நமக்காக நிற்பதெல்லாம்

" நமக்காக நிற்பதெல்லாம்..!! "
பணமும் அணிகலனும்
பண்பில்லாத இடத்தில்
பல்லிளித்து நிற்கும்!
அரிதாரபூச்சும் அலங்காரமும்
அடக்கமில்லாத இடத்தில்
அகோரமாய் நிற்கும்!
நேசப்பேச்சும் நகைமுகமும்
நட்பில்லாத இடத்தில்
நிர்மூலமாய் நிற்கும்!
வேகவீச்சும் வீரதீரமும்
விவேகமில்லாத இடத்தில்
விட்டேத்தியாய் நிற்கும்!
காதலும் கனிவும்
கட்டுப்பாடில்லாத இடத்தில்
கலகமாய் நிற்கும்!
செல்வமும் சிறப்பும்
செயலில்லாத இடத்தில்
செயற்கையாய் நிற்கும்!
அகம்பாவமும் ஆணவமும்
தனதில்லாத இடத்தில்
தலைகவிழ்ந்து நிற்கும்!
ஆதரவும் சேவையும்
அன்பில்லாத இடத்தில்
அனர்த்தமாய் நிற்கும்!
வெற்றியும் வளர்ச்சியும்
கர்வமில்லாத இடத்தில்
உயர்ச்சிதந்து நிற்கும்!
நற்பண்பும் நல்லொழுக்கமும்
நாளையில்லாத இடத்தில்
நீதியாய் நிற்கும்!