ஓர் எழுத்தாளனின் கதை- இதுவரை - II - --சந்தோஷ்

ஓர் எழுத்தாளனின் கதை

இதுவரை..2


தினகரன்..........! பின்னாளில் ஒரு மிகப்பெரிய பிரபல கவிஞனாக, எழுத்தாளராக மாற்றுப்போகும் மிக முக்கியமான மூன்றாண்டு போர்களம்தான் இந்த கல்லூரி வாழ்க்கை.

கல்லூரியில் முதல் ஆண்டு முதலாம் நாள் :

உளவியியல் துறை தலைவர் தன்னை மாணவர்களிடம் அறிமுகம் செய்துவிட்டு, மாணவர்கள் தங்களை அறிமுக செய்துக்கொள்ள வேண்டினார்.
வரிசையாக மாணவர்கள் எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

ஐ ம் தீப்தி ஃப்ர்ம் ஊட்டி..! ஐ விஷ் பிகேம் ஏ லாயர். பிகாஸ் மை ஃபாதர் ஆல்சோ லாயர்.

ஐ ம் சந்துரு ஃபர்ம் சேலம். ஐ ம் நாட் யெட் செட் மை கோல்.


ஆங்கில நெடியில் தமிழ் துளிர்க்க விரும்பவில்லை என்ற சூழ்நிலை அங்கு நிலவியது

தினகரனின் வரிசை வந்தது.
ஆங்கிலத்தில் திறமையான மொழி ஆளுமை இருந்தாலும் அவன் தமிழில் பேசவே விரும்பினான்.

” sir can i speak in tamil . is it offense here? “ சரளமான ஆங்கில உச்சரிப்பில் கேள்வி கேட்ட தினகரனை நோக்கி.. துறைத்தலைவர்.

“ நோ நீ தமிழ்ல பேசலாம். ஆனா இங்க பலமொழி பேசும் மாணவர்களும் இருக்காங்கப்பா. அதுக்குத்தான் இங்கிலீஷ்ல பேசுகிறோம். சரி நீ சொல்லு “

கல்லூரியில் அவனுக்கான முதல் அவமானம் ஆரம்பித்தது.


”என் பேரு தி தீஇ தீஈ தி தி தினகரன்.” திக்கி திக்கி வந்த அவன் உச்சரிப்பை கேட்டு அந்த வகுப்பறையில் இருக்கும் மாணவிகளில் சிலர் வாய் பொத்திக்கொண்டு, கண்களில் ஏளனத்தை தினகரன் மீது விட்டெறிந்து சிரித்ததை கவனித்த துறைத் தலைவர்.

” கேர்ள்ஸ்..! இப்படி பேசுபவர்களை பார்த்து இதுப்போல சிரிப்பது எனக்கு பிடிக்காது. .தினகரன் நீ ரிலாக்ஸ் பண்ணிட்டு பேசுப்பா. இங்க எல்லாரும் உன் ப்ரெண்ட்ஸ்தான். நானும் கூட .. ம் தென் உன்னோட இலட்சியம் என்ன ?”

” தேங்க்ஸ் சார்..! நான் எப்படி என்னாவாக போகிறேன் ? தெரியலை சார். காலேஜ் பைனல் இயர்ல முடிவெடுத்துக்கிறேன். பட் நான் கிரேட் லெஜண்ட் முத்துமாணிக்கம் ஐயாவை போல கம்பீரமா தமிழ்ல பேசி ,இந்த உலகமே என்னை திரும்பி பார்க்க வைக்கணும் “ என்று திக்கியும் சில சமயம் சரளமாகவும் பேசிய தினகரனை பார்த்து “ யெஸ் உன்னால முடியும் தினகரா..! “ என்று தன்னம்பிக்கை கொடுத்து பாராட்டினார் அந்த உளவியல் துறைத் தலைவர்.

