கலைந்த கடவுளின் கூடு -சிறுகதை
குழந்தைகளுடன் இருப்பதே அத்தனை சுவாரஷ்யம் என்றால், குழந்தையாகவே இருப்பது...!
கனவுகளை வழியெங்கும் விதைத்து போகும் சின்ன சின்ன விடியல்களை விழிகளாக்கிக் கொண்டிருப்பவர்கள்.....
பிஞ்சுக் கால்களில், இல்லாத பந்தை இலகுவாக அவர்களால்தான் உதைக்க முடியும்.......
"எத்தனாவது பொறந்த நாலு குட்டி?"- பிஞ்சு விரல்கள் நீட்டிய இனிப்பை, இனிப்போடு பெற்றுக் கொண்ட பெட்டிக் கடை பெரிய தாத்தா, தன் பொக்கை வாய் புன்னகைக்க கேட்டார்......
"நாலு தாத்தா..." என்றபடியே மீண்டும், குதி போட்டு, வீதிக்குள் நட்சத்திரங்கள் உதிர்த்துப் போய்க் கொண்டிருந்தான்.....
"என்ன..... நாலா.....? ..... போன வருசமும் இதத் தாண்டா சொன்ன.....!" என்று முணங்கி சிரித்த தாத்தா வாய்க்குள் இனிப்பு வாழ்த்துக்களாய் நிறைந்து கொண்டிருந்தது.......
இறந்த காலம், எதிர்காலம் என்பது பற்றி எந்தவிதமான ஞாபக குறியீடுகளற்ற முகம் இன்று, பிறந்த நாளை மட்டுமே கொண்டாடுகிறது.....ஏன் பிறந்தோம்,,,, எதற்குபிறந்தோம்,,,, எப்படி பிறந்தோம்...... என்றெல்லாம் இந்த உலகம் நாளை, அவனை தன் கோரப் பற்களால் பதம் பார்க்க காத்துக் கொண்டிருப்பதை, எந்த விதமான குறியீடுகளையும் கொண்டு அவனுக்கு உரைத்து விட, சிறு முயற்சியைக் கூட வீசுகின்ற காற்று எடுத்து விடவில்லை....
காற்றில்லா தேசத்தில் கனவுகள் இல்லை என்று, எவனோ ஒரு நூல்காரன் எழுதி வைத்த வாசகம் தாங்கிய சிறு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தான் குட்டி.....நடையும், ஓட்டமுமாய், வெற்றிடம் நிரப்பிய ஓவியமாய் நகர்ந்து கொண்டிருந்தவன் சட்டென கண்கள் கூராக்கி, கவனம் சீராக்கி வேகமாய் ஓடினான்....பாலத்தின் பக்கவாட்டில் திறந்து கிடந்த பாதாள சாக்கடையை, காட்டிக் கொடுக்காத குச்சியின் தொடர்ச்சியில், தடுமாறி தடுமாறி, யோசித்து யோசித்து நடக்கும் கால்கள், இன்னும் ஒரு அடி முன்னால் நகர்ந்தால், சாக்கடைக்குள் விழுந்து விடப் போகும் சம்பவம், சட்டென ஓடிய குட்டியால் மாற்றி அமைக்கப்பட்டது.....
உடம் நடுங்கிய பார்வையற்ற அந்த தாத்தாவின் கையில் ஒரு இனிப்பு இருக்க, நிற்காமல் அதே குதியாட்டத்துடனும் துள்ளல் உடல் மொழியிலும் குட்டி கடந்து விட்டிருந்தான்....எந்த பக்கம் பார்த்தாரோ, அந்தப் பக்கமே குட்டி போயிருக்க வேண்டும் என்பதாக கைகூப்பி நன்றி தெரிவித்து வாழ்த்திக் கொண்டு நின்றார், பாதாள சாக்கடையில் விழாமல் தப்பித்துக் கொண்ட கண் தெரியாத அந்த தாத்தா.....
சூரிய கதிர்கள், சுல்லென்ற சுகம் தருவது போல குட்டியின் விரல் பட்டவுடன் வீதியோரம் வளர்ந்து படுத்திருக்கும் தொட்டாசிணுங்கி உடல் சுருக்கி முறுவலித்தது......... அவன் சிரித்துக் கொண்டான்.....
"வாங்கடி செல்லம்..... இன்னைக்கு தங்கத்துக்கு பொறந்த நாளாச்சே..... எங்கடா இன்னும் காணமேன்னு பாத்துட்டு இருந்தேன்.. வாங்க வாங்க.. தாத்தாக்கு முத்தா தாங்க......"- தாத்தா கொஞ்சிக் கொண்டே குட்டியை வாரி அணைக்க, பாட்டியும் சேர்ந்து கொண்டாள்.....
"ஏய்.... அந்த புதுச் சட்டையை கொண்டா..... குட்டிப் பையனுக்கு போட்டு விடலாம்" என்று முகமெல்லாம் பூரிப்பாய் புன்னகைக்க, மீசை வளைந்து முத்தமாக்கினார் தத்தா.....
