ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள் உன் அம்மாவாய் நானும்
தொப்புள் கொடி அறுத்து நீ
தொலை தூரம் சென்ற போது
ஆழிப் பேரலையாய் உன்
ஆவேசம் கண்ட போது
நித்திரை மறந்த உன் கனத்த
இரவுகள் நனைந்த போது
இன்னமும் இன்னமும்
பயம் கொள்கிறேன் நான்!
கரு விழி காக்கும்
இமை மயிர் போல
உயிர் முடிச்சிட்டு உனை
அடை காக்கிறேன் !
காற்றோடு கை கோர்த்து உன்
சிறகுகள் நீ அசைக்க
அடை காத்த என் சிறகுகள்
மெல்ல இறகுதிற்கும்!
வெறும் தழும்புகள் மிச்சமாகும்!
அடி வயிற்றின் தழும்புகளை மெல்ல
தடவிப் பார்த்துக் கொள்கிறேன் !
ஆயிரம் ஆயிரம் ஜென்மங்கள்
உன் அம்மாவாய் நானும்
என் மகளாய் நீயும் !!!