முதல் நாள் சில நண்பர்களின் அறிமுகத்தால் கொஞ்சம் மகிழ்ந்தாலும் வகுப்பறையில் சிரித்த அந்த சில பெண்களின் மேல் இவனின் கோபம் தீரவில்லை.

அந்த கல்லூரியில் முழுக்க முழுக்க ஆங்கிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் இருந்தது. அங்கு இளங்கலை , முதுகலை பட்டப்படிப்புக்காக நல்ல வேளையாக தமிழ் துறை இருந்திருக்கிறது. தினகரனுக்கு இது கல்லூரியின்
முதல் ஆண்டு என்பதால் தமிழ் பாடமும் அவனின் பாடத்திட்டத்தில் இருந்தது. அதில் இருக்கும் சில இலக்கியங்களை ரசித்து படித்து தமிழ் பேராசிரியரிடம் விளக்கம் கேட்பான். இவனின் தமிழ் ஆர்வத்தை கண்டு தினகரனுக்கு கவிதை எழுத ஆர்வத்தை தூண்டினார்.

கவிதை எழுத முதன் முறையாக பேனா பிடிக்கும் கன்னி கவிஞர்களுக்கு -காதல்- அல்லது --நிலா-- இதுதான் கருப்பொருளாக இருக்கும். தினகரனுக்கும் நிலா தான் கவிதை எழுத மையப்பொருளாக இருந்தது.

வணக்கம் நிலவே !
அங்கே
எங்கள் பழமொழி
பாட்டி நலமா?.
உன்னை சுற்றி
நட்சத்திரங்களாக
வானில் சிந்தியிருப்பது
பாட்டி சுட்டுப்போட்ட
வடைகள் தானோ..!


முதன் முறையாக அவன் எழுதிய கவிதையில் ஒரு தனித்துவத்தை உணர்ந்த தமிழ் பேராசிரியர் அவனை உற்சாகப்படுத்திகொண்டே இருந்தார்.

தமிழ் துறை -இலக்கிய பேரவை சார்பாக கவியரங்க போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தினகரனை பங்கேற்க வைக்க வேண்டும் என்று தமிழ் பேராசிரியர் விரும்பினார்.


கவியரங்கத்தில் தினகரனால் திக்காமல் பேச முடியாது என்றாலும் அவனுக்கு ஒரு தன்னம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக அந்த பேராசிரியர் எடுத்த முயற்சி தினகரனுக்கு பெரும் அவமானத்தை கொடுக்கலாம் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அவனின் எழுதும் ஆர்வம் சீர்குலைக்கும் அந்த கவியரங்க போட்டி நடக்கும் நாள் வந்தது.

கவியரங்கம் நடக்கும் நாள்.

கொடுக்கப்பட்ட தலைப்பில் பல மாணவர்கள் தங்களது கவிதை திறனை காட்டி, மொழி உச்சரிப்பில் வசீகரமாக பேசி பார்வையாளர்களை கவர்ந்தார்கள். அதில் பெரும்பாலும் தமிழ் முதுகலை,பட்டப்படிப்பு மாணவர்கள். இவர்களுக்கு இணையாக தமிழ் ஆர்வலன் என்ற அளவில் மட்டும் ஓரளவு தமிழ் அறிவு பெற்றுள்ள இளங்கலை உளவியல் முதலாமாண்டு மாணவன் தினகரன் என்ன பேசி எப்படி அவனின் கவி திறமையை நிரூபிக்க போகிறான் என்று அங்குள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.
அதில் மிக முக்கியமாக கவியரங்க சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர், பிரபல நாவல் எழுத்தாளர் ”மின்னல் பாபு” என்பவரும் தினகரனின் கவிதை வாசிப்பை ஆவலுடன் எதிர்நோக்கினார்.

தனக்கு இருக்கும் தன்னம்பிக்கை காரணமாக , வாழ்க்கையில் முதன் முறையாக மேடை ஏறினான்.

