மாற்றம்

ஓடிப்பிடித்து விளையாடுகிறது
நிலவும் சூரியனும்
இரவையும் பகலையும்
பந்தாக்கி உருட்டியதில்
ஒரு நாள் மரணம் நேற்றாகி
ஒரு நாள் ஜனனம் இன்றாகி
மாறாத மாற்றங்கள் தினமுமாய்...

கிளைபரப்பி நிலைமாறி
உணவாய் உருவெடுக்கிறது
விதைத்த விதையும்
நட்டுவைத்த செடி கொம்பும்
உணவாகும் மாற்றத்தில்
உயிரினங்கள் வளர்ச்சியில்...

முட்டை குஞ்சாகிறது
மூங்கில் புல்லாங்குழலாகிறது
பருத்தி ஆடையாகிறது
அரும்பு மலராகிறது
காய் கனியாகிறது
பாதகமில்லை மாற்றத்தில்
அன்றாட வாழ்க்கையில்....

பொய்யும் புரட்டும்
பித்தலாட்டம் அத்தனையும்
ஆகிப் போனது நவீன மாற்றத்தில்
மின் அஞ்சலும் அலைபேசியும்
மிஞ்சச் செய்கிறது குற்றங்களை...

முகமறியா முகநூலில்
பின்னப்படும் காதல் வலைகள்
ஏமாற்றங்களில் அறுக்கப்படும்போது
வாழ்க்கை சின்னாப்பின்னமாய்...

இருப்பவன் இன்னும் வளர்கிறான்
இல்லாதவன் பாதாளம் விழுகிறான்
கூலிகள் கொத்தடிமைகளாய்
முதலாளிகள் அட்டைகளாய்
அதிகார வர்கத்தின் பிடியில்
உழைத்தும் களைத்தும்
ஏழைகள் மாற்றமில்லாமல்....

கல்வி விற்கப்படுகிறது
விலை எட்டா தூரத்தில்
விற்பவன் தனவந்தனாகிறான்
வாங்க இயலாதவன்
தன்னை நொந்து கொள்கிறான்
கல்வி பெற வழி இல்லாமல்....

அதிக விலை கொடுத்து
மருத்துவ கல்வியை வாங்கியவன்
வசூலித்துக் கொள்கிறான் நோயாளியிடத்தில்
வராத வியாதிகளுக்கும் சேர்த்து...

இலஞ்சம் கொடுத்த ஒப்பந்தக்காரன்
ஆறுமாடி செலவில் அடுக்குகிறான்
பன்னிரண்டு மாடிகள் ஆகாயம் நோக்கி
தர்மத்திற்கே அடுக்காமல் சரிந்தபடி....

மாற்றங்கள் வந்திடுமா??
அலைபேசியும் முகநூலும்
ஆக்கத்திற்கு மட்டுமாகி...

மாற்றங்கள் நேர்ந்திடுமா??
அடிமையான கூலிகளின்
வாழ்க்கை ஏணியில் ஏறும்படி...

உயர்வான கல்வியும்
குறைந்த விலையில் கிடைக்குமா??
ஏழைகளும் அறிவாளியாகி மின்னிட...

இலஞ்சம் வாங்காத
அதிகாரிகளாவார்களா நாட்டில்??
நல்லதும் நேர்மையும் தலைகாட்டிட...

மாற்றங்கள் மண்ணில் வரும்
மக்களின் மனதினில் மாற்றங்கள் வந்தால்...

மாற்றங்கள் நிச்சயம் கிட்டும்
மனிதநேயம் மனதில் கொண்டால்...

மாற்றங்கள் உயர்வுக்கென்றாகும்
தனிமனித ஒழுக்கம் நெறியோடிருந்தால்...

ஏமாற்றுபவன் மாறிவிட்டால்
நல்ல மாற்றங்கள் நாட்டினில் தானாக....

=============================================================================================
கடந்த மாதம் கவிஞர் சாந்தா வரதப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு நூல்
வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கவிதை.
==============================================================================================

எழுதியவர் : சொ.சாந்தி (3-Aug-14, 11:28 am)
Tanglish : maatram
பார்வை : 644

மேலே