சேது காப்பியம் தலைமுறைக் காண்டம் நூலாசிரியர் பெருங்கவிக்கோ வாமு சேதுராமன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்)
நூலாசிரியர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

கவியரசன் பதிப்பகம், 31(12) சாயி நகர் இணைப்பு, சின்மயா நகர், சென்னை-92. விலை : ரூ. 300. தொலைபேசி : 044 2479 8375
தமிழ்ப்பணி என்ற இதழின் சிறப்பாசிரியர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் பெரிய மீசைக்காரர் மட்டுமல்ல, பெரிய கவிதைக்காரர். இலட்சக்கணக்கில் பாடல்களை எழுதிக் குவித்திடும் கவிதைக் குற்றாலம். மரபுக்கவிதைகள் எழுதுவதில் முடிசூடா மன்னராக வலம் வருபவர். மரபுக்கவிதையில் சேதுகாப்பியம் வடித்துள்ளார். முன்னுரையில் தன் வாழ்க்கைச் சுருக்கத்தை மிக உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்களின் அணிந்துரை மிக நன்று. சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார் புலவர் செந்தமிழ்ச்செழியன். கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் பதிப்புப் பா எழுதியுள்ளார்.

ஆதிமுதல் மனிதன் இந்தத் தமிழ் நிலத்தில் தான் தோன்றினான். ஆதிமுதல்மொழி தமிழே என்பதை மெய்ப்பிக்கும் விதமாக ஆதி-பரம்பரைப் படலம் என்று தொடங்கி ஒருங்கிணைப்புப்படலம் வரை 50 தலைப்புகளில் சேது காப்பியம் தலைமுறைக் காண்டம் உள்ளது. மரபுக்கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக தமிழ்ச்செல்வனின் களஞ்சியமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள்.

என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில், ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பிறமொழிச் சொற்கள் எதுவுமின்றி அழகு தமிழில் அன்னைத் தமிழுக்கு அணி சூட்டி உள்ளார்.

தலைமுறைக் காண்டம் கதை வடிவம் படித்தவுடன் கவிதையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது.

முதன்மொழி தமிழ்

இனம்மனிதம் சேது நாட்டில்
ஏற்புடைத் தோற்றம் என்றால்
மனஉணர்வு முதன்மொ ழிப்பேர்
வாயுதிர்த்த தமிழே வைய
நாவசை மொழிமூப் பாகும்
அனல்குளிந்தே உயிர்கள் தோன்றி
ஆள்மனிதன் தமிழே மூச்சாம்!

உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் பேசிய முதல் மொழி தமிழ் என்பதை பாவாணர் ஆய்வு செய்து நிரூபித்தார்கள். அதனை கவிதை வடிவில் நிலைநாட்டி உள்ளார் பெருங்கவிக்கோ. ஆய்வு கருத்துக்களையும் அறிவியல் கருத்துக்களையும் மரபுக் கவிதையால் மாண்புடன் வடித்துள்ளார்.

நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம் உழவின் உன்னதம் உயர்த்தும் கவிதை நயம் மிக நன்று.

உழத்தியர் ஓசை

உழவர்கள் உழத்தி யர்கள்
உழைக்கும் பாட்டாளி மக்கள்
பழத்தோட்டம் கண்ட ஆவல்
பறவைகள் துடிப்பாய்ச் சேர்த்தார்
சுழல்கொஞ்சும் தண்டை ஓசை
கலகலக் கும்பெண் கள்தாம்
தொழவானம் பூமித் தாயைத்
தொட்டிட்டே முத்த மிட்டாள்!

எதுகை, மோனை, இயைபு என போட்டி போடுகின்றன. காப்பியம் முழுவதும் சொல் விளையாட்டு படிக்க இன்பம் தருகின்றன. இதுபோன்ற இன்பம் தமிழ்மொழி போல வேறு எந்த மொழியிலும் கிடைக்காது என்பது உண்மை.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சேதுகாப்பியம் வடித்த நூலாசிரியர் பெருங்கவிக்கோ அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒருமைப்பாடு

இந்து மக்கள் ஒருபு ரத்தில்
இசுலாம் மக்கள் மறுபு ரத்தில்
சொந்த பந்தம் சாதி மதம்சேர்
துணை களோடு அமைந்தஅவ்
மந்தை மக்கள் வாழும் நகரம்
மாறு பாட்டில் ஒற்றுமை
விந்தையான ஏற்றத் தாழ்வின்
வேண்டும் ஒருமைப் பாடதோ!

மதத்தை விட மனிதம் சிறந்தது என்பதை வலியுறுத்தும் விதமாக பாடல்கள் உள்ளன. மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளை சாடி உள்ளார்.

ஆடிப்பாடி மகிழ்ந்து வாழ்ந்த வரலாறும் கவிதையில் உள்ளது. படிக்கும் போதே காட்சியாக மனக்கண்ணில் விரிகின்றது. நூலாசிரியரின் பெருங்கவிக்கோ அவர்களின் எழுத்தாற்றல் கவியாற்றல் வியப்பைத் தருகின்றது.

முதியோர் நடனம்

ஓரெட்டும் ஈரெட்டும் ஐயா ரெட்டும்
ஓடோடி கற்றுதிண்ணை வளைய வந்தே
பாரெட்டும் படிகுலவைக் கூத்தும் ஆடிப்
பதினெட்டுத் தெம்மாங்கு வகைப்பா டல்கள்
நீரெட்டிச் சுழல்கின்ற சுழற்சி போல
நேர்நிமிர்ந்தே முன்பின்னும் மங்கை யர்கள்
நாரெட்டி பூத்தொடுத்த மாலை கள்போல
நாடிமுதி யர்தமும் நடனம் செய்வர்!

கடல் போல உள்ள கவிதை நூலில் சிறு துளிகள் மட்டும் எழுதி உள்ளேன். இன்றைய நவீன உலகில் இளைய தலைமுறையினர் தமிழ் படிக்கவே யோசிக்கும் காலம் இது. இந்த நூல் படித்தால் தமிழ்மொழி அறிவு வளரும். தமிழின் வளம் புரியும். சங்க இலக்கியம் போல இந்த கவிதைக்கு மகாகவி பாரதியாரின் கவிதை வரிகள் படிக்கும் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் கவி வடித்த பெருங்கவிக்கோ பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (24-Jun-14, 6:46 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 83

மேலே