ஒலிவாங்கி முன்னால் நிற்பதற்கு முன் மேடையிலிருந்த சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பெரியவர்களை வணங்கி விட்டு பேச ஆரம்பிக்கும் முன் அவனின் தமிழ் பேராசிரியர் சொன்ன “-----------
நிதானமாக பேசு,
உச்சரிப்பில் கவனம்,
வார்த்தைகள் திக்குகிறது என்றால் நிறுத்திவிடு
உள் மூச்சை வெளியிட்டு பின்பு வாசி,
பரிசு என்பது முக்கியமல்ல.
உன் திறமை பேசப்படவேண்டும்.. “
என்ற அறிவுரைகளை கவனத்திற்கு கொண்டு வந்தான்.

ஒலிவாங்கி அவனின் குரலை உள்வாங்க தன்னை தயார்ப்படுத்திக்கொண்டது. பேச ஆரம்பித்தான். ஒவ்வொரு வார்த்தையிலும் திக்கி விடக்கூடாது என்ற கவனம் அவனுக்கு இருந்தது.

“ என் தமிழ் தாய்க்கு முதல் வணக்கம் ! , மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர் ஐயா அவர்களுக்கும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் என் பணிவான வணக்கம் ! , அரங்கத்தில் கூடியிருக்கும் ஆசிரியர் பெருமக்கள், மாணவ தோழமைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம் !


கவிதை ரோஜாவை
பறித்து, படித்து
தூவ விடுகிறேன்.
மீறியும் முள்ளாக
தவறுகள் உங்கள்
மீது விழந்தால்..

சிறுபிள்ளை செய்த
பிழையாக எண்ணி
என்னை மன்னியுங்கள்.

(தனக்கான முதல் கைத்தட்டல்களை அந்த அரங்கத்தில் பெற்றுக்கொண்டான். அடுத்த சில நொடிகளில் கைத்தட்டிய கைகள் இவனை கைநீட்டி வசைப்பாடும் என்று யாரும் அங்கு எண்ணியிருக்க வாய்ப்பில்லை)


”ஜாதிகளை ஒழிப்போம்” இதுதான் தலைப்பு

தலைப்பு வாசித்து முதல் வரியை படித்தான்

.” ஆதி ............................................. “ ஏனோ தீடிரென்று தினகரனுக்கு மறதி வந்துவிட்டது... யோசிக்க நேரம் எடுக்க எடுக்க , அரங்கத்தில் மாணவர்கள் கூச்சல் செய்வதை பார்த்தவனுக்கு சற்று பதற்றம் அதிகரித்தாலும் நினைவுக்கு கொண்டுவந்த வரிகளை சொல்ல ஆரம்பித்தான்.

ஆதிக்கப்படுத்தும் ஜாதிகளை
கொளுத்திடுவோம்
சாதிக்க பிறந்த மானிடனே
உ ... உ.... உ....... உன்... ................ ... (திக்கி பேசுவதை கேட்டு மீண்டும் அரங்கத்திலுள்ள சில குறும்புக்கார மாணவர்கள் அவனை பார்த்து ஏதோ கூச்சலிட.. ஒருவிதமான பரபரப்பு சூழ்நிலை தினகரனுக்கு ஏற்பட்டுவிட்டது. மீண்டும் பேச முயற்சித்தும் அவனால் திக்காமல் பேச முடியவில்லை.)

மேலும்,

தினகரன் திக்கி திணறி பேசுவதை பார்த்த கவியரங்க சிறப்பு விருந்தினர், “எழுத்தாளர் மின்னல்பாபு ”முகம் சுளித்து ஏதோ சொல்ல, கல்லூரி முதல்வர் தினகரனை நோக்கி

“ ம்ம் என்னாச்சு. ? ஒழுங்கா படி.! இல்லைன்னா கீழ இறங்கு...”

