எவ்விதம் காதலை எடுத்துரைப்பேன்

உள்ளத்துள் தோன்றும்
உணர்வதை உரைக்கும்
வழியது எனக்கும்
புரியவில்லை!

கனத்த வலியதைச்
சுமக்கும் மனத்தினை
வர்ணிக்குமோ வென்
வார்த்தைச் சங்கிலி?!

தவிக்கும் இதயத்தின்
கதறலைச் சொல்லும்
பொருத்தமானதோர்
கவித்துளி தேடினேன்...

தேடியும் கிடைக்காமல்
வாடினேன் – அக்கணம்
வாடின முகந்தனில்
வடிந்தது கண்ணீர்!

வடிந்த கண்ணீர்
வடிந்து மெதுவாய்
விழுந்ததென் மடிதவழ்
வெறுந்தாள் மீது!

வெறுந்தாள் மீது
விழுந்த அத்துளி
பொருத்தமானதோர்
கவித்துளி யென்பதைப்
புரிந்துகொண்டதும்
சிலிர்க்கிறேன் களிப்பினால் !!

களிப்பினால்,
இக்கணம் மீண்டும் துளிர்த்தது,
கருவிழியிரண்டில்
கண்ணீர்த்துளி!!


***********************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (14-Jul-14, 11:59 am)
பார்வை : 279

மேலே