இப்படிக்கு இல்லத்தரசி

எங்கள் வீட்டில்
என் கணவரின்
டாபர் மேன்
வள் என்கிறது !

மகனின்
அல்சேஷன்
லொள் என்கிறது !

மகளின்
பொமரேனியன்
கீச் என்கிறது !

எனது வெறுமை
மியாவ் என்கிறது !

======================================

என் கணவர்
தொலைகாட்சியில்
மூழ்கிக்கொண்டு !

மகன்
இணையத்தில்
மூழ்கிக்கொண்டு !

மகள்
அலைபேசியில்
மூழ்கிக்கொண்டு !

நான்
பாத்திரங்களில்
மூழ்கிக்கொண்டு !

======================================

என் கணவர்
வீட்டிலிருந்து
வங்கிக்குச் செல்கிறார் !

மகன்
வீட்டிலிருந்து
நிறுவனத்திற்குச் செல்கிறான் !

மகள்
வீட்டிலிருந்து
கல்லூரிக்குச் செல்கிறாள் !

நான்
வீட்டிலிருந்து
வீட்டிற்குச் செல்கிறேன் !

======================================

தன்னுடைய
வேஷ்டியை
என் கணவர்
வாங்கி விடுகிறார் !

தன்னுடைய
ஜீன்ஸை
என் மகன்
வாங்கி விடுகிறான் !

தன்னுடைய
சுடிதாரை
என் மகள்
வாங்கி விடுகிறாள் !

என்னுடைய
சேலையை
மூவரும்
வாங்கி விடுகின்றனர் !

======================================

வீட்டில்
என் கணவருக்கென்று
தனியறை !

மகனுக்கென்று
தனியறை !

மகளுக்கென்று
தனியறை !

எனக்கென்று,
அறிவிப்புப் பலகை !

======================================

புதிதாய்
நிலம் வாங்குவது
பற்றி
என் கணவர்,

என் மகனிடம்
கருத்துக் கேட்டார் !

என் மகளிடம்
கருத்துக் கேட்டார் !

என்னிடம்
காபி கேட்டார் !

======================================

என் கணவருக்கு
புல்லட் !

மகனுக்கு
பல்சர் !

மகளுக்கு
ஸ்கூட்டி !

எனக்கு
கால்கள் !

======================================

என் கணவர்
என் மகன்
என் மகள்
நான் .........
என்று
எங்கள் வீட்டில்
நான்கு பேர்கள் !
அவரவர்க்கு
அவரவர் உலகங்கள் !
ஆகமொத்தம்
மூன்று உலகங்கள் !


- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (21-Jun-14, 2:41 pm)
பார்வை : 181

மேலே