“ ச ச சார் இ இ இப்ப .. பேசிடுறேன் சார் “ என்று எப்படியோ கவிதை முழுவதுமாய் வாசித்திட வேண்டும் என்று தீர்க்கமாக நின்றாலும் தொடர்ந்து அவனால் வாசிக்க அங்குள்ள சூழ்நிலை அவனுக்கு கைக்கொடுக்க வில்லை.

மின்னல் பாபு கல்லூரி முதல்வரிடம் “ அவனை கீழே இறக்கிவிடுங்க.. பரிசு கொடுத்துட்டு நான் வேற ஒரு விழாவிற்கு போகணும். நல்ல பேசுகிறவனை கூப்பிட்டு பேச வச்சிருக்கலாமே “ என்று சொன்னதை கல்லூரி முதல்வர் அதை பெரிய அவமானமாக எடுத்துக்கொண்டார். அந்த வேகத்தில் எழுந்து தினகரனின் கையை இழுத்து கீழே இறக்கி விட்டார். இழுத்த வேகத்தில் அவன் கால்கள் தடுமாறி படிக்கட்டில் உருண்டவாறே மேடைக்கு கீழே வந்தான் .

அங்கிருக்கும் அனைவருக்கும் முன் தான் அவமானப்படுவதை தினகரனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அந்த சம்பவத்தால் அவனுக்கு நெஞ்சம் பாரமாகிவிட , ரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்க, அவனின் மூளைக்குள் ஒரு ரசாயன பாதிப்பை கொடுக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரை அடக்கிக்கொண்டு அரங்கத்தை விட்டு வெளியேற புறப்பட்டான். அப்போது அவனின் சக மாணவி காவியா, அவனை நோக்கி ஓடி வருகிறாள்.
“ தினா.... வெயிட்.. ! டென்ஷன் ஆகாதே..! நீ எழுதின கவிதையை கொடு நான் வாசிக்கிறேன். ”

காவியா.....!

தினகரனின் கவிதைக்கு ரசிகை. இதுவரை தினகரனிடம் அவ்வளவு நெருக்கமான சிநேகம் கொண்டதில்லை என்றாலும் தினகரன் மேல் அவளுக்கு ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது.

” தினா...!! ஏன் இப்படி நிக்கிற.. ? “ காவியா முதன்முறையாக தினகரனின் தோள்களை பற்றி தோழியாக தன்னை காட்டிக்கொள்ளும் தன்னிச்சையாக நிகழ்கிற தருணம் அது.

”தினா.. பேசுடா..! நான் காவியா...டா... உன் கவிதை கொடு.. நான் பேசி நீ யாரன்னு காட்டுறேன். நீ அவமானப்பட்ட இதே இடத்தில உனக்கு பேர் வாங்கி தரேன் டா... ப்ளீஸ் அந்த கவிதை எழுதின பேப்பர் எங்க...? “

தினகரனுக்கு எதுவும் காதில் விழவில்லை. உணர்ச்சியற்ற , வெட்டிப்போட்ட ஒரு மரமாகவே காணப்பட்டான்.

“ தினா.. தினா..! என்னாச்சு... ?“

” ஐயோ மேம்... தினா கிழே விழுந்துட்டான்..........” காவியா கதறல் ஒலியை கேட்ட தமிழ் பேராசிரியர் ஓடிவந்து பார்க்கிறார்.

”தினகரன்... ”என்று சத்தமாக பேராசிரியர் கத்தினாலும் அவனுக்கு ஏதும் கேட்கவில்லை...

---அதீத உணர்வுகள் அவனின் மூளையை பாதிப்புக்கு உள்ளாக்கும்.----
இதற்குமுன் ஒரு விபத்தில் இவன் அதிர்ச்சியுற்ற சமயத்தில் அவனை பரிசோதனை செய்த மருத்துவர் கொடுத்த மருத்துவ அறிக்கை இது. உண்மையாகிவிடுமோ ?

