ஆசிரியர் விளக்கு
ஆசிரியர் விளக்கு
கல்விக் கூடம் என்னும் கோவிலிலே
கற்பூரம் காணா தெய்வங்கள்
சுடர்விடும் அறிவினில் திரிகளைத் தூண்டி
ஒளி ஏற்றிடும் தீபம் ஆசான்கள்..!
வடிவமில்லா கொடும் பாறை கடைந்து
உருவமளித்திடும் நற் சிற்பிகள்
களிமண்ணும் பதமாய் திரட்டியெடுத்து
பல பாத்திரம் படைக்கும் பிரம்மாக்கள்..!
அரிச்சுவடி முதலாய் அமுதெடுத்து
அள்ளி அள்ளி ஊட்டிய அன்னையர்கள்
கல்வி ஆசான் அளித்த சத்துணவு
வளர்ந்தனர் விஞ்ஞானி மருத்துவர்கள்..!
கைத்தொழில் கற்றதும் ஆசானால் - அதனின்று
வளர்ச்சி காண்பதும் அவரால்தான்
ஏற்றம் கண்டது தொழில் நுட்பம்
கணினி அலைபேசி இதில் அடக்கம்..!
வெற்றுக் குரலும் இசை பாடிடுமே - அந்த
திறனை வளர்ப்பதும் ஆசானே
நடக்கும் பாதங்கள் சுழன்றிடுமே
நடனக் கலையும் வளர்வது குருவாலே..!
ஒழுக்கத்தின் மேன்மை உணர்த்தியவர்
உயர் பண்பும் மெய்தனில் ஏற்றியவர்
வாழ்வின் உயர்விற்கு ஆதாரம் - ஆசான்
இருள் விலக்கும் விளக்கின் அவதாரம்..!