சூப்பர் ஸ்டார்
![](https://eluthu.com/images/loading.gif)
டிவிடியைத் தட்டி மீண்டுமொருமுறை ஜானி படத்தைப் பார்க்க ஒரு கோப்பை தேநீரோடு அமர்ந்தேன். எத்தனை முறை நனைந்தாலும் அலுக்காத மழையைப் போல எப்போது பார்த்தாலும் ஒரு சந்தோஷ வெளிக்குள் தரதரவென்று இழுத்துச் செல்லும் மென்மையான திரைப்படம் அது. அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வெட்கமில்லாமல் ஆசைப்படும் சமகாலத்து கத்துக்குட்டி நடிகர்களையும், வியாபாரத்திற்காக சர்வே நடத்தி பரபரப்பு கூட்டிக் கொள்ளும் ஊடகங்களையும் நினைத்துக் கொண்டேன்.... எனக்கு சிரிப்பு வந்தது. எவ்வளவு பெரிய ஆளுமை இந்த ரஜினி? வெறுமனே மாஸ் ஹீரோவாய் தன்னைக் காட்டிக் கொள்ள மசாலா படங்களில் நடித்து ரஜினியை போல வர விரும்பும் நடிகர்கள் ரஜினியின் எல்லா படங்களையும் பார்த்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
ரஜினிக்கு முன்னால் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தார். ஏழைப்பங்காளனாக தன்னை திரையில் வரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் எல்லாமே கொள்கை விளக்கப் பாடல்கள் போன்றுதான் இருக்கும். ' நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை' என்ற ரீதியில் திரையில் ஆடிப்பாடிய எம்.ஜி.ஆர் 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ' என்று ஏழை மக்களை மீட்க வந்த ரட்சகராய் தன்னைக் காட்டிக் கொண்டார். எம்.ஜி.ஆர் பார்முலா அவரது காலத்தில் அவருக்கு கை கொடுத்தது. எம்.ஜி.ஆர் படங்களும் சக்கைப் போடு போட்டன. ஒரு காட்சியில் கூட புகைக்காமல், மது அருந்தாமல் தன்னை ஒரு அக்மார்க் நல்ல பிள்ளையாக காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆர் ஃபார்முலா எம்.ஜி.ஆருக்கு மட்டுமே க்ளிக்கானது.
அதற்குப் பிறகு வந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர் மாதிரி மேக்அப் போட்டார்கள், எம்.ஜி.ஆரைப் போலவே பாட்டெழுதிக் கொண்டார்கள், அடுக்கடுக்காய் வசனம் பேசினார்கள் ஆனால் எம்.ஜி.ஆரைத்தான் மக்களுக்குப் பிடித்ததே அன்றி எம்.ஜி.ஆரைப் போன்றவர்களை அல்ல என்பதால் அப்படி நடித்தவர்களை எல்லாம் கவனமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் தமிழ் ரசிகர்கள். ரஜினி நடிக்க வந்த போதே வாயில் சிகரெட்டோடு வந்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் மனதில் வைத்திருந்த கதாநாயக பிம்பங்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தார் ரஜினி.
அபூர்வ ராகங்களில் கேட்டை திறந்து கொண்டு ரஜினி வந்த போதே தியேட்டரில் விசில் பறந்ததாம். யார் இந்த ஆள் இப்படி ஒரு முரட்டுத் தனமான வேகத்தில் நடிக்கிறாரே...வசனம் பேசுகிறாரே...? என்று அப்போதைய சினிமா உலகமும் மெல்ல முணுமுணுக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் என்ன என்ன செய்தாரோ அதற்கு நேர் எதிராய் ரஜினி நடிக்கத் தொடங்கினார். எம்ஜிஆரின் தலைமுடியில் ஒரு முடி கூட படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடாது அசையாது. ரஜினியோ அறிமுகம் ஆன போதே பரட்டைத் தலையோடு அறிமுகம் ஆனதோடு....நொடிக்கு ஒரு முறை முடியை தன் கை கொண்டு கலைத்துக் கோதியும் கொண்டார்.
