நதியின் மரணமும், தண்ணீர் பாட்டிலும்
நீந்தும் மீன்களும்
முத்தம் கொடுக்கும்படி
தங்கமென மின்னும் குடங்களை
நதியில் தடவி கொடுத்து
நீர் நிரப்ப வந்த
அழகுப் பெண்களே!
நீர்பறவைகள் விளையாட்டாய்த் தெளித்த
முத்துத் துளிகள்
உங்கள் மென்கன்னங்களில்..
உம் கன்னம் தீண்டும் பாக்கியம்
கதிர்க்கைகளுக்கு மட்டும்தான் வாய்க்குமோ!
உங்கள் சிரிப்புகள் விழுந்த
நீர்ச்சுழலில் சிக்கித் தவிக்கிறேன்!
ஐயோ! ஐயோ!
கூச்சல் கேட்டு கண்விழிக்கிறேன்..
அழகு சுந்தரிகள் எல்லாம்
சூர்பனகை ஆனார்களோ!
ஏசும் வார்த்தைகளில்
லாரிக்காரன் ஓடிப்போனான்..
ஒரு குடத்துத் தண்ணீரில்
குடும்ப மானமே கரைகிறதே!
தெரு குழாய்ச் சண்டை
வேடிக்கை பார்க்க வந்தோரே!
வீட்டில் தருக்களை நடுங்கள்..
தரணியில் தாமிரபரணி
தகதிமிதா தாளம் போடும்...

