எதற்காக படைத்தாய் எனையும்

போராடினால் தான் வாழ முடியும்
என்பது உண்மை தான்
ஆனால்
வாழ்க்கையே போராட்டமானால்!!!

ஏழரை சனியனாம்
பத்தில வியாழனாம்
மொத்தத்தில
கலியுக காலமாம்
கண்ணீரே குடிநீராகுமாம் !
மனிதர்க்கு உணவு மனிதன் தானாம்!

இறைவா!...
மனிதர்க்கு ஆறறிவு கொடுத்த நீ
மனங்களிற்கு
அறிவை குறைத்தது ஏன்?
இதுகும் உன் திருவிளையாடலோ ?

படைத்தவன் படியளப்பானாம்
பகல் கனவு காண்கின்றனர்
வேலையில்லா வேதாந்திகள்

உதவி என்றால் தெரியாதவர்கள்
ஊருக்கு உபதேசம் செய்கின்றனர்
உண்மைஎன்றால் புரியாதவர்கள்
நியாய அநியாயம் கதைக்கின்றனர்
ஊருக்குதான் உபதேசம்
உனக்கில்லையோ!
சரி..........
ஊருக்கு சோறுபோடேன்
உனக்கும் கொஞ்சம் எடுத்துக்கோ
அப்போது கேட்கிறேன்
உன் உபதேசத்தை ....

கலவரம் தான் வாழ்க்கையா?
காட்டிக்கொடுப்பதுதான் மாட்சியா?

மிருகத்திலிருந்துதான்
மனிதன் பிறந்தான் போலும்
அதனால் தான்
மிருகங்கள் மனிதநேயம் கொண்டுள்ளன
ஆனால் !
மனிதனிடம் மிருகத்தனம்
குறையவில்லையே!...

வீரத்திற்காக நீ
சிங்கமாய் மாறவேண்டாம்
மனிதனாய் வாழ்ந்தால் போதும்

உன் அறிவை காட்ட நீ
நரியாய் மாறவேண்டாம்
மனிதனாய் வாழ்ந்தால் போதும்

மானத்திற்காக நீ
கவரிமானாக மாறவேண்டாம்
மனிதனாய் வாழ்ந்தால் போதும்

மனிதா!...
மொத்தத்தில் நீ
மிருகமாய் மாறவேண்டாம்
மனிதனாய் வாழ்ந்தால் போதும்

எனக்கேன் இதெல்லாம்
தெரிந்தே படைத்த இறைவனே
கண்மூடி தியானத்தில் இருக்கும் போது
நான் மட்டும் ஏன் இங்கு
கவலைகொள்ளவேண்டும்

இறைவா!.....
கைகட்டி வேடிக்கை பார்க்க
என்னால் முடியலையே!
உன்னைப்போல் என்னால் கண்மூடவும்
முடியவில்லை !!!.....
எதற்காக படைத்தாய்
எனையும் இப்பூமியில்????

எழுதியவர் : TP Thanesh (22-Jun-14, 2:26 pm)
பார்வை : 74

மேலே