நீயும் தான்

மாலை என் மனத்தை வருத்துகின்றது;
மாலை வரும் வேளை எதிர்பார்த்தக்
காலங்கள் மாறி,என் மனம்
அங்கலாய்ப்பதை நீ அறிவாயா?
அழகிய சந்திரனை இரசிக்க இயலவில்லை;
மெல்லிய தென்றலை ஏற்க இயலவில்லை-என்னவனே
உன்னை என் கண்கள் காணாததால்.
தென்றல் தீயாய்ச் சுடுகின்றது;ஒற்றைச்
சந்திரன் கூட கேலி பேசுகின்றான் என்னை.
அன்று நீயும் நானும் நடந்து சென்ற
ஒற்றையடிப்பாதை முட்களாய்த் தெரிகின்றது இன்று,
நான் மட்டும் நடப்பதால்;
நம் காதலுக்காய் நாம் வேண்டிய கோவில்களெல்லாம்
ஒய்யாரமாய் நின்று சிரிக்கும் சப்தம்
என் காதை அடைக்கின்றது;
நீ கட்டிய மாங்கல்யத்தையும்
நீ இட்ட குங்குமத்தையும் சுமந்தபடி
உன் விரல் கோர்த்து நாம் நடந்து வந்த
நம் வீதி என் விதியைச் சொல்லி
நோகடிகின்றது என்னை;
நம் தீண்டலால் உயிர் பெற்ற
நம் பள்ளியறைக் கட்டில்
"உன்னவன் எங்கே?" என்று
என்னை வினவுகின்றது;
மலடிப் பட்டம் கட்டி
என்னைப் புறம் ஒதுக்கிய என்னவனே,
உனக்கு ஏன் தெரியவில்லை
நீயும் அதற்குக் காரணம் என்று?