குடிமகனுக்கு ஒரு கடிதம் நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

குடிமகனுக்கு ஒரு கடிதம்!
நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா. 9282111071.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் கணபதி அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. பேச : 92821 11071. விலை : ரூ. 55
*****
நூலாசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஓய்வின்றி தொடர்ந்து நூல்கள் எழுதி வெளியிட்டு வரும் படைப்பாளி. ஒவ்வொறு நூலையும் சமகால படைப்பாளிகளுக்கு காணிக்கை ஆக்கி வருகிறார். இந்த நூலை பல்வேறு தொகுப்பு நூல்களில் கவிதை எழுதி வருபவரான கவிஞர் முனைவர் கஸ்தூரிராசா அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்.
முன்பு யாராவது ஒருவர் குடிப்பார். குடித்தது வெளியே தெரிந்தால் அவமானம் என்று தலையில் முக்காடு போட்டு செல்வார். ஆனால் இன்று மதுக்கடை பெருகிவிட்ட காரணத்தால் குடிப்பவர்களும் பெருகி விட்டனர். குடிக்காதவர்களை கேலி செய்யும் அளவிற்கு சமுதாயம் சீர்கெட்டு விட்டது. குடிக்காதவர் முக்காடு போட்டு செல்லும் நிலை வந்து விட்டது. குடியின் கேடு குறித்து ஒரு நூல் முழுவதும் முழுக்க முழுக்க பாடுபொருளாகக் கொண்டு லிமரைக்கூ வடிவிலேயே வடித்து இருப்பது சிறப்பு.
இந்த நூலை ஆழ்ந்து படித்து சிந்தித்துப் பார்த்தால் குடிகாரர் குடியை விட்டு விடுவார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மிக நுட்பமாக குடியின் கொடுமையை நன்கு உணர்த்தி உள்ளார். ஒருவருக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் குடிகாரராக இருந்தால் பிறர் மதிப்பதில்லை என்பது உண்மை.
கற்ற கல்வி தேனானது
பெற்ற புகழ் நாசம் ஆகி
குடிகாரன் என்றே வீணானது!
தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்று ஆகி விட்டது. மனக்கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை பாழ்.
தெருவெல்லாம் இருக்கிறது மதுக்கடை
உன்னை நீயே வென்று வாகைச் சூடி
மனதிற்குப் போடு தடை!
சொல் விளையாட்டு விளையாடி நூல் முழுவதும் புத்தி புகட்டி உள்ளார். பாராட்டுக்கள். முதல் வரியின் கடைசியும், மூன்றாம் வரியின் கடைசியும் ஒன்றி வர வேண்டும். இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு நயத்துடன் லிமரைக்கூ இலக்கணத்துடன் நன்கு படைத்துள்ளார்.
உழைக்காத சில சோம்பேறிகள் மனைவி உழைத்து சேமித்து வைத்திருக்கும் பணத்தை திருடி விட்டு குடிக்கச் செல்லும் அவலம் பல குடும்பங்களில் நடந்து வருகின்றது.
மனைவி சேமித்த காசு
திருடிச் சென்று குடித்து விட்டாய்
மதிப்பில் நீயொரு தூசு!
குடியை பழகிவிட்டு அதனை மறக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் விதமாக கவனத்தைக் குடியிலிருந்து விட்டு புத்தகத்தில் செலுத்து என்கின்றார்.
குடிக்கும் பழக்கத்தை தீயிடு
நூலகத்தில் உள்ள நல்ல நூல்களை
தினமும் கையில் நீயெடு !
யானை போன்ற பலம் மிக்கவனும், குடிப்பழக்கத்தால் சீரழிவான் என்பதை நன்கு உணர்த்திடும் லிமரைக்கூ நன்று.
குடியறியாதவன் பலமிக்க யானை
குடித்து சீரழிபவன் ஒன்றுக்கும் உதவா
உடைந்த மண் பானை!
மதுவைக் குடிப்பதால் அது நம் உடலில் உறுப்புகளை அரித்து வாழ்நாளை குறைத்து விரைவில் மரணத்திற்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்கள், சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்ற முன்வர வேண்டும்.
மது ஒரு திருடன்
உன் உள் உறுப்புகளை திருடிவிடும்
நீ ஒரு மூடன்!
சிலர், தான் குடிப்பதோடு நின்று விடாமல், நண்பர்களையும் வலுக்கட்டாயமாக குடிக்க பழக்கி விடும் தீயவர்களும் இருக்கின்றனர். ஆனால் நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். “நண்பனை குடி என்று சொல்பவன் நண்பனே அன்று” என்பதை உணர் வேண்டும். குடிக்கச் சொல்லும் நண்பனிடமிருந்து நட்பை முறித்துக் கொள்வது நல்லது.
குடிக்கச் சொல்லும் நண்பன்
மாற்று உண்மையில் அவன்தான்
உனது வருங்காலப் பகைவன்!
உண்மை தான். நண்பர்களாக மதுக்கடை உள்ளே சென்று மதுவை குடித்து விட்டு, தன்னை மறந்து சண்டையிட்டு பகைவர்களாக வெளியே வரும் அவலம் நாள்தோறும் நடக்கின்றது.
சமுதாயம் நம்மை மதிக்க வேண்டுமென்றால், குடிப்பழக்கம் கூடாது. சாதனைகள் நிகழ்த்த வேண்டுமென்றால் குடிப்பழக்கம் கூடாது. புகழ் பெற வேண்டுமென்றால் குடிப்பழக்கம் கூடாது.
நல்லோரை வாழ்த்தும் நாக்கு
நலமில்லா மதுவை குடித்து சீரழிந்தால்
நீ கிழிந்துப் போன சாக்கு!
குடியின் காரணமாக கிழிந்த சாக்கு ஆவாய் என்று நன்கு உணர்த்தி உள்ளார். இப்படி நூல் முழுவதும் மதுவிலக்கை வலியுறுத்தும் லிமரைக்கூ வடித்துள்ளார். மதுவிலக்குத் துறையின் சார்பில் இந்த நூலிற்கு விருது வழங்கி நூலாசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்களை கௌரவிக்கலாம். அவர்கள் தொடர்ந்து எழுதிட ஊக்கமளிப்பதாக இருக்கும்.
இன்றைய இளைஞர்கள் பலரும் நண்பர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பீர் குடிக்கிறோம் என்று ஆரம்பித்து பிராந்தி, ரம் என்று பழகி வருகின்றனர். நமது பண்பாடு மறந்து, சமுதாயம் சீரழிந்து வருகின்றது. குடியை நாம் தடுக்காவிட்டால் சமுதாயம் சீரழிந்து விடும். இளைஞர்கள் சாதிக்க வேண்டிய வயதில், குடிக்கு அடிமையாகி வாழ்வை இழக்கின்றனர். பல்வேறு குற்ற செயல்களுக்கும் உந்து சக்தியாக, காரணியாக குடியே உள்ளது.
வாழ்வோடு ஏன் தகராறு
அரிதான வாழ்வில் மேம்பட அறிந்தால்
வாழ்க்கை ஒரு வரலாறு!
குடியை ஒழித்து நல்ல வரலாறு படைக்க உதவும் நூல் எழுதிய நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.
.