என்ன சொல்லி விழுந்தது மழைத்துளி
என்ன சொல்லி விழுந்தது மழைத்துளி?
என்ன சொல்லி
விழுந்தது மழைத்துளி?
வானின்று விழுகின்ற
வைரத்துளி ஒவ்வொன்றும்
யார்கையில் எண்ணப்பட்டு
யார்யாரிடமோ சிந்துதம்மா!
எங்கெங்கோ சிதறுண்டு
காவியங்கள் படைக்கச்சொல்லி
பாரெங்கும் விழுகிறதோ?
ஆழிக்குள் மூச்சுவிடும்
ஆழ்கடலின் முத்துச்சிப்பியொன்று
பௌர்ணமி ஒளிபார்த்து
அடடாவென வாய்மலர !
ஒளிர்கின்ற ஓர்த்துளியாய்
ஆழிமகள் வாய்புகுந்து
சிப்பியுள் வஸ்துவாய்
மாறிடுவேன்
என்றுசொல்லி விழுந்ததா?
ஆல மரத்தடியில்
ஆகாச நிழலடியில்
ஆத்தா இறந்தபின்னே
ஆண்துணையும் இல்லாமல்
அண்டிப்பிழைக்க வேணாமுன்னு
அடைசுட்டு தான்பிழைக்கும்
ஆத்தாவின் இருப்புச் சட்டியில்
விழுந்ததம்மா ஒர்த்துளி!
விழுந்த அந்த நொடிப்பொழுதில்
விழுந்த இடம் தெரியாமல்
ஆவியாகிப் போனதம்மா!
மழைத்துளி நான் மண்ணில் சேர
மறுபிறவி யெடுக்க வேணுமம்மா
என்று சொல்லி விழுந்ததா?
ஊர்க்கழுவும் அழுக்கையெல்லாம்
உவகையோடு சுமந்துவரும்
சாக்கடைக்குள் விழுந்ததம்மா
உயித்துளியாய்ப் பலதுளிகள்
பாழாய் விழவேண்டாம்
பார்சுமந்த அழுக்கையெல்லாம்
பன்னீர்ப்போல் கழுவிடுவேன்
என்று சொல்லி விழுந்ததா?
மலருக்குள் மதுவாகி
மனதிற்கு இதமாகும்
தேனீக்கள் சேகரிக்கும்
தேனாய் நான் மாறிடுவேன்
என்றுசொல்லி விழுந்ததா?
பாலைவன மணற்பரப்பில்
தாகம் தணிக்கும் சோலைக்குள்
கேணிக்குள் குடிநீராய்
விழுகின்றேன் தாகம்
தணிக்க வருகின்றேன்
என்றுசொல்லி விழுந்ததா?
மனிதன் தின்னா
மாமிசங்கள் சிதறுண்டு
மலைபோல் குவிந்த இடத்தில்
விழுகின்ற உயிர்த்துளிகள்
சிவப்புச் சாயம் கலந்ததுபோல்
இரத்த ஆறாய் வேகமெடுத்து
பூமியிலே பாய்கிறேனே
என்று சொல்லிவிழுந்ததா?
விழுகின்ற உயிர்த்துளியை
தடைபோட அணையின்றி
பாதுகாக்க குளமின்றி
பாய்ந்தோட கண்மாயின்றி
சேகரிக்க கேணியின்றி
ஓடி செல்ல வழியுமின்றி
கடல் நீரில் மடிகிறேனே
மறுபடியும் மழைத்துளியாய்
நான் பிறக்க வேண்டும் இறைவா
என்று சொல்லிவிழுந்ததோ?
விழுந்த ஓர் பொன்துளியும்
என் எழுதுகோலின் உள்விழுந்து
கவிதை பல வடித்திடு
காவியங்கள் புனைந்திடு
சட்டங்கள் இயற்றிடு
நலத்திட்டங்கள் தீட்டிடு
என்று சொல்லி
எழுகின்ற ஓர்துளியாய்
எழுதுகோலில் மைத்துளியாய்
என் மனதினுள் விழுந்ததம்மா!
.....................சஹானா தாஸ்!
கவியரசு வைரமுத்துவின் பிறந்த நாள் போட்டியாக சூரியன் எப் எம் அறிவித்த போட்டிக்கான எனது படைப்பு!

