பொய்யான உறவுகள்
பொய்யான உறவுகள்.
தேவைப்படும் போதுதானே ஓடிப்போய் ஒதுங்குவார்.
தேவைபட்டால் நாதியெனத் தேடிவந்து சினுங்குவார்.
இரக்கத்தை இறக்கிவைப்பார் இக்கட்டு வேளையே—செல்வப்
பெருக்கத்தில் உறவணைவார் பற்றியும் காலையே.
நாதியற்று வீழும்போது சாதிதொட்டு உதவாது.
சாதிகெட்டுத் தாழும்போது நாதிகிட்டே நெருங்காது..
நாதியென்ன சாதியென்ன எதுஉன்னைச் சீண்டும்.?---பணத்துக்காக
சாதியெல்லாம் நாதியென மதில்ஏறித் தாண்டும்.
பிணம்கூட மெய்யாட்டும் பணமென்றால் கைநீட்டும்
வனமேகத் தான்மட்டும் கனமேறிக் கைநழுவும்.
பற்றுபந்தம் சுற்றமெல்லாம் பகலாடும் வேசம்---சும்மா
ஓட்டவந்த சொந்தமெல்லாம் பொருள்நாடும் மோசம்..
இருக்கும்போது பட்டினியில் கிடத்திவைக்கும் மனமா?
இறந்தபின்னே மேளதாளம் வெடிமுழக்கம் பணமா?
ஊருமெச்ச பூந்தேரும் ஊர்கோலம் எதற்கோ?—புழுத்து
நாறவச்சு மாண்டாரின் நாறக்காசு அதற்கோ?
பொய்யான உறவுகளை மெய்யென்றும் நம்பாதே!
மெய்யாக உழைத்ததை பொய்யரிடம் சொல்லாதே!
இயன்றவரை இருந்துவிட்டு அயரும்போது அரசிடத்தில்—பொருள்
முயன்றதெல்லாம் பொதுவாக்கி முடிவதும் புண்ணியமே.
கொ.பெ.பி.அய்யா. .

