மெல்லத் தமிழ் இனி சாகும்
உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதல்மொழி என்றார்...
அதனால் உன்னை
முதலாகப் போட்டு
வியாபாரம் தொடங்கிவிட்டார் !
என்ற அப்துல் ரகுமானின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. வலிமை வாய்ந்த இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையினரிடையே சிறுபான்மையான தமிழர்கள் காலப்போக்கில் கரைந்து விடமால் தங்கள் அடையாளத்தை காக்க உதவுவது மொழி என்னும் கவசம் தான்.
“ மொழி என்னும் நகரத்தை நிர்மாணிக்க ஒவ்வொரு மனிதனும் ஒரு கல்லைக் கொண்டு வந்தான் “ என்ற எமர்சனின் வரிகள் நம் ஒவ்வொருவருடைய சிந்தனைக்கும் உரியது.
தமிழகத்தில் மட்டும் ஏழு கோடித் தமிழர்கள் வாழ்கின்றோம். இந்தியா முழுவதும் 50 லட்சம் தமிழர்கள் பரவி கிடக்கின்றனர். உலகின் 56 நாடுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர்.
ஆனால் தமிழரிடையே தமிழ் தான் இல்லை. தன் வயிற்றுப் பசிக்காக தான் ஈன்ற குட்டிகளையே உணவாக்கி கொள்ளும் விரியன் பாம்புகளைப் போல, வயிற்றுப் பிழைப்பிற்காக தமிழ் மொழியை தாரை வார்த்து விட்ட வினோத மனிதர்கள் நாம்.
தாய் மொழியைப் பயன்படுத்துகிறவர்கள் உள்ளவரை தான் ஒரு மொழி வாழும். அடுத்த தலைமுறைக்குத் தோள் மாற்றி விடப்படாத எந்த மொழியும் வழக்கழிந்து போகும்.
இன்று ‘ஆங்கிலம் பேசுகிறவன் அறிவாளி, தமிழ் பேசுகிறவன் தற்குறி’ என்ற பொது புத்தி அணைத்து இளைஞர்களிடமும் காணப்படுகிறது. ‘தமிழ் படித்தால் சோறு கிடைக்காது’ என்று சொல்வதை விட சோகமானது வேறெதுவுமில்லை.
‘ ஆங்கிலக் கல்வியின் மூலம் நாம் அடிமைகளாகி விட்டோம். இதனால் நமது ஆண்மையிழந்து கிடக்கிறது’ என்று தன் சோகத்தை வெளிப்படுத்தினார் திருவிக.
அண்ணா 1967 இல் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் இருக்கும்’ என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.47 வருடங்கள் உருண்டோடி விட்டன. இன்னும் பள்ளிக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் செயல்வடிவம் பெறவில்லை.
ராஜாஜியின் ஆட்சியில் 125 பள்ளிகளில் தான் இந்தி புகுத்தப்பட்டது. அவர் ஆண்ட சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக விளங்கிய தமிழகத்தில் 60 பள்ளிகள் தான் அந்த பட்டியலில் இடம் பெற்றன.
ஆனால் இன்று தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கில வழி மழலையர் பள்ளிக்கூடங்கள் பல்கி பெருகி விட்டன. 600 க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழகம் எங்கும் கடைகளை விரித்து விட்டது. பள்ளிக் கல்லூரிகளில் தமிழ் எங்கே ? வீடுகளில் கூட இன்று தமிழ் பேசுவது அவமானமாகாக் கருதப்படுகிறதே ?
மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற அறிவியல் சார்ந்த படிப்புகளில் கூட பயிற்றுவிப்பு மொழியாக தமிழ் இல்லை. தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற மாயை உருவாக்கப்பட்டதற்குப் பிறகு முறையாக தமிழ் பேசுவோர் மற்றும் பிழையின்றி தமிழை எழுதுவோரின் எண்ணிக்கை பன்மடங்காகக் குறைந்து விட்டது.
மொழி என்பது அறிவு. அறிவின் வாயிலாகத் தான் நாம் பண்பாட்டை பேண முடியும். தமிழ் மொழியில் கல்வி கற்காததன் விளைவு இன்று அறிவு சுருங்கி விட்டது. பண்பாடு பாழ்பட்டு விட்டது.
‘ இருவர் உரையாடும் போது தமிழில் தான் பேச வேண்டும் ‘ என்று ஆங்கிலத்தில், வட மொழியில், இந்தியில், