அரணா வுடையானை வேந்தனாய் நாட்டல் விதி – சிறுபஞ்சமூலம் 48

நேரிசை வெண்பா
(’ய்’ ஆசிடை யிட்ட எதுகை)

நீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோயும்
மாண்ட மலைமக்கள் உள்ளிட்டு - மாண்டவர்
ஆ’ய்’ந்தன வைந்தும் அரணா வுடையானை
வேந்தனாய் நாட்டல் விதி! 48

- சிறுபஞ்சமூலம்

பொருளுரை:

நகரைச்சுற்றி நீண்டுவளைந்த அகழி நீரும், காட்டெல்லையும், சேற்று நிலவெல்லையும், உயர்ந்து வானத்தைத் தொடுகின்ற மாட்சிமைப் பட்டமலையும், குடிமக்களையும் உள்ளிட்டு பெரியோர் ஆராய்ந்து சொல்லிய இவ்வைந்தனையும் தனக்கு அரணாக வுடையவனை அரசனாக ஏற்படுத்தல் முறையாகும்.

நீண்டநீர் – அகழி; களர் - சேற்றுநிலம்; பகைவர் கால்வைத்தால் அவர்கள் கால்களை உள்ளிழுத்து நடக்க முடியாதபடி செய்வது! உள்ளிட்டு என்பது சேர்த்து என்னும் பொருளிலும் வரும்!

காடு - குறுங்காடு, பெருங்காடுகள். மாண்ட என்பதை மக்களுக்கு அடையாக்கிப் போர்த்தொழிலிற் கைவந்த மக்கள் எனப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Oct-25, 7:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே