ஓர் எழுத்தாளனின் கதை- இதுவரை- III - --சந்தோஷ்

இதுவரை..3
----------------------------------------------------------
காவ்யா- தினகரன் நட்பு தொடர்கிறது. அந்த உறவு --நட்பு எல்லைக்குள் காதல் விளம்பினை தொட முயற்சிக்க ஆரம்பித்துவிட்டது.
தினகரனின் கல்லூரி படிப்பின் முதலாமாண்டில் அவன் காவியாவின் வற்புறுத்தலுக்காகவே பல கவிதைகள் எழுதினான். அதை அவனின் தமிழ்பேராசிரியரிடம் காவியா தான் காண்பித்து கருத்து கேட்பாள்.
இப்படியாக தினகரன் கல்லூரி வாழ்வின் முதல் ஆண்டின் இறுதி நாட்கள் வரை உருண்டு வந்துவிட்டன.

தமிழ் ஆர்வலன் தினகரன் என்றாலும் அவனுக்கு தமிழில் தெளிவான புலமை இல்லை. ஏதோ ரசிப்புத்தன்மையில் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான் . அது அவனுக்கான அடையாளமாக மற்றவர்களால் பார்க்கப்படுகிறது. தமிழ் பேராசிரியர் அவனுக்குள் இருக்கும் எழுத்து திறனை வெளிக்கொணர வைத்தாலும் அவனை தமிழ் மொழியில் புலமை பெற வைக்க முயலவில்லை. அது தேவையாகவும் அவர் ஏனோ கருதிடவில்லை. அந்த அளவிற்கு அவனின் கவிதையில் ஒரு ஈர்ப்பு இருக்கும், படிப்பவர்களை கவர்ந்திடும் அளவில் அவன் கவிதையில் ஒரு மாயை இருக்கும் . அது அவனின் இயல்பு திறனே தவிர தமிழ் ஆற்றல் அல்ல.

இத்தகைய முரண்பாடான , மாயை பிம்பமாய் தெரியும் அவனின் எழுத்து திறன் எப்படி அவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும் ?

தினகரனை உச்சத்திற்கு கொண்டு செல்ல காவியாவின் முயற்சிகள் ஓரளவுக்கு உதவி செய்தன. காவியாவும் தமிழ் புலமை அற்றவள் தான். ஆனால் தனக்கு தெரிந்த தவறுகளை அவள் பாணியில் சொல்லி பொய்யாக கோபித்துக்கொள்வாள்.அவள் பொய் கோபத்தில் அசைந்தாடும் அந்த விழிகளில் மயங்கியோ அல்லது விழந்தோ எப்படியோ கவிதைகளை நன்றாக எழுதி விடுவான்.

காவியாவிற்கு தெரியாமல் தினகரன் எழுதிய கவிதைகளை கணக்கிட்டால் ஒரு புத்தகமே வெளியிடலாம்.

உந்தன் விழிகள்.
வெள்ளை நீரோடையில்
கருப்பு ஓடம்.
விழி கரைகளாம்
இமைகளில் அழகிய
மை கோலம்.
------------------------
உன்னுடன் நான்
இருக்கும் போதுமட்டுமே
கிறுக்கும் கிறுக்கல்கள்
கவிதையாகின்றன. - இந்த
கிறுக்கனும் கவிஞனாகிறான்.

இவ்வாறான குட்டி குட்டி கவிதைகள் எப்போதும் யாராலும் ரசிக்கப்படவில்லை. இவைகள் அவனுக்கே அவனுக்காக அவளைப்பற்றி அவளுக்கு தெரியாமால் ரகசிய உடன்பாட்டில் எழுதப்பட்ட படைப்புக்கள். பின்னாளில் தினகரன் தன்னிலை மறந்தபோது அந்த கவிதைகள் ”காணவில்லை”என்ற நிலைக்கு சென்றுவிட்டது.

” தினா படிக்கவே மாட்டானா......? ” தமிழ் பேராசிரியர் தினகரனின் உற்ற தோழன் சசிக்குமாரிடம் கேட்கிறார் .

“ மேம் என்ன இப்படி கேட்கறீங்க.? எப்படித்தான் படிப்பான்னு தெரியல ..மேம். இதுவரைக்கும் அரியர்ஸ் வைக்கல, ஜஸ்ட் பாஸாவது ஆகிடுவான். ஆனா மேம்... எப்போ பார்த்தாலும் கையில இருக்கிற நோட்டுல என்னத்தயோ கிறுக்கிட்டு இருப்பான் மேம். அவன் ஒரு விசித்திர சைக்கோ “

“ஹே சசி..! சைக்கோன்னு சொல்லாதே.. அது அவனோடு பொழுப்போக்கு..! விடு.. அவன் வழியில் விடு... ! பட் அவனை கொஞ்சம் வாட்ச் பண்ணிட்டே இருங்க...! தனியா இருக்கவிட்டாலும் அடிக்கடி அவன் என்ன செய்றான்னு பாருங்க. சரியா ? “

“ஏன் மேம்... ஏன் இப்படி சொல்றீங்க.. அவன் என்ன தீவரவாதியா “ நக்கலாகவே சசி கேட்டான்.