ரஜினி தலை கலைத்து முடிகோதும் ஸ்டைலைப் பார்த்து அசந்து போனது தமிழ் சினிமா. சிகரெட்டை வைத்துக் கொண்டு அவர் செய்த அட்ராசிட்டியை எல்லாம் யாராலும் அடக்க முடியவில்லை அப்போது. ரஜினி என்ற பிம்பம் மிருகத்தனமாய் வளரத்தொடங்கியது. வில்லனாய் நடித்த ரஜினி ஹீரோவாய் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கான புதிய திறப்பு ஒன்று உருவானது. ரஜினி ஒரு நாளும் மக்கள் திலகமாகவோ அல்லது நடிகர் திலகமாகவோ உருவாக நினைக்கவில்லை. ரஜினி ரஜினியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட போது அவரது மின்னல் நடிப்பால் கட்டுண்டு தானே வந்து ஒட்டிக் கொண்ட பட்டம் தான்.....
சூப்பர் ஸ்டார்....பட்டம்.
ரஜினிக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு யாரும் எப்படி இல்லாமல் இருந்தார்களோ அதே மாதிரி ரஜினிக்குப் பிறகும் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு யாரும் இருக்கவும் முடியாது. அது அவரது நடிப்பிற்கு, ஸ்டைலிற்கு, மாஸ் ஹிட்ஸ்களுக்காக கிடைத்த பட்டம். ரஜினி மாதிரி வர நினைப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் மாதிரி ஆக நினைத்தவர்கள் மாதிரி மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள், நிராகரிக்கப் படுவார்கள். இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு பெரிய நம்ப முடியாத டுபாக்கூர் காட்சிகளாய் இருந்தாலும் அதை ரஜினியைக் கொண்டு செய்வித்தால் அதை நம்ப ரசிகர்கள் தயாராய் இருந்தார்கள். அதுதான் இன்றளவும் ரஜினி ரசிகர்கள் மனதில் செய்து வைத்திருக்கும் மிகப்பெரிய மேஜிக்.
ஜானி எனது திரையில் ஓடிக் கொண்டிருந்தது. ஜானியும் அர்ச்சனாவும் சந்தித்துப் பேசும் காட்சியில் தனக்குப் பிடித்த பாடகி தனக்காக பாடுவதை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தார் ரஜினி. எத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது அந்த முகம். எத்தனை வசீகரம் அந்தக் கண்களில்....நிஜமாய் காதலில் மிதந்து கொண்டிருந்தது ரஜினியின் கண்கள். ரஜினியின் வேலை அந்தப் பாடலை கேட்க வேண்டியது மட்டுமே....காட்சிக்கும் பாடலுக்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார் ராஜா சார். அனுபவித்தல் என்பது உணர்வோடு தொடர்புடையது அதை யாராலும் விளக்க முடியாது என்ற போதிலும் ஒரு கலைஞன் அந்த உணர்வினை மிக எளிதாக வெளிப்படுத்தி விடுகிறான். எழுத்தோ, பேச்சோ, நடிப்போ அதில் வெளிப்படும் உணர்வு அந்த கலைஞனின் ஆழமான மன உணர்வுகளோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டும். ரசிப்பினை எப்படி நடிப்பாக்குவது? ரசனையை எப்படி மொழியாக்குவது? லயித்தலை எப்படி திரைப்படுத்துவது?
' நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா.....'
என்று ஏக்கங்கள் நிறைந்த கண்களோடு ஸ்ரீதேவி திரையில் பாடிக் கொண்டிருந்தது எத்தனை நிஜம்...? எப்படி ரஜினி சார் ஆக்சன் ஹீரோ என்ற கட்டுக்குள் நீங்கள் வந்து சிக்கிக் கொண்டீர்கள் என்று ரஜினியிடம் கேட்கத் தோன்றியது எனக்கு.
சிறுவயது முதல் ரஜினியின் ஆர்ப்பாட்டமான ஆக்சன் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு வளர்ந்திருந்த எனக்கு ரஜினி இன்னும் கதையசம்ங்கள் கொண்ட ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தால் தமிழ் சினிமாவுக்கு இன்னும் நிறைய வசீகரமான கலை படைப்புக்கள் கிடைத்திருக்கக் கூடும். ஜானியில் குற்ற உணர்ச்சியோடு வாழும் கதாபாத்திரமாக ரஜினி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார் மகேந்திரன் சார்.
நேற்று வந்த ஜிகிர்தாண்டா படத்தைப் போய் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கார்ப்பரேட் விமர்ச்சகர்களை எல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்பாய்த்தான் இருக்கிறது.
