கோச்சடையான் – இது பொம்மை படம் இல்லை செம்ம படம்

திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்துக் கொண்டிருக்கிறார்கள் கோச்சடையானைப் பற்றி விமர்சனம் செய்த கொக்குகள்.இந்திய சினிமா வரலாற்றில்… ஏன் உலக சினிமா வரலாற்றில் சலனப் பதிவாக்கத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட அனிமேஷன் காட்சி வடிவாக தனது ஆதர்ச நாயகனைப் பார்த்த மாத்திரத்தில் திரையரங்கம் அதிர்ந்து நொறுங்கி இருக்குமா என்பது சந்தேகமே….!!!!!!! செளந்தர்யா அஸ்வின் ரஜினி மகளென்றுதான் இதுநாள் வரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் கோச்சடையான் பார்த்த பின்புதான் தெரிந்தது செளந்தர்யாவும் எங்களைப் போன்ற ஒரு ரஜினி பைத்தியம் என்று!

திரையில் மனிதப் பிம்பங்களை நேரடியாக பார்த்துப் பழகிப் போயிருந்த கண்களுக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு புதிய திரைவடிவம் கொஞ்சம் பயிற்சி கொடுப்பது என்னவோ உண்மைதான் என்றாலும்… சூப்பர்ஸ்டார் குதிரையிலிருந்து குதித்து நடந்து வரும் காட்சியில் மெல்ல மெல்ல திரைக்குள் குவியத் தொடங்கும் நமது மனது ரஜினியின் காந்தக் குரலைக் கேட்கத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து கதைக்குள் தொபுக்கடீர் என்று விழுந்து மொத்தமாய் கரைந்து போயே விடுகிறது!

அதன் பிறகு கோச்சடையானின் பிரம்மாண்டத்தில் வாய்பிளந்து திரையில் நடக்கும் மாயாஜாலத்தை பார்த்து படத்தை விமர்சித்து, படம் தோற்க வேண்டும் என்றெண்ணிய பக்கிகள் கூட கை தட்டி விசிலடிக்கும் ஆச்சர்யக் கூடமாக மாறிப்போய்விடுகிறது மொத்த திரையரங்கமும்….

எப்படி ஜெயிப்பது என்பதை ஜெயித்து பிரம்மாண்டமாய் நிற்கும் ஒருவருக்குத் தெரியாதா என்ன? ரஜினியின் ஜிம்மிக்ஸ் வேலைகளுக்கும் வசீகர ஸ்டைல்களுக்கும், ரசிகனின் நாடித் துடிப்பு எப்படிப்பட்டது என்றறிந்து விருந்தளிக்கும் திறமைக்கும் கண்ணை மூடிக்கொண்டு நாம் சல்ட்யூட் அடித்துதான் ஆகவேண்டும். இதுவரைக்கும் எத்தனையோ புராண, இதிகாச வரலாற்று டொட்டடாயிங் படங்கள் உலகெங்கும் வந்திருந்தாலும் கூட இடுப்பிலிருக்கும் வாளை இப்படியும் கூட எடுக்கலாம் என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் படம்தான் கோச்சடையான்.

ரணதீரன் என்னும் மாவீரன் ஏன் கலிங்கபுரிக்குள் சிறுவயதிலேயே வருகிறான், எப்படி சாதுர்யமாய் அங்கே அடைபட்டுக் கிடக்கும் கோட்டைப்பட்டினத்து அடிமைகளை மீட்கிறான்…? கோட்டைப்பட்டினத்துக்கும் ரணதீரனுக்கும் என்ன தொடர்பு, கோட்டைப்பட்டினத்தின் மன்னனை ஏன் ராணா கொல்ல நினைக்கிறான்…? யார் இந்த கோச்சடையான்…? இதை எல்லாம் திரையில் பார்க்கும் போதுதான் அதன் முழுப் பரவசத்தையும் உணர முடியும் என்பதால் கதைக்குள் முழுதாய் நான் போக விரும்பவில்லை.