“ இல்ல... அவன் ஒரு நோயாளி “ என்ற தமிழ் பேராசிரியர் மணிமேகலை தினகரனின் உற்ற நண்பன் சசிக்குமாரிடம் ஏதையோ தீவரமாக சொல்லிவிட்டு .. சொன்னதை காவியாவுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
யாராக இருந்தாலும் , உயிர் தோழனாக இருந்தாலும் எதுவும் ஒரு எல்லை வரை தானே மற்றவர்களை பற்றி கவலைப்படுவார்கள். அவரவர் பிரச்சினைகள் ஆயிரமாயிரம் இருக்க, அவ்வப்போது சுயநலத்திற்கு இடம் கொடுத்துத்தானே ஆகவேண்டிருக்கிறது.

தினகரன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் படிக்கும் சமயம்
கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கொடுமையான நிகழ்வுகள் தினகரனின் மனதை ஆவேசப்படுத்தியது. அந்த தாக்கத்தில் அவன் எழுதிய கவிதைகள் பரவலாக கல்லூரி வளாகத்தில் பேசப்பட்டது.
அந்த கவிதை உணர்ச்சிமிக்க வரிகளில் மதங்களை தாக்கி கடுமையான வார்த்தைகள் புகுத்தப்பட்ட புரட்சி படைப்பு எனலாம். அந்த கவிதையே கல்லூரியிலுள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தினகரனின் பெயர் பிரபலமாகியது. ஆனால் அந்த கவிதையே அவனை கல்லூரியில் இருந்து தற்காலிகமாக நீக்கவும் செய்தது. அந்த கவிதையில் அவன் எழுதிய சில வரிகள் அன்றைய சூழ்நிலையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆக்ரோஷ உணர்வு தூண்டியது என்று கல்லூரி நிர்வாகம் காரணமும் சொன்னது.

சில நாட்களுக்கு பிறகு....!

”இந்த கல்லூரியில பிரபலமாக பேசப்படும் அந்த மாணவன் அப்படி என்னதான் எழுதியிருந்தான்...?” தினகரனின் மானசீக குரு முத்துமாணிக்கம் ஒரு விழாவிற்காக அந்த கல்லூரி வந்தபோது கல்லூரி தாளாளரிடம் கேட்க... அந்த கவிதை அவருக்கு காண்பிக்கப்படுகிறது. சற்று புருவம் உயர்த்திய முத்துமாணிக்கம்..
“நான் அவன் குரலில் இந்த கவிதை கேட்க வேண்டும். அந்த மாணவனை மேடைக்கு அழைக்க முடியுமா ? “

தினகரன் மேடைக்கு வரவழைக்கப்பட்டான். ”கவி மகாராஜா” முத்துமாணிக்கத்தை மீண்டும் மிக அருகில் பார்த்த அந்த நொடியில் தினகரனின் மனநிலை நெகிழ்ச்சியாக இருந்தது.
“ சார் என்னை ஞாபகம் இருக்கா ? ரொம்பா நாளைக்கு முன்னால ரெண்டு வருஷம் இருக்கும் ஸ்கூல் பங்கஷன்ல உங்ககிட்ட் ஆட்டோகிராப் வாங்கினேன்ல “ திக்கி திணறித்தான் பேசினான்.

”இல்லையே தம்பி... நிறைய ரசிகர்களை பார்க்கிறேன் ஞாபகம் வச்சிக்க முடிவதில்லை கண்ணா..! ”

”சார்,, கர்சீப் ல ஆட்டோகிராப் கொடுத்தீங்களே... ”

”ஓ சரி சரி அந்த சிறுவனா நீ... உன் ஆவலை கண்டு மிரண்ட நாள் அல்லவா அது...
இவ்வளவு ஆவேசமா எழுதியிருக்கீயே....! பயமறியா கன்று நீ..! சரி தப்பு இல்ல. உண்மையை எழுத துணிச்சல் வேண்டும். சரி இது என் பேனா..! சிங்கப்பூர் போனப்பா எனக்காக வாங்கியது, உனக்கு தரேன்.
நீ எழுதின கவிதையை நீ படிச்சுக்காட்டு....போ மைக்ல படி...! “

இன்ப அதிர்ச்சியும் துன்ப அதிர்ச்சியும் வந்து விட்டது தினகரனுக்கு...
(மனதிற்குள்.. ”என் குரு கேட்டு நான் முடியாதுன்னு சொல்லக்கூடாதே....! என் குரலே ! எனக்கு அந்த பேனா வேணும்.. திக்காம பேசு.. திக்காம பேசு ” கிட்டதட்ட வேறு உலகில் சென்று விட்டான் தினகரன்.)