புதுத் துணியை எடுத்து வந்து தன் பேரனுக்கு ஆசையாய் போட்டு விட்டாள் பாட்டி....பின், ம்ம்ம்ம்........ என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டு மெல்லமாக....." அம்மா நல்லா இருக்காளா?" என்றாள் பாட்டி....அவளின் ஓரப் பார்வை தன் கணவனிடம் போய் வந்தது ஒருமுறை.....
சட்டென முகம் மாறிய தாத்தா....."ஏன்... நல்லா இல்லாம........!.... ஊரையே கொள்ளையடிச்சு சேர்த்து வைக்கரான்ல அவ புருஷன்..... அப்புறம் என்ன? பொய், பித்தலாட்டம், ஏமாத்து வேலை, கொள்ளை........ ம்ம்.. கொலை தான் இன்னும் செய்யல.. அதையும் சீக்கிரம் பண்ணிடுவான்... உன் புள்ள தேடி புடிச்ச மவராசன்....."- வெற்றிடம் முறைத்து கரைந்து கொண்டிருந்தார் தாத்தா....
"சரி சரி விடுங்க... குழந்த பாக்கறான்...."- என்றபடியே நூறு ரூபாயை குட்டியின் பாக்கட்டில் வைத்து விட்டாள் பாட்டி....
சரி தாத்தா.... சரி பாட்டி..... நான் நாளைக்கு வரேன்..... என்றபடியே குட்டி கிளம்ப எத்தனிக்க.....
"குட்டிப்பா.... சுடுகாட்டு வழியாவா வந்த..... எத்தன தடவ சொல்லிருக்கேன்... வரக் கூடாதுன்னு...... ம்ம்...... போகும் போது பெரிய வீதி வழியா போ... சரியா...." என்றார் தாத்தா....
"சரி தாத்தா......" என்றபடியே அதே துள்ளலுடன், குதியாட்டத்துடன் நடக்க, ஓடத் தொடங்கினான் குட்டி....மௌன விரதம் போல வாய் மூடி நின்று கொண்டிருந்தது காற்று..... வெயிலின் உக்கிர நிழல்களை வியர்வையாக்கும் வித்தையை சரியாக செய்து கொண்டிருந்தான் சூரியன்....
குட்டியின் பாதங்கள், எதிர்கால நிமிடங்களுக்குள் எட்டு வைத்துக் கொண்டே இருக்க, சாம்பல் நிற மண் துகள்களின் குவியல் ஆங்காங்கே குழி மேடுகளாய் திட்டு திட்டாய் கிடந்தது.... அவன், அதே துள்ளலுடன் தொடர் நடை போட......................................
சடக் கென..... முன் வைத்த கால், தரையைத் தேடி, இன்னும் இன்னும் கீழ் இறங்க, செய்வதறியாமல் அடுத்த காலும் பின் தொடர்ந்தது......இருட்டின் தீவுக்குள் சிறகு முளைத்தவன் போல சர் ரென கீழ் நோக்கிப் போய்க் கொண்டே இருந்தான்..... காது அடைத்து, கண்கள் இருண்டு, உடல் இல்லாமல் போவதை உணரும் நொடிகளை காலம் நிறுத்திக் கொண்டது......
அழைத்த அலைபேசியை ஆன் செய்த அவன்...."ம்ம்ம்ம்.... சொல்லுப்பா" என்றான்.....
"சார்...... போன வாரம் பெரிய வீதில ஆயிரம் அடி போர் போட்டும் தண்ணி வரலன்னு அப்பிடியே விட்டமே.... அங்க........., அதுல ஒரு சின்ன பையன் விழுந்துட்டான்"- போனைக் கட் பண்ணினவன், யோசித்தவாறே,....................................................................
" எழவெடுத்தவனுங்க... பார்த்து போக வேண்டியதுதான.... எவன் அவ்ளோ ஓரத்துல நடக்க சொன்னது..." என்று புலம்பிக் கொண்டே கூட இருந்த நண்பனிடம் விஷயத்தைக் கூறினான்...... மனம் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தது........
" ஏம்பா....... எவ்வளவோ செலவு பண்ணி போர் போடறீங்க..... தண்ணி வரலனா அத மூடிட வேண்டியது தான......? காவாசி செலவுதான்.... இப்ப பாரு போலிஸ் கேசுன்னு ' என்று தலையில் கை வைத்தான் நண்பன் ..
மீண்டும் செல் போன் கதற எடுத்து காதுக்கு கொடுத்தான்....
மறுபக்கம் 'ஐயோ... .....ஐயோ' என அவனின் மனைவி கத்திக் கொண்டே கூறினாள்.....
"ஏங்க....... சீக்கிரம் வாங்க.... நம்ம குட்டி போர் குழாய்குள்ள விழுந்துட்டான்....."................
............................................
கவிஜி