ஜானியில் மொத்தம் மூன்று கதாநாயகிகள். இரண்டு கதாநாயகர்கள். இரண்டு பேரும் ரஜினிதான். ஜானி கதாபாத்திரம் சூழ்நிலையால் ஏமாற்று வேலைகள் செய்யும், வித்யாசாகர் கதாபாத்திரம் முடிவெட்டும் வேலை செய்யும் ஒரு கஞ்சத்தனம் கொண்ட எதார்த்தமாய் வடிவமைக்கப்பட்ட ஒன்று. ஆரம்ப காட்சிகளில் ஜானி கெட்டவர், வித்யாசாகர் நல்லவர். ஏமாற்று வேலைகள் செய்யும் ஜானியை அடக்க ஒடுக்கமான பாடகி அர்ச்சனாவான ஸ்ரீதேவி காதலிக்கிறார். நல்லவரான வித்யாசாகரை அதிக ஆசைகள் கொண்ட பாமா காதலிக்கிறாள்.
நல்லவரான வித்யாசாகர் கெட்டவராய் மாறுவதும் சூழலால் ஏமாற்று வேலை செய்யும் ஜானி நல்லவராய் மாறுவதும் கதையின் ஓட்டத்தில் நிகழ்ந்து விடுகிறது. ஸ்ரீதேவிக்கும் ஜானிக்கும் இடையேயான அந்த நட்பு அழகான காதலாய் மாறுவது கவிதையாய் மலருகிறது திரையில். மென்மையான உணர்வுகளை ரஜினியைப் போன்று வேறு யாராலும் நளினமாய் வெளிக்காட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். கமலின் காதல் காட்சிகளில் காதலுக்குப் பின்னால் மெலிதான காமமும் கூடவே நிழலாய் தொடர்ந்து கொண்டே இருக்கும். இறுக்கமான அணைத்தல்களும் அழுத்தமான உதட்டு முத்தங்களும் என்று கமல் நடித்ததை வைத்துதான் அவருக்கு காதல் மன்னன் என்று பட்டமெல்லாம் கூடக் கொடுக்கப்பட்டது.....
ஜானி படத்தை ஊன்றிப் பார்த்தால் புரியும் ரஜினிதான் காதல் மன்னனும் கூட என்று. விரசமில்லாத காதலை சொல்லும் ரஜினியின் விழிகளும் அவரது உதட்டோரத்தில் ஒளிந்து கிடக்கும் புன்னகையும் ஓராயிரம் செய்திகளை அதைப் பார்க்கும் ஆண்களுக்கே கொடுக்கும் போது பெண்களுக்குக் கொடுக்காதா என்ன....?எல்லாவிதமான நடிப்புத் திறனும் கொண்ட ரஜினி என்ற சிங்கம் தன் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றுதான் அசாகயசூர மசாலா படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தது. ரஜினி படத்தில் நடித்தால் மட்டும் போதும் கதையாவது மண்ணாங்கட்டியாவது என்று அலறி அடித்துக் கொண்டு நூறுநாளைத் தாண்டி ஓடிய அவரின் படங்கள் அனேகம். தமிழ் சினிமாவின் பிடறியைப் பிடித்து உலுக்கிய பாட்சாவைப் போலெல்லாம் இனி ஒரு தமிழ்ப்படம் வந்து இனி எப்போது தமிழ் ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கப் போகிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...?
ரஜினி என்னும் மனிதர் சூப்பர் ஸ்டாரானது எப்படி என்பதற்கான ஒரு சின்ன ப்ரிவியூதான் இந்தக் கட்டுரை. காலங்கள் கடந்தும் தமிழ் மண்ணின் மறுக்கவோ மறக்கவோ முடியாத அசாத்தியமான பிம்பம் ரஜினி என்னும் பிரம்மாண்டம். தொடர்ச்சியாய் மூன்று வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாத வெத்துவேட்டுக்கள் எல்லாம் படத்திற்கு தலைவா என்று பெயரிட்டுக் கொண்டால்....எங்கள் தலைவர் ஆகி விடுவார்களா என்ன...?
சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் ஸ்கூல் பாய்ஸ்கள் முதலில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கட்டும்....அப்புறம் கனவு காணலாம் சூப்பர்ஸ்டார் ஆவது பற்றி எல்லாம். தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதைக் காலம் கத்துக் குட்டிகளுக்குத் தெளிவாய் கத்துக் கொடுக்கும் என்பதோடு மட்டுமில்லாமல்எத்தனை பெரிய சூறாவளி வந்தாலும் ரஜினி உருவாக்கி வைத்திருக்கும் வெற்றிகளின் சிகரத்தை தொட்டுவிட முடியாது என்பதே நிதர்சனம்.