”சார் எனக்கு திக்குவாய்... சரியா பேசமுடியலைன்னா அசிங்கமா போயிடும். உங்ககிட்ட படிச்சு காட்டுறேன். மைக்ல வேண்டாம் சார். ”

ஆச்சரியமாக பார்த்த முத்துமாணிக்கம் “ ஆழமா அர்த்தமா புரட்சியாய் எழுத தெரிந்த உனக்கு இந்த திக்கு வாய் விஷயமே இல்ல.... ! கண்ணை மூடிட்டு பேசு.... என் பேனா வேணுமா வேண்டாமா?

”வேணும் வேணும் சார்.... இதோ இப்போ இப்போ பேசுறேன். ”

ஒலிவாங்கி....! முன் நின்றான்.

கவிதையின் தலைப்பு..... “ கா.... காட் .காட் “ வாசிக்கும் போது திக்குகிறது.
திரும்பி முத்துமாணிக்கத்தை பார்த்தான்.. கண்ணை மூடு என்று சைகை காட்டி வெற்றி சின்னம் காட்டினார்.

அரங்கு முழுவதும் மகாநாடு கூட்டம் ஆனால் மயான அமைதி

வாசிக்க ஆரம்பித்தான்.... தினகரன்.
கண்ணை மூடினான் . மூடிய இமையில் கவிதை வரிகள் ஓடுகிறது. வாய் பேச ஆரம்பித்தது...!

”காட்டுமிராண்டிகளின் தேசமே..! “ -- தலைப்பு பலத்த ஆக்ரோஷமாக வாசித்தான். --

புறப்பட்ட அவனின் குரல் புயல் நிற்கவில்லை .. ஆவேசம்..! ஆவேசம்..! வார்த்தைகள் அத்துணை ஆவேசம்....

----------------------------------------------------------------------
கோவையில்
வெடித்து சிதறியது
வெடிகுண்டு...!
வெடித்துப்போனது
இந்து-முஸ்லீம் ஒற்றுமை...!

எவன் வைத்தானோ
எதற்கு வைத்தானோ
வைத்தவனுக்கு என்ன பைத்தியமோ?
அவன் இந்த மதமா ?
அது தேவையில்லை
அவன் மனிதனுமில்லை..!

அரசாங்கமே !
அதிகாரம் கொடு..!
என் கவிதைக்கும்
எனக்கும் ஓர்
அதிகாரம் கொடு..!

ஒரே போடு
ஒரே வெட்டு
வீழ்த்திவிடுகிறேன்
என் வீரவார்த்தைகளிலும்
என் வீரவாளிலும்..!

வருவது யுத்தமா ?
வழிவது ரத்தமா?
நானும் பார்த்துவிடுகிறேன்.
ரத்தத்தின் நிறம் சொல்லுமா?
இது இந்து என்று
இது முஸ்ஸீம் என்று .

சொல்லுமா சிவப்பு ரத்தம்..?
இது காவிக்காரனின் ரத்தம் என்றும்
இது பச்சைக்காரனின் ரத்தம் என்றும்
சொல்லுமா சொல்லித்தான்
வெல்லுமா ?
இந்த மண்ணாங்கட்டி மதங்கள்?


தீவிரவாத காட்டேரிகளே..!

மாற்றானை வீழ்த்தி
மதத்தினை வளர்த்திடு
கீதையும் குரானும்
எப்படியடா இப்படி சொல்லும்?


இந்துக்களை அழித்து
இஸ்லாமியம் ஆளட்டும்
குரான் சொல்லியதா ?
முஸ்லிம்களை அழித்து
இந்துமதம் சிறக்கட்டும்
கீதை சொல்லியதா ?
அல்லது
மதப்பன்றி நீ சொல்கிறாயா ?

நெறிப்படுத்த வந்த மதங்களை
வெறிப்பிடித்த மிருகங்கள்
படித்தால் .........
இப்படித்தான்
இப்படித்தான்
குண்டு வெடிக்கும்
வெகுண்டு கொக்கரிக்கும்
மதங்கொண்ட யானைகளாக
மனிதநேயங்களை கொன்று அழிக்கும்.

வேடிக்கை பார்க்க சொல்கிறாயா ?
வாடிக்கையாய் மறக்க சொல்கிறாயா ?

தீ............!
சீறும் வரைதான் தீபம்
சீண்டி விட்டால்..........
தீ பிழம்பாய் வெடிக்கும்
தீவிரவாத்தை எரிக்கும்
தீமையும் கொளுத்தும்
உன்னையும் கொளுத்தும்
பிடிக்கவா தீயினை ? நானும்
படிக்கவா தீ’வீரவாதத்தினை... ?

