என் முகவரி உன் வாசலில்

நீ மட்டும் இல்லையென்றால் நான் என்றோ
என்னை இழந்திருப்பேன்,உன் தேவையே
என் வாழ்வை வழிநடத்தி செல்கிறது.

உன்னை நெருங்கி தொட்டு பறிக்க
தீவிரமாய் முயன்று பக்கம் வந்ததும்
தள்ளிவிட்டு தோல்வியடைய செய்கிறாய்,
துவண்டு இனி வேண்டாம் என எண்ணும்
போது மீண்டும் என்னை தூண்டி விடுகிறாய்.

இரவுகளில் தூங்க விடாமல் துரத்தும்
கனவு ராட்சஷி நீயாகி,நாளை விடியல்
உனதே என ஆறுதலாய் அரவணைத்து
உறங்க வைக்கும் தேவதை நீயாகிறாய்,

என்னை வறியவன் ஆக்காதே,
வயோதிகனாய் மாற்றாதே,
தீக்கவிஞன் நான் என் திறமையை முடக்காதே,
பார் ரசிகன் நான் காலப் பசியினால்
என்னை மறிக்க விடாதே,

என்னுள் இருக்கும் உன்னை வசமாக்க
வானை பிளந்து விண்வெளிக்கும் வருவேன்
காற்றை கைதுசெய்து கப்பலும் செய்வேன்
இறக்கை கட்டிக் கொண்டு இமயத்திலும் குதிப்பேன்
இல்லை வேண்டாமென்றால் இதழால் சிரிப்பேன்,

கார்மேகங்களை நீக்க என்னை கதிரவனாக்கு
உன் விரல்கள் பிடிக்க நான் வித்தகனாவேன்,
வன்பாதைகளை நான் கடக்க என்னை நதியாக்கு
என்னை தொடர்பவருக்கெல்லாம் துருவனாவேன்,

உன்னால் உலகை ரசிக்க வந்த தூதுவன் நான்,
பொன்னெழுத்தால் புவி ஆள வந்த வருணபுதல்வன் நான்,
என்னாள் கனவு மெய்பட என் கரங்களில் கவிதை
ஆவாயோ எந்தன் இலட்சிய பயணமே...

எழுதியவர் : (21-Sep-14, 1:18 pm)
சேர்த்தது : க.சண்முகம்
பார்வை : 83

மேலே