ராணா ரஜினியை திரையில் கொண்டு வர செளந்தர்யா & டீம் பட்டிருக்கும் கஷ்டம் வீண் போகாமல் வெகு ஜோராய் ரஜினி ரசிகர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுமளவிற்கு இருக்கிறது. இளமைத் துள்ளலோடு தலைவரை திரையில் பார்த்து விட்டு அந்த போதையில் ரஜினி ரசிகர்கள் கிறங்கிக் கிடக்க….இது என்னடா இது… இந்த ரஜினியை ஒண்னுமே செய்ய முடியாதா இனிமேல், அடுத்தடுத்த அடுத்த தலைமுறைகளின் இதயங்களையும் கொள்ளை கொண்டு போக இது போன்ற சலனப் பதிவாக்கத்தில் வந்து அட்டகாசம் செய்கிறாரே….? நாங்கள் எல்லாம் பிழைக்க வேண்டாமா? எங்கள் பிழைப்பில் ஏன் மண் அள்ளிப் போடுகிறார்களே இப்படி என்று தமிழ் சினிமா உலகின் நாயகர்கள் எல்லாம் வயிறெரிந்து கொண்டிருப்பதுதான் இப்போதைய உச்ச பட்சக் காமெடி. ஆமாம் ரஜினியின் அட்ராசிட்டியால் திக்பிரமை பிடித்துப் போய் கிடக்கும் கூட்டம் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திணறிப் போயிருக்கும் இந்நேரம்.

நான் ஏற்கெனவே கூறியது போல கோச்சடையான் ஒன்றும் பத்தோடு ஒன்று பதினோரவது படம் அல்ல. அது காலங்கள் கடந்தும் வெள்ளித் திரையில் ரஜினி என்னும் லெஜண்ட்டை நிலை நிறுத்த எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி. இந்த முதல் அடியே மரண அடியாய் விழும் என்பது ரஜினி ரசிகர்களே எதிர்ப்பார்த்திராத ஒரு இனிய ஆச்சர்யம். ரஜினியிடம் எப்போதும் ஒரு பிரச்சினை இருக்கிறது.. அதாவது சாதாரணமாய் ஒரு சூப்பர் படத்தைக் கொடுத்து ரசிகர்களை அவர் சந்தோசப்படுத்தாமல் அட்டகாசமான அதிரடியை கொடுத்து தன் ரசிகர்களை சந்தோஷக் கடலில் தூக்கிப் போட்டு மூழ்க அடித்து விடுவதுதான் அவருக்கு வாடிக்கை. கோச்சடையானும் ஒரு அட்டகாசமான மாஸ் என்டெர்டெயினர் என்பதோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீசை அடித்து நொறுக்கி எவனும் எட்டாத அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தி வைக்கவும் போகிறது என்பதுதான் உண்மை.

ஏ.ஆர் ரஹ்மானின் மிரட்டும் பின்னணி இசையும் அட்டகாசமான பாடல்களோடு அதிவேக ரயிலின் வேகத்தில் பயணிக்கும் கே.எஸ். ரவிக்குமாரின் திரைக்கதையும் படத்திற்கு மிகப்பெரிய ப்ள்ஸ் பாயிண்ட்ஸ். கோட்டைப்பட்டினம் மன்னரான நாசரைக் கொல்ல மாறுவேடத்தில் வரும் ராணா ரஜினிக்கும் தீபிகாபடுகோனுக்கும் இடையே நடக்கும் அந்த மாஸ் ஃபைட்டைப் பார்த்தாது இனிமேல் சண்டைக் காட்சிகள் எப்படி இருக்கவேண்டும் என்று என்று சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதிரடியான அந்த சண்டைக்காட்சியில் தீபிகா படுகோனை ஈடுபடுத்தி இருப்பதும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்…..!!!!!!

ரஜினி படம் என்றால் வசனம் ச்ச்சும்மாவே தூள் பறக்கும். அதுவும் இது அரசியல் சதிகள் நிறைந்த படம். ஒவ்வொரு வசனத்திலும் அனல் பறக்கிறது, தியேட்டர் கைதட்டலில் குலுங்குகிறது. கோச்சடையான் ரஜினியைக் கொல்ல கூட்டிச் செல்லும் போது சிறுவயதிலிருக்கும் ராணா, ‘அப்பா எங்கப்பா போறீங்க?’ என்று கேட்பார். ‘நான் ஆண்டவன் கிட்ட போறேன்ப்பா’ என்று கோச்சடையான் ரஜினி கூற….

