்டுப் பூக்களாய் பரவும்
உன் நட்பினால்...
வேர்விடும் முன்பே கிள்ள மறந்த
மதவெறி மரங்களை
விழுதுவிட்ட இந்நிலையிலாவது
அழித்திட முயற்சி செய்!

இந்நூற்றாண்டில்....
உன் எண்ணங்களை எழுத்தாக்கி
ஏற்றம் பல பெற;
சாத்திரங்கள் பல தாண்டி
நீ சரித்திரத்தில் இடம்பிடிக்க
இனணந்து வா நண்பனே!

எழுதியவர் : நிஷா (18-May-14, 9:53 pm)
Tanglish : natpu
பார்வை : 91

மேலே