ஏன் ஏன்

தினமும்
என்னை சுற்றி இருக்கும்
எத்தனையோ ஏன்-கள்?

திருமண வீட்டிற்கு போனேன்....
பல்லாண்டு வாழவேண்டிய
மணமக்களை வாழ்த்த
என்னை அழைக்கவில்லை...
ஏன்??

வயிறு நிறைய சுமந்து
மடி நிறைய பெற வேண்டிய
இளம் கர்ப்பிணிக்கு
வளை சூட அழைக்கவில்லை,,,
ஏன்??

எங்கும் செல்லவில்லை
வாசலில் நின்றேன்....
பள்ளி செல்ல வெளியே கிளம்புவோர் கூட
சகுனம் பார்த்து
மீண்டும் வீட்டிற்குள்...
ஏன்??

மானிடரே!
இறப்பு எல்லோருக்கும்
ஒரு நாள் வரும்...
இன்று முன்னே செல்வோர்
நாளை பின்னே வருவோருக்கு
இடம் பதிவு செய்து வைக்கும்
இடம் தான் இடுகாடு...

என் வாழ்க்கை துணை பிரிந்து சென்றதால்
இத்தனை ராசி பார்ப்பதென்றால்...
நான் அதற்காக உடன்கட்டை
ஏறி விடவா முடியும்??

ஆடை, கலாச்சாரம், உணவு
உறக்கம், அன்பு, பாசம்,
அனைத்திலும் மாற்றம் வந்தாலும்
இந்த ஒன்றில் சமூக மாற்றம் எப்போது??
ஏன் இந்த பிரிவினை பார்வை??

எழுதியவர் : சாந்தி (6-Jul-14, 10:25 pm)
Tanglish : aen aen
பார்வை : 1067

மேலே