முயன்றால் முடியும்
#முயன்றால் முடியும்.
இருக்குமிடத்தில் விழுந்து கிடந்தால்
இல்லறம் சிறக்காது
இலக்குகள் கொண்ட இலட்சியங்கள்
தோல்வியில் முடியாது..!
தடைகள் கண்டே தயங்கிக் கிடந்தால்
தீர்வுகள் பிறக்காது
மடையினை உடைத்து மதகினை செலுத்து
முடைகள் உனக்கேது
விதையினை ஊன்றி வானம் பார்க்க
மரங்களும் முளைக்காது
நீரினைப் பாய்ச்சி நித்தம் வளர்த்திடு
கனிதர மறக்காது
இருட்டின் உள்ளே தேடிக் கிடந்தால்
வெளிச்சங்கள் உனக்கேது
இருட்டை உடைத்து உழைப்பைப் பெருக்கு
வறுமைகள் வளர்க்காது..!
கரங்கள் முடக்கி அளக்க நினைத்தால்
அளவுகள் வளராது
காயம் வளைத்து வியர்வை உதிர்க்க
வாழ்வினில் வழக்கேது..?
தாமஸ் ஆல்வா எடிசன் முயற்சியில்
எரிந்தது மின்விளக்கு
தோல்வியைக் கண்டு துவளாதிருந்து
நிலவினை மண்ணிறக்கு..!
சோம்பிக் கிடக்கத் தும்பிகள் கூட
கைகளில் சிக்காது
பதமாய்ச் செதுக்கு பாறைகூட
சிலை யினைத் தரும்பாரு..!
வாய்க்குப் பூட்டு இட்டார்க்கெல்லாம்
பாட்டுக்கள் பிறக்காது
நீட்டி முழக்கி ஒலியை மடக்கு
இசைவரும் உன்னோடு..!
தெய்வம் அதனால் ஆகாதெனினும்
முயற்சிகள் கூலி தரும்
வள்ளுவப் பெருந்தகை உரைத்தான் என்றோ
முயன்றிட முள்மலரும் ..!
மலையைக் கூட கட்டியிழுத்தால்
அசைந்திடும் கயிரையிடு
முயற்சியோடு செயலும் என்றால்
வெற்றிகள் விண்ணைத்தொடு..!
#சொ.சாந்தி