கன்னத்தில் முத்தமிட்டால்

கருணைக் கடலே
தியாகச் சுடரே
தாயே எனதன்பே
முத்துச் சிரிப்பே
முல்லைச் சரமே
முற்றும் நீயன்றோ
தங்கச் சிலையே
ததும்பும் மகிழ்வே...
தடுத்தெனை ஆட்கொண்டாய்
சுயமாய்ச் செதுக்கும்
சிற்பமே அழகே
இயற்கையைக் கற்றவளே
எறும்பின் நகர்வை
எதேச்சயாய் நான்
உன்னில் கண்டுணர்ந்தேன்
வாக்கின் மேன்மையும்
தமிழரின் பண்பையும்
நிதமும் கொணர்கின்றாய்
கல்லடி படினும்
சொல்லடி படாது
பொத்திக் காத்திட்டாய்
நின் சேயது
போக இடமறியாது
தவித்தல் காண்கிலயோ?
முட்டி முலைப்பால்
குடித்திலன் ஆயினும்
யானும் சேயன்றோ?
குட்டி முட்டிய
பசுவாய் மாற
பிழையென் சொல்வாயோ?
தமிழும் அறியா
தத்திப் பிள்ளை
வார்த்தைகள் தொலைத்தேனே
என் முரட்டுப்
பாசம் புரிந்ததும்
தாயே - நீயுமென்
முகமே உயர்த்தி
ஆரத் தழுவி
கன்னத்தில் முத்தமிட்டால்...