விடிந்திடாப் பொழுதுகள்

இளங்குருதி சுண்டிப்போய்
விஷத் தேனாய் வடிகிறது ,
இளம்பிஞ்சுகளின் வியர்வைப்
பூக்களில் //

நொடியில் மாறும்
சுகங்களையும் சோகத்தையும்
கற்றுத்தந்தது வாழ்க்கை
கல்லாதது கல்வி மட்டுமே //

செவ்வாயில் மனிதன்
குடியேறலாம்..எங்கள்
திருவாய்க்கு உணவு
வேண்டும் முதலில் //

இருட்டில் தொடங்கி
இருளிலேயே முடங்குகின்றன,
எங்கள் பொழுதுகள் //

கண்ணீர்த் திரையிட்டு
மறைத்தது வெளிச்சத்தை ..
மட்கிப் போயின கனாக்கள் //

யார் மீதும்
தவறில்லை ,
நீரில்லா தொட்டியில்
நீந்திப் பழகும்
மீன்குஞ்சுகள் நாங்கள் //

விடியலில் விழிக்கிறோம்
எங்களுக்கு விடிந்திட
மறுக்கும் பொழுதுகளை
கண்ணீருடன் வரவேற்க //

எழுதியவர் : கார்த்திகா AK (4-Jun-14, 7:51 pm)
பார்வை : 164

மேலே