பள்ளி விட்டுச் சென்றவள்
![](https://eluthu.com/images/loading.gif)
பள்ளி விட்டுச் சென்றவள்
இல்லம் வரக் காணோம்!
பக்கத்து புதரில் புத்தகப் பை…
அணிந்த யூனிபார்ம் அரளிக் காட்டில்..
ஏழு வயதுப் பிஞ்சு கிடந்த கோலம்
எமனையும் அழ வைக்கும்!
கையில் பிஸ்கட்டுடன் குழந்தை நடந்தால்
பிஸ்கட்டை மட்டும் கவ்விச் சாப்பிடும்
பழகிய தெரு நாய்கள்;
நாயை விடக் கேவலம் என்று
நாயைத் தாழ்த்துவது பாவம்!
பிஸ்கட்டை கொடுத்து பிடித்து வந்து
பிள்ளை உடலில் கொள்ளிக்கட்டை செருகும்
அழுகிய பெரும் பேய்கள்!
இதுகளின் அன்னை இதுகளை
கருவறையில் பெற்றாளா? கல்லறையில் பெற்றாளா?
பால் கொடுத்து வளர்த்தாளா?
பசிக்கு மலம் புசிக்க கொடுத்தாளா?
போதையும் காமமும் போக்கறியாதே?
பின்
குடிசைக் குழந்தைகள் மாத்திரம்
குதறப் படுவதேன்?
கதவில்லா வீட்டில் கண்டபடி நுழைபவன்
கார் கதவைத் திறந்து
கைவரிசை காட்டாததேன்?
வயசுக் கோளாறா இல்லை வசதிக் கோளாறா?
சங்கிலித் திருடனுக்கும்
தர்ம அடி உண்டு-
தர்ணாவும் மறியலும் பண்ணாமல்
தானாக நடக்காது இந்த
சாத்தான்கள் கைது!
இத்தனைக்கும் மத்தியில், ஐயோ
அகப்பட்ட கொடூரனை
’அந்த அங்கிள்’ என்கிறதே
அஞ்சு வயசு தேவதை!