லஞ்சம் வாங்கப்படும்

லஞ்ச அலுவலகம்

உடல்நிலை சரியில்லாததால் பல நாட்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். இன்று உடல்நிலை ஓரவு சீரானதும் வீட்டிலிருந்து நகரின் மையப்பகுதிக்குச் சென்றேன். அங்கு முக்கிய அலுவலங்கள் இருக்கும் பகுதியில் ஒரு கட்டிடத்தின் காம்பவுண்டு ஓரம் இருந்த புத்தம் புதிய பெரிய பெயர்ப் பலகையை ஒன்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு அதிர்ச்சி தந்தது அந்தப் பெயர் பலகையின் மேலிந்த அலுவலகப் பெயர் தான்:
நாணயஸ்தன் நகர் லஞ்ச அலுவலகம்

அருகிலிருந்த ஒருவரைப் பார்த்து “என்னங்க லஞ்ச அலுவலகம்ன்னு இருக்கு. ஒண்ணும் புரியலீங்களே. இத எப்பத் தொறந்து வச்சாங்க” என்று கேட்டேன். ”ஏங்க, நீஙக பேப்பரே படிக்கிறதில்லை. டி.வி நீயூஸ்சும் கேக்கறதில்லையா. சரியாப் போச்சு போங்க. லஞ்சம் வாங்கறதும் கொடுக்கறதும் சட்டப்பூர்வமாகி இன்னையோட பத்து நாளாகுது” என்றார் அவர். “ அடக் கடவுளே இதெல்லாம் நடக்குதா நாட்லெ” என்றேன். “அந்தப் பெயர் பலகையில் உள்ள லஞ்சத் தொகைப் பட்டியலெ நல்லாப் பாருஙக” என்று சொல்லிட்டு அவர் இடத்தைவிட்டு நகர்ந்தார்.

நான் அதிர்ச்சி கலந்த வியப்புடன் பெயர்ப் பலகையில் உள்ள பட்டியலையும் அறிவிப்பையும் பார்த்தேன். சான்றிதழ், பத்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்துக்கேற்ப எவ்வளவு லஞ்சம் தரவேண்டும். உடனே பெற ஒரு தொகை. ஒரு நாளில் பெற ஒரு தொகை நாட்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால்அதற்கு தகுந்த மாதிரி லஞ்சத் தொகை குறைவாக இருக்கும். இது போன்ற தகவல் எல்லாம் தெளிவா இருந்தது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு லஞ்ச அலுலகம். அங்கு லஞ்ச டோக்கன் வாங்கிக் கொண்டு சம்பந்தட்ட அலுவலகத்திற்கு சென்று டோக்கனைக் கொடுத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவேண்டுமாம்.

”அய்யோ கடவுளே நாடு எங்கே போயிட்ட்ருக்கு”ன்னு சத்தமாகக் கத்தினேன். உடனே என் மனைவி “ என்னங்க ஆச்சு. எதுக்குக் கத்தினீங்க. மணி எட்டு ஆகுது படுத்துட்டு கனவு கண்டுட்டு இருக்கீங்க. என்ன ஆச்சு ஒங்களுக்கு” என்று கேட்டபோது தான் நான் கண்டது கனவு என்பதை அறிந்தேன். முதல் நாள் செய்தித் தாளில் வெளியான “லஞ்சம் வாங்குவதைச் சட்டப்பூரமாக்க வேண்டும்” என்று வடமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் அறிக்கையும் அதன்விளைவாக வெளியான கண்டன அறிக்கைகளும் தான் என் கனவில் வந்த காட்சி.

எழுதியவர் : மலர் (15-Sep-14, 7:46 pm)
பார்வை : 278

மேலே