பூக்களோடு ஒரு கைக்குலுக்கல்-பொள்ளாச்சி அபி - சர்நா கவிதை வாசிப்புப் போட்டி

பூக்களோடு கை குலுக்குங்கள்..அவை
புன்னகையை மட்டுமே பரிசாகத் தருகின்றன.!
பூக்களை எப்போதும் கிள்ளி விடாதீர்கள்
வலியால் தனது கண்ணீர் வெளிப்படுவதை
அவை எப்போதும் விரும்புவதில்லை.!

ஆயிரமாயிரம் வர்ணங்களில்
தன்னை வெளிப்படுத்தும் பூக்கள்
எப்போதும் வர்ணங்களால் வேறுபட்டதை
எனக்குத் தெரிந்து.., மனிதரைப்போல
உயர்வென்றோ தாழ்வென்றோ பேசியதில்லை.

கருவறைக்கென்றாலும்,
கல்லறைக்கென்றாலும்
அழைக்குமிடத்திற்கு-அவை
முகம் சுழிக்காமல்
வரத்தான் செய்கின்றன.!
கருவறையெனில் ஆரவாரத்தையோ
கல்லறையெனில் துக்கத்தையோ –நாம்
பூக்களின் நடுவே பார்க்க முடியாது.!

குழந்தைகளின் முகத்திற்கோ,
காதலியின் முகத்திற்கோ
மூதாட்டியின் முகத்திற்கோ..,
எதுவாக இருந்தாலும்,
பூக்கள் எப்போதும்
ஒப்பீடுகளைக் கண்டு
கர்வப் படுவதில்லை.!

பூக்களை..,நறுமணமென்றும்,நாறுகிறதென்றும்
வாசனைகளால் பிரித்துப் பார்க்கின்ற
மனிதர் குறித்து அவை
கவலைப் படுவதில்லை.
மயக்கும் வாசனை இல்லையெனினும்
மருத்துவம் எனக்குள் உண்டென
அவை ஆறுதல் கொள்கின்றன.!

தன்னைத் தாங்கும் வேரினை எப்போதும்
அவை பிரிய நினைப்பதில்லை.
எப்போதேனும் பாதிக்கப்பட்டுவிட்டால்
வேரினை, முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிடத் துடிக்காத பூக்களிடமிருந்து,
நாம் கற்றுக் கொள்ள
நிறைய இருக்கிறது..!
வாருங்கள்..,
பூக்களோடு எப்போதும் கைகுலுக்குவோம்.!

----------பொள்ளாச்சி அபி---

இதன் படக்காட்சித் தொகுப்பு எனது "எண்ணம்" பகுதியில் உள்ளது.விருப்பமும் நேரமும் இருப்பவர்கள் அதனையும் காணலாம்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (17-Jul-14, 8:52 pm)
பார்வை : 895

மேலே