வேறென்ன வேண்டும் சொல்

எழுதியவர் : அனுசரன்
நாள் : 23-Jul-14, 12:41 am
வேறென்ன வேண்டும் சொல்
===========================
நீ நிரம்பியிருக்கின்ற தாவளங்களில்
என் வெறுமையின் நீட்சி
அதிகரித்துக்கொண்டே போகிறது
உனக்கான என் பிரமாணங்களை
காப்பாற்றிவிட்டேன் என்பதைத்தவிர
உன்னிடமிருந்து இனி எதை எடுக்கப்போகிறேன்!!!
இந்த எழுத்துகளுக்கான பெருமையெல்லாம்
என் பின்னாலிருந்து
இவைகளை நீ வாசித்துக்கொண்டிருக்கிறாய்
என்பது மட்டுந்தான்
பொழிந்த அருவியாய் ஒழுகி
கடலுள் தொகைந்தவைகளாக
மீள் பிறப்பெடுக்கா துளிகள்போல
பிடித்தோ பிடிக்காமலோ
மெது மெதுவாய் உனக்குள் அமிழ்ந்துவிட்டேன்
பாதுகாப்பாயா என்று தெரியாமலேயே !!!!
உள்ளுக்குள் விழுந்துவிட்ட
என் நெருக்கக்கோடுகளை
இன்னும் பக்குவப்படாத உன் தன்மைகளினால்
கிள்ளி எறிந்துவிடாதே
வலிகள் யாவும் உனக்கென
விட்டுவைக்க விரும்பவில்லையாதலால்
தைத்தவைகளை
எப்படி தைத்தேனோ அப்படியே
பிரித்தெடுத்தும்விடுகிறேன் வேண்டுமானால்
எதையும் மறந்து
கணம் உன் விழிகள் அயர்கையில்!!! ம்ம்ம்ம்
"சேதாராங்கள் யாவும்
ஏதோ ஓரிடத்தில் இருந்துவிடட்டுமே
வேறென்ன வேண்டும் சொல்"
அனுசரன்