மறுநாள் காலை - தனியார் மருத்துமனை...!

”ஹாய் அங்கிள் ! தினாவுக்கு இப்போ எப்படி இருக்கு.? ” காவியா தினகரனின் தந்தையிடம் கேட்க

“வாம்மா.! தினகரனுக்கு இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லம்மா. .. ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. ம்ம் எங்களை விட நேத்து நீதான் ரொம்ப துடிச்சு போயிட்ட.. உன்னை போல நல்ல பொண்னை இதுவரை நான் பார்த்தில்லம்மா. நன்றிம்மா”

“அங்கிள்..! நன்றியெல்லாம் நீங்களே வச்சிக்கோங்க.. என்னை தனியா பிரிச்சு பேசுறீங்க பார்த்தீங்களா “ என்று மெலிதாய் அழகாய் வசீகரமாய் புன்கைத்தாள்.

நேற்று தினகரன் தீடிரென மயங்கி விழுந்துவிட்டான் என்று மட்டும்தான் தினகரனின் தந்தையிடம் காவியா மற்றும் கல்லூரி தமிழ் பேராசிரியர் சொல்லியிருந்தார்கள். தினகரன் கல்லூரியில் பட்ட அவமானத்தை அவரிடம் சொல்வதற்கு விருப்படவில்லை. அவர் மனம் புண்பட்டுவிடும் என்ற காரணமாகவும் இருந்திருக்கலாம்.

சிறிது நிமிடங்கள் கழித்து கண் முழித்த தினகரன் “ ஹாய் .. எப்ப வந்தீங்க “ காவியாவை பார்த்து தினகரன்.

”என்ன ங்க.. நொங்கன்னுட்டு.. .. கொன்னுடுவேன் படுவா..” அவளையும் அறியாமல் ஒர் உரிமையை தினகரனிடம் காட்டினாள்.
“சரி.. எப்படி இருக்கு உன் உடம்பு..? எங்கப்போனாலும் கூடவே வருதா..? “ காவியா தினகரனை புன்னகைக்க வைத்தாள்.

இதை கவனித்த தினகரனின் பெற்றோற்கள் மெலிதாக சிரிக்க,, அங்கு நிலவிய கணத்த சோக சுவடுகள் உடைத்தெறியப்பட்டன. காரணம் காவியாவின் வருகை.

சற்று நேரத்திற்கு பிறகு ..!

தினகரனுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவன் தலையை பல கோணங்களில் படமெடுத்தது அந்த ராட்சத எந்திரம். பின்பு தினகரனின் தந்தையிடம் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஏதோ தீவிரமாக விளக்கம்
கொடுத்திருக்க..--சூரியன் வான மேகத்தின் பிண்ணனியில் தன்னை மறைத்து மறைத்து விளையாடி கொண்டே அன்றைய தினத்தின் கடமையை முடித்து தன்னை விடுவித்துகொண்டது. --

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த தினகரனின் மனதிற்குள் கவியரங்க சம்பவம் ஆறாத வடுவாக அமைந்துவிட்டது. அவன் மனதில் தீர்க்கமான ஒரு முடிவு எடுத்திருந்தான். அதை அடுத்தநாள் கல்லூரிக்கு சென்றவுடன் காவியாவிடம் சொல்லிடவும் முடிவு செய்திருந்தான்.

அடுத்த நாள்..
கல்லூரி கேண்டீன்..!

காவியாவும் தினகரனும் பெப்சி அருந்திக்கொண்டே...


” காவியா ! உன்கிட்ட ஒன்னு சொல்லனும். காரணமெல்லாம் கேட்க கூடாது.சரியா? “ தினகரன்.

