மொழிப் பாடங்களில் 100க்கு100 பெருமைப்படக் கூடிய விஷயமா

இந்த ஆண்டு கல்வி நிலையங்கள் (கல்வித் தொழிற்சாலைகளைப்) பொருத்தவரை மிகவும் மகிழ்ச்சியான ஆண்டு ஆகும். ஏனெனில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தியிருக்கிறது. 100க்கு 100க்கு மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டுகளைவிட அதிகம்.

ஒரு காலத்தில் கணிதத்தில் மட்டும் தான் 100க்கு 100 மதிப்பெண் பெறும் நிலை இருந்தது. அந்தக் காலக் கட்டத்தில் பள்ளீயிறுதி வகுப்பில் 60% மதிப்பெண் பெற்ற மாணவன் ஆங்கிலத்தில் அதிகப் பிழைகள் இன்றி சொந்தமாக ஒரு கட்டுரை எழுதும் மொழித் திறன் பெற்றிருந்தான். எந்த தலைப்பையாவது கொடுத்து ஒரு இரண்டு பக்கக் கட்டுரை எழுதச் சொன்னால் எளிதில் எழுதிவிடுவான்.

இன்று அந்த நிலை உள்ளதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலோரே பிழைகள் இன்றி, சொந்தமாக ஒரு பக்கக் கட்டுரையைப் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில்) பிழையின்றி எழுத இயலா நிலையில் உள்ளனர்.

அன்று பாடப் புத்தகங்கள் தவிர அறிஞர்களின் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் போன்றவற்றை வாசித்தார்கள். நாளிதழ்கள் படிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தார்கள். அவர்களுக்கு மொழித் திறன் வளர்ந்தது. இன்றோ பாடப் புத்தகம் தவிர வேறு எதையும் படிப்பதில்லை. புரிந்து கொண்டும் படிப்பதில்லை. குருட்டுத் தனமாக புத்தகத்தில் உள்ள அனைத்தையும் மனப்பாடம் செய்து எழுதினால் போதும். ஒரு கேள்விக்கான பதிலில் அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இருந்தால் போதும் மொழிப் பாடங்கள் தவிர பிற அனைத்துப் பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற.
மொழிப் பாட ஆசிரியர்கள் தவிர பிற பாடங்களுக்கான ஆசிரியர்கள் மாணவர்களின் எழுத்துப் பிழை, இலக்கணப்பிழை ஆகியவற்றைப் பொருட்ப் படுத்துவதே இல்லை. அதனால் தான் இன்று மொழிப் பாடத்தில் 85% மதிப்பெண் பெறும் மாணவன் சொந்தமாக பிழையின்றி நான்கைந்து வாக்கியங்கள் கூட எழுதும் திறன் இன்றித் தவிக்கிறான.
இந்த ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வில் 255 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100ம், ஆங்கில மொழிப் பாடத்தில் 677 பெரும் 100க்கு 100ம் பெற்றிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் ஸ்ரீனிவாச சாஸ்திரி அளவுக்கு ஆங்கில மொழியில் ஞானம் பெற்றவர்களா? இங்கிலாந்து அரசி எலிசபெத் ராணியின் ஆங்கில அறிவில் பிழையைக் கண்டு பிடிக்கும் அளவு ஆங்கில அறிவு பெற்றவர்களா? இவர்களில் எத்தனை பேர் திடீரென்று ஒரு தலைப்பைக் கொடுத்து இரண்டு பக்கக் கட்டுரை ஒன்றை எழுதச் சொன்னால் பிழையின்றி எழுதும் திறன் கொண்டிருப்பார்கள்.

மாணவர்களைக் குறை சொல்ல முடியாது. அறிவைப் பெருக்க கல்வி பயன்படும் நிலையில் இருந்து விலகி விட்டது. தேர்வில் நிறைய மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்ற வெறித்தனத்தை குழந்தைப் பருவத்தில் இருந்தே ஊட்டி வளர்க்கிறார்கள். ஆசிரியர்களும் தேர்வுக்கு மட்டும் மாணவர்களத் தயார் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
விடைத் தாள்களை மதிப்பீடு செய்பவர்களும் போட்டி போட்டுக் கொண்டு மதிப்பெணகளை அள்ளி வீசுகிறார்கள்.
தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்த காலத்தில் கல்வித் தரம் உயர்ந்த நிலையில் இருந்தது. இன்று தேர்ச்சி சதவீதம் 80 சதவீதத்தையும் தாண்டிவிட்டது. கற்றும் கல்லாரின் எண்ணிக்கையும், பட்டம் பெற்ற எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும், எந்த வேலைக்கும் தகுதியில்லாதவர்களின் எண்ணிக்கையும் பெருகிவிட்டது.

கல்விக்குச் செலவிடும் பணம் தகுந்த பலனை அளிக்க வேண்டுமெனில் தேர்வு முறை, மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறை ஆகியவற்றில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். மாணவர்களைத் தேர்வுக்கு மட்டும் தயார் செய்வது கல்வி கற்பிப்பதாகாது. அவர்களை வாழ்க்கைக்கும் தயார் செய்ய வேண்டும். நல்ல நூலகளை, இலக்கியப் புத்தகங்களை அவர்கள் படித்தால் தான் அவர்கள் நல்ல மனிதர்களாக வளர முடியும். நல்ல நூல்களை வாசிக்வாசிக்கும் பழக்கத்தை பெற்றோர்களும் அவர்களது எண்ணப்படி ஆசிரியர்களும் சாகடித்து விட்டதால் தான் இன்று இளைஞர் திலகங்களின் பெரும்பாலோர் திரைப்படம், செல்பேசி, கணினி விளையாட்டு, இணைய தளத்தில் நிறைந்துள்ள “மிகச் சிறந்த” படங்களையும் வீடியோக்களையும் பார்த்து, இரசித்து சுவைத்து நெஞ்சில் நிறுத்தி உடலையும் மனதையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

(மனதில் தோன்றிய கருத்தை அப்படியே அச்சிட்டு எழ்த்து-ல் பதிவு செய்து விட்டேன். பிழைகளைச் சுட்டிக் காட்டுங்கள்)

எழுதியவர் : இரா சுவாமிநாதன் (24-May-14, 1:25 pm)
பார்வை : 290

சிறந்த கட்டுரைகள்

மேலே