என்னைப் போல ஒரு புத்தர்

எல்லாரையும் போல
ஒரு இறுமாப்புக்குள்
இறங்கி நடப்பதைத் தவிர
வேறு வழியில்லை....

எனை எப்படித்தான்
நான் என்பது..?

நிஜம் பேசினால்
சுயநலம் என்கிறார்கள்...
பொய் பேசும் தருணங்களில்
நிர்வாணம் கசக்கிறது....

யாரைப் பற்றியாவது
பேசிக் கொண்டேயிருக்க
நேரம் கிடைப்பதில்லை...
கிடைத்தாலும் ஏன்
பேச வேண்டும் என்பதில்
ஞானி ஆகிறேன்
அவர்கள் மத்தியில்....

தேடல் ஒரு
பிறந்தநாள் பதார்த்தத்தில்
முடிகிறது அவர்களுக்கு...
ஏன் பிறப்பு என்பதில்
தொடங்குகிறது எனக்கு....

கல் வீசி விரட்டாமல்
காகங்களின் நிறம்
ரசிக்கும் நான்
மழைகளின் குடை
வெறுப்பவன்....

வெற்றுக் கால்கள்
பைத்தியமா...? நிஜமாக ....

அவர்களின் குத்துப் பாட்டு
விவாதத்தில்
என் புத்தி
கண் கலங்கி வெளியேறுகிறது.....

பெரிய இலக்கியவாதி
என்கிறார்கள்
இலக்கியவாதியில்
பெரிதென்ன.. சிறிதென்ன..?

பிறந்து செத்து போக
அவர்களல்ல நான்....
புத்தனா என்கிறார்கள்....

உதிர்ந்த இறகுகளை
கவனமின்றி மிதித்த பின்
துடித்த மனதில்
கண்களற்ற எறும்பு கூட்டத்தின்
கோஷ்டி மோதல்....

நான் இறுமாப்புடன்
முகம் திருப்பிக் கொண்டேன்....

நதி தேடும் இலையில்
மூழ்காமல்
அமர்ந்திருந்தார்....
என்னைப் போல
ஒரு புத்தர்....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (21-Sep-14, 3:22 pm)
பார்வை : 488

மேலே