‘ஏன்ப்பா என்னை ஆண்டவன் கூப்டல….’ என்று சிறுவன் கேட்க, அதற்கு ரஜினி…. ‘எல்லோரையும் ஒரு நாள் அவர் கண்டிப்பாய் கூப்பிடுவார்ப்பா’ என்று கூறிக்கொண்டே மரண மேடையை நோக்கி நடக்கும் காட்சியிலும் சரி, கோச்சடையான் ரஜினியின் தலையை கொய்வதற்கு முன்பு ராணா சிறுவனாய் ஓடிப்போய் தன் தகப்பனின் முன் நெற்றியில் முத்தமிடும் காட்சியிலும் சரி….நெஞ்சம் நமக்குப் பதறிப்போகத்தான் செய்கிறது. சலனப் பதிவாக்கம் செய்யப்பட்ட படத்தில் நம்மை மீறி உணர்வுகள் பீறிட்டு, கண்ணீர் தளும்புகிறது எழுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் தலைவர் அன்றி வேறு யாராக இருக்க முடியும்?

இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்து விடுகிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ‘என்வழி வினோ’ அண்ணனுக்கு அந்த நள்ளிரவில் செய்தி அனுப்பினேன், ‘..அண்ணா கோச்சடையான் தமிழ் சினிமாவின் மைல்கல் அண்ணா! இந்திய சினிமாவின் அத்தனை கதாநாயகர்களுக்கும் இந்தப்படத்தின் மூலம் தலைவர் செக் வைத்திருக்கிறார்’ என்று. அந்த நள்ளிரவில் அவர் ஏன் விழித்துக் கொண்டிருந்தார், நான் ஏன் அவருக்குச் செய்தி அனுப்பினேன் என்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.

அந்தக் காரணம், ரஜினி என்னும் மிக அற்புதமான மனிதர்!!!!!!

ரஜினி வெறுமனே படத்தில் நடித்துச் செல்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டாலும் எங்களைப் போன்ற கோடாணு கோடி ரசிகர்களை தனது அன்பால் இணைத்து வைத்திருக்கும் மாயாஜாலத்தையும் செய்திருக்கிறார். எங்களுக்கெல்லாம் ரஜினி எதுவும் செய்வார் என்று நினைக்கவில்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை… ஆனால் எங்களுக்குள் ஒரு பாஸிட்டிவ் அலை உருவாவதற்கும், ஆன்மிகம் பற்றிய புரிதல் உண்டாவதற்கும், எங்கள் குடும்பத்தின் மீது ஒரு பிடிப்பு உண்டாவதற்கும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் போதே சமூகத்தில் ஏற்படும் பிறழ்ச்சிகளைக் கண்டு வெகுண்டெழவும் அவர்தான் எங்களுக்கு ரோல் மாடலாய் இருந்திருக்கிறார், இருக்கிறார், இருப்பார்.

கோச்சடையான் ஒரு மாஸ் சூப்பர் ப்ளாஸ்டர் வெற்றிப்படமாய் அமைந்திருக்கிறது. இங்கும் அங்கும் குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நண்பர்கள் குறைகளைப் பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் தடுக்கவே முடியாது, தளபதி வந்தபோது பேசினார்கள், அண்ணாமலையில் ஒன்றுமே இல்லை என்றார்கள், பாட்ஷா எல்லாம் ஒரு படமா என்றார்கள்…., எந்திரன் ஒரு டுபாக்கூர் படம் என்றார்கள். அவர்கள் பேசட்டும், பேசிக் கொண்டே இருக்கட்டும். பேசுவது அவர்களின் இயல்பு!

ஓடிக் கொண்டே இருப்பது நமது இயல்பு. இதைத்தான் தலைவரின் வாழ்க்கை நமக்கு எடுத்தும் சொல்கிறது. கோச்சடையானின் ஏதோ ஒரு குறியீட்டை உணர்த்தும், பேரிலக்கியவாதிகளுக்கான படம் அல்ல அது. உலகப் படங்களைப் பார்த்து அது பற்றி பேசிப் பேசி நம் சொந்த மண்ணில் நிகழும் சாதனையை கிண்டலடிக்கும் மேதாவிகளுக்கான படமும் அல்ல. ரஜினியின் எல்லாப் படங்களையும் போல படம் ஆரம்பித்ததிலிருத்து இறுதி வரை…. உற்சாக அலைகளால் கவலைகளை மறந்து லயித்து ரசிக்கும் ரசனை உள்ளவர்களுக்கான படம் இது.

மொத்தத்தில்…. சிலர் சொல்லிக் கிண்டலடித்தது போல,

இது ஒன்றும் பொம்மைப் படம் இல்ல…….செம்மப் படம் என்பதுதான் உண்மை!



தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (24-May-14, 2:04 pm)
பார்வை : 139

மேலே