ஒரு தேவதையின் குரல் கேட்கிறதா-வித்யா

ஒரு தேவதையின் குரல் கேட்கிறதா.?-வித்யா
காதலிக்கச் சிறந்த இடம்
புவியன்றி வேறில்லை
என்றுதொடங்கும் இக்கவியிலும்
காதலில்லாமல் இல்லை..........!!
ஏனெனில்.......
விண்தொடும் மரங்கள்
மண்தொடும் சருகுகள்
சுகந்தம் தரும் வாசங்கள்
இனிமை தரும் குயிலோசைகள்
சுகம் தரும் வண்ணங்களென
பசுமை ததும்பும்
பிரதேசமெல்லாம் சொர்க்க பூமியே.......!!
ஒவ்வொரு இலையுதிர் காலமும்
ஓராண்டு முடிதலின் இறுதிச்சடங்கு
என்பேன்.......
இயற்கைக்கு மரணமே
இல்லை...
நாம் கோடரி ஏந்தும்
வரையில்....
இலையுதிர் காலத்தில்
பழையன கழித்து
புதியன புகுத்தி
தம்மை புதுப்பித்துக்கொள்கின்றன.......!!
என் தந்தையின்
ஊன்றுதலில் உயிர்பிடித்த
"அந்த நாவல் மரமே"
இக்காதல் கவி நாயகி..!!
வேர்கள் விருட்சங்களென
வளர்ந்தபோது என் தந்தை
அதன் வேரிலிருந்து தண்டுகடந்து
பூவிற்குள் நுழைந்திருக்கவேண்டும்
அம்மரத்தின்
செய்நன்றி அறிதலில்...........!!
தூசுகளும் இளைப்பாறும்
அந்நாவல் இலைகள்கூட
மணக்கின்றன...........!!
கூண்டுக்குள் அடைபட்ட
ஜோசியக்கிளியைப்பார்த்தே
பழகிப்போன எனக்கெல்லாம்
நாவல்பழம் தின்னும்
கிளிக்கூட்டங்கள் அதிசயம் தான்.......!!
சில சமயங்களில்
குயில்களின் விஜயங்களிலும்
சிலாகித்ததுண்டு......!!
ஓராண்டுக்குமுன்
ஒரு கோடரி
ஏந்திய கை
அதனை வதம் செய்ய
ஆரம்பித்த அந்த நொடி....
இன்னும் என் நினைவில்......!!
கொத்தான இலைகள்
கிளைகளினோடே சரிந்தன.........
பிரசவிக்காத பூக்களும்
நாவல் பிஞ்சுகளும்
பழங்களுமென..........
ஒரு சாம்ராஜ்ஜியமே
சரிந்தது..........!
பட்சிகள் படபடத்து
புதுவீடு தேடி ஓடின.....
கண்ணிற்கு புலனாகா
பூச்சிகள் மண்ணில் மடிந்தன.......
எங்கள் தோட்டத்தின்
சிம்மாசனமாய் இருந்த
அந்த நாவல் மரத்தின் சுவடுகள்
இன்றும் அம்மண்ணோடு
ஒட்டிக்கொண்டிருந்தன...........!!
ஆயினும் அவ்விடம்
வெற்றிடமாகவே இருந்தது.......
"அந்த தேவதையின் கதறலை எதிரொலித்துக்கொண்டு"
இன்று ஒரு குட்டி
இளவரசியை
அதே இடத்தில்
நட்டு வைத்திருக்கிறேன்.....!!
இனி மீண்டும்
என் தோட்டத்தில்
கிளிகள் உலவும்
குயில்கள் பாடும்........!!
**********************************************************************************************************************************************************
இப்போது
உங்களுக்கும் கேட்டிருக்குமே
"என் தோட்டத்து தேவதையின் குரல்"