Exhibition Road ல் நான்

நிர்வாணத் தெரு (Naked Street) என்ற பெயரைக் கேட்டவுடன் யாரும் மிரளத்
தேவையில்லை. இதில் எந்த விதமான விரசத்திற்கும், பாலுணர்வுக்கும்
இடமில்லை என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக வளர்ச்சியுற்ற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து முதலான
நாடுகளில் சட்டம், ஒழுங்கு மிகச் சீரான முறையில் கடைப்பிடிக்கப்படும்.
பெருகிவரும் போக்குவரத்தைச் சமாளிக்க எல்லாவிதமான முயற்சிகளும்
மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு குடியிருப்பிலிருந்து சாலையில் இணையும் பொழுதும், சாலை
சந்திப்புகளிலும் போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். சாலை
ஓரங்களிலும், சாலை சந்திப்புகளிலும் பாதசாரிகள் செல்லவும், சைக்கிளில்
செல்வோருக்காகவும் பாதை அமைத்து முன்னுரிமை கொடுக்கப்படும்.

போக்குவரத்தில் விபத்தின்றிச் செல்ல விளக்குகள் (Traffic signals), வேகத்தின்
அளவு (Speed limit), தடுப்புகள் (Barriers), அடையாளங்கள் (Signs), ரோட்டோரத்
தடுப்புகள் (Curbs), வாகனங்கள் முறையாகச் செல்ல, முந்திச் செல்ல எனவும்
தடம் (Lanes) அமைந்திருக்கும்.

சாலையில் போக்குவரத்தின்போது என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாதவாறு
இருந்தால், வாகன ஓட்டுனர்களும், பாதசாரிகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள்
என்பதை அறியவும், விபத்தின் அளவு குறைகிறதா என்பதை அறியவும் குறிப்பிட்ட
லண்டனில் உள்ள Exhibition Road ல் பரீட்சார்த்தமாக எல்லாவிதமான போக்கு
வரத்து அடையாளங்களையும் முற்றிலும் எடுத்துவிட்டார்கள்.

போக்குவரத்து அடையாளங்கள் முற்றிலும் நீக்கப்பட்ட, எந்தவித போக்குவரத்து
ஒழுங்குபடுத்தும் அடையாளங்களும் இல்லாத தெரு 'நிர்வாணத் தெரு' (Naked Street)
எனப்பட்டது. லண்டன் கென்சிங்டனில் உள்ள Exhibition Road ல் இது அறிமுகப்படுத்தப்
பட்டது. லண்டன் நகரின் முக்கியமான, போக்குவரத்து மிகுந்த இந்த தெருவில்தான்
பெரிய பெரிய அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை 17.08.2014 அன்று Natural History museum சென்று வந்தோம்.
திருவிழாக் கூட்டம்தான். வாரநாட்களில் லண்டன் நகருக்குள் காரில் செல்ல congestion
charge என்று 11.5 பவுண்டுகள் கட்ட வேண்டும். காரை 2 மணி நேரம் மட்டுமே பார்க்
செய்ய 9 பவுண்டுகள் கட்ட வேண்டும். எனவே வாரநாட்களில் லண்டன் நகருக்குள்
காரில் வருவதைப் பலர் தவிர்த்து விடுவார்கள்.

சனி, ஞாயிறு, மற்றும் பாங்க் விடுமுறை நாட்களில் வாகனங்களை குறிப்பிடப்பட்ட
இடங்களில் இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்.

Exhibition Street, தெற்கு கென்சிங்டன் ட்யூப் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே Hyde Park
(இங்குதான் 1851 ல் பெரிய பொருட்காட்சி நடத்தப்பட்டது) வரை நீள்கிறது.

இந்த ரோட்டின் தெற்குக் கடைசியில் இஸ்லாமிய மையமும் (Islamic Centre),
இதன் பின்பகுதியில் விக்டோரியா & ஆல்பர்ட் காட்சியகமும், Natural History museum,
Science museum மற்றும் ரோட்டின் கிழக்குப் பகுதியில் The Church of Jesus Christ of
Latter-day Saints ம் (LDS Church / Mormon Church என்றும் அழைக்கப்படுகிறது),
மேற்குப் பகுதியில் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் முகப்பும் இருக்கின்றன.

Royal Borough of Kensington நிர்வாகத்தால், கலாச்சார முக்கியத்துவம் பிரதிபலிக்கும்
வகையில் The Exhibition Road Project என்ற ஒரு திட்டம் அத்தெருவின் அமைப்பை
மேம்படுத்த வகுக்கப்பட்டது. கட்டடங்களின் நிர்மாணிப்பை கலையம்சத்துடன்
அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இந்தச்சாலையின் வழியாக வாகனப் போக்குவரத்தைக் குறைக்கவும், வாகனங்களின்
வேகம் 20 MPHக்கு மிகாமல் செல்லவும், பாதசாரிகளுக்கு முக்கியத்துவம்
தருவதுமே இத்திட்டத்தின் பொது நோக்கம் எனப்படுகிறது.

இந்த சாலை முழுவதும் உயர்தர வெளிர் மற்றும் அடர்நிற கிரானைட் கற்களால்
தளம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சாலை முழுவதும் பாதசாரிகளும், பார்வையாளர்களும் உணவகங்களின்
வெளியிடங்களில் அமர்ந்து உண்ணவும், Exhibition சாலை நெடுகிலும் Hyde Park
வரை உள்ள அருங்காட்சியகங்களையும், கல்வி நிறுவனங்களையும் எளிதில்
கண்டு களிக்கவும் ஏதுவாக இருக்கிறது.

'Legible London' என்ற கொள்கை அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும்
பார்வையாளர்கள் வசதிக்காக தகுந்த வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகள்
ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Aug-14, 1:24 pm)
பார்வை : 255

மேலே