குத்தும் கத்தி
யார் குத்தினாலும் குத்தும்.
கையில் எடுக்கவா?


இறுதி எச்சரிக்கை எழுதுகிறேன்.
மதவெறிப்பிடித்த நாய்களே !
கலவரங்களை விட்டுவிடு !
எங்களை விட்டுவிடு!
மதங்களை விட்டு ஓடிவிடு!
மனிதர்களை விட்டு ஓடிவிடு!


சட்டமே...! கொஞ்சம் கவனி!
என் மீது ஆத்திரப்படாதே...!
கண்ணை நோக்கி வரும்
பூச்சுக்களை தட்டிவிட்டு கொன்றால்
அதன் பெயர் வன்முறையல்ல...!

நான் தீவரவாதம் பேசவில்லை
நான் பேசியது தற்காப்பு வாதம்..!

மனிதம் காப்போம் !
மனிதர்களை காப்போம் !
மதம் மறப்போம் !
மனிதனாய் வாழ்வோம் !
------------------------------------------------------------------------

படித்து முடித்து கண் திறக்கிறான்....! அரங்கம் முழுவதும் ஒரே இடி முழுக்கம். அரங்க சுவர்களை இடித்து தகர்த்திவிடும் அளவிற்கு இருந்தது அந்த கைத்தட்டல்களின் ஒலி.

தினகரனை முத்துமாணிக்கம் அருகில் அழைத்தார்...! அவரின் பேனாவை எடுத்து அவன் சட்டைப் பையில் வைத்து “ சபாஷ் ..! கவிஞனுக்கு காதல் வருவதை போல கோபமும் வரவேண்டும். இரண்டும் தேவையான பொழுது வெளிப்படுத்தபவனே கவிஞன், நல்ல எழுத்தாளன்.” என்று கன்னத்தை தட்டிக்கொடுத்தார். மானசீக குருவின் பேனாவை பெற்ற அவனுக்கு தன்னம்பிக்கையும் அதே நேரம் வழக்கத்திற்கு மாறான சந்தோசமும் பெருகியது.

தினகரனுக்கு அங்கு என்ன நடக்கிறது. அவனால் அங்கு என்ன ஒரு சூழ்நிலை உருவாக்கபட்டது என்று ஒன்றுமே புரியவில்லை.
அந்த கைத்தட்டல்கள் அவனுக்கு புது வாழ்வை கொடுத்தது. இந்த இனம்புரியா மகிழ்ச்சியான தருணத்திலும் தினகரனின் கண்கள் காவியாவை தேடியது. அரங்கத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடியது அவன் பார்வை.. அந்த பாவை மேடையின் கீழே ஒரு ஓரத்தில் கண்ணில் நீர் பொங்க, மகிழ்ச்சியில் முகம் சிவக்க நின்றுக்கொண்டிருந்தாள்.
அதீத சந்தோஷத்துடன் காவியாவின் அருகில் ஒடிச்சென்றவனை முத்தமிட துடித்தவள் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு கைக்குலுக்கினாள். “ டேய் நீ நீதாண்டா... கிரேட் டா கழுதை..! “ இப்படித்தான் பாராட்டினாள்.
கைக்கொடுத்தவளின் கையை விடுதாய் இல்லை தினகரனின் கைகள்.
முத்துமாணிக்கத்திடம் தான் பெற்ற பேனாவை காட்டி பெருமிதத்துடன் பேசியும் தான் திக்காமல் உற்சாகமாக பேசிய பின்பு கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கைதட்டி பாராட்டிய நிகழ்வுகள் பற்றியும் காவியாவுடன் ஆதீத சந்தோஷத்துடன் பேசிக்கொண்டிருந்த தினகரன் தீடிரென்று தலையில் கையை வைத்து மயக்க நிலையில் காவியாவின் தோளில் சாய்ந்து விழ.. காவியா....

“ தினா...! தினா...!! என்னாச்சு..? என்னாச்சுடா....? “

தினகரன் ஏதும் பேசமுடியாமல் தன் கைகளால் ஏதோ சொல்ல முயன்று முற்றிலும் மயக்கமடைந்து தரையில் விழந்துவிட , அந்த இடத்தில் சக மாணவர்கள் கூடிவிட, ஒரு பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.

==அதீத சந்தோஷத்திலும் தினகரனின் மூளை அவ்வப்போது பாதிப்படையும்== இது தினகரன் முதன் முதலாக ஒரு விபத்தில் சிக்காமல் மீண்டு சிகிச்சை பெற்ற போது மருத்துவர் தந்த மருத்துவ அறிக்கை.

(தொடரும்)



--இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (7-Sep-14, 2:38 pm)
பார்வை : 252

சிறந்த கட்டுரைகள்

மேலே