“ ம்ம் என்ன சொல்லுடா ... டா போடலாம்ல.. எனக்கு இது பிடிக்கும் “

“ ம்ம் சரி உன் இஷ்டம். இனி நான் கவிதை எழுதமாட்டேன். எனக்கு பிடிக்கல. போதும் நான் பட்ட அவமானம் “

கவிதை எழுகிறான் என்பதால்தான் தினகரனின் மீது ஒர் ஈர்ப்பு வந்து அது நட்பாகி வளர்ந்து வரும் வேளையில் தினகரன் இப்படி சொல்லுவான் என்று காவியா எதிர்பார்க்கவில்லை

“ என்ன சொல்ற நீ....? காரணம் கேட்ககூடாதுன்னு சொன்ன.. காரணம் எனக்கு புரியுது. உனக்கு திக்கு வாய் ப்ராப்ளம். உன்னால சரியா ஸ்டேஜ் ப்ரெசன்ஸ்டேசன் பண்ண முடியாதுன்னு நீயே உனக்கு காம்பளக்ஸ் கிரியேட் பண்ணிக்காதே “

“ அப்படீன்னு இல்ல.பட் எனக்கு பிடிக்கல “

“ கவிதை எழுதமாட்டேன்னு சொன்னா என்கிட்ட பேசாதே... இப்படி கோழையா இருக்க..! மேடை ஏறி பேசினாதான் கவிதையா. ஏன் எழுதினா கவிதைன்னு யாரும் ஒத்துக்கமாட்டேன்னு சொன்னாங்களா “

“ அப்படிலாம் இல்ல.. நான் இங்க படிக்கதான் வந்திருகேன். அத மட்டும் ஒழங்கா பண்ணினா போதும்ன்னு நினைகிறேன் ப்பா “

“ அப்பா.........! பாருடா.. படிக்க வந்தீங்களோ...? நாங்க மட்டும் மாடு மேய்க்கவா வந்திருக்கோம்.. “

குபீரென சிரித்தான் தினகரன். முகம் மலர்ந்த இருவரும் தோழமை பூக்களாய் புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.

” தினா..! உன்கிட்ட இருக்கிற டேலெண்ட் சம்திங் ஸ்பெஷல் டா. எல்லாருக்கும் எழுத வராது. எனக்கு கூட குரல் நல்லா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. பட் கவிதை எழுத தெரியாதே . ஓகே வா... இந்த கவிதைன்னு ஒன்னு இல்லாமா இருந்தா இந்த உலகம் என்னாவாகி இருக்கும் தெரியுமா....? யோசி !! யோசி !! .
உனக்கு இருக்கிற ப்ராப்ளம் நத்திங்டா.... சைக்காலாஜி படிக்கிறோம்.. ஸ்சோ உன் திக்குவாய் நல்லவாயா உன்னாலேயே மாத்திக்கலாம் “

“ ம்ம் நல்லா பேசுற காவியா. பிடிச்சிருக்கு “ என்றான் தினகரன்.

அந்த “ பிடிச்சிருக்கு “ என்ற வார்த்தையில் பல அர்த்தங்களை கண்டுப்பிடிக்கலாம், ஆம் காதல் பூக்கும் தருணங்களில் .........!

காவியாவிற்கு தினகரனின் “ பிடிச்சிருக்கு “ என்ற வார்த்தை அவளுக்கு பிடிச்சிருக்கு.

ஆனால் தினகரனுக்கு காதல் என்றாலே கசப்பு மருந்தை சாப்பிடுவதை போல வெறுக்கும் குணம் கொண்டவன்.

கசப்பு மருந்தை இனிப்பு தேனாக மாற்றிடுவாளா காவியா. ? தினகரனின் வாழ்க்கையில் காதல் கவிதை வாசிக்கப்படுமா?
கேள்விகளுக்கு பஞ்சமில்லை. விடைகள் தான் எப்போதும் ஒர் ஆச்சரியக்குறியை தாங்கி கொண்டிருக்கும்.
தினகரனின் மருத்துவ அறிக்கையை போல....!

--(தொடரும்)

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (7-Sep-14, 12:23 am)
பார்வை : 291

மேலே