பூக்களோடு ஒரு கைகுலுக்கல்

அவ்வையின் வருகைக்கு சுட்ட பழங்கள்
மரத்தில் காத்துக் கிடக்கின்றன..
.மனிதத்தை தொலைத்தவர்கள்
மனிதனைத் தேடி
ஒளியாண்டுகளில்
பிரபஞ்சப் பயணம் செய்கிறார்கள் ..

..இங்கு காக்கைப் பறவைகளோடு மனிதனும்
காத்துக் கிடக்கிறான்
எச்சில் இலை சோற்றுக்காய்..
.
பூக்கின்ற பூக்கள் மொத்தம்
பூஜைக்கு வருவதில்லை ..
அந்தகன் வரைந்த ஓவியமாக
அங்கும் சில பூக்கள்
காட்சி கண்ணாடி பேழைக்குள்
காற்றில்லாமல் மீன்கள் ..

சருகுகள் தொலைத்த சரித்திரம்
சாளரங்கள் பூட்டிய இருள் வாசத்தில் ..
வெளிச்சம் படாமலே
வெளுத்துப் போகிறது
மரகத மலர்கள்.

சலனப்பட்ட மனங்களுக்கு
சஞ்சீவி மரம் நட்டு
வட்டப் பாதையில்
ஆரங்களைத் தொலைத்தவருக்கு
விட்டம் காட்டு.

புதினங்கள் ஏதும் செய்யாமல்
பொய்யர்களின் வெற்று கூச்சலில்
கலங்கிய என்பேனா
கருப்புமையில் எழுதியது இப்படித்தான்:

காகிதக் கப்பலில் கடற்பயணம்
மீன்கள் கரையில் முட்டையிட்டன
மனிதர்கள் அசுத்தக் காற்றை சுவாசித்து
பிராணவாயுவை வெளியிட்டார்கள் ......

வாருங்கள்
பூக்களுக்கு கை குலுக்குவோம்
பூக்களோடு பூக்களாய்
ஏனெனில்-
புத்தனின் பூமியில்தான் யுத்தகளம்
இங்கு
புற்கள்கூட ரத்தநிறம்.

எழுதியவர் : சுசீந்திரன். (17-Jul-14, 10:11 pm)
பார்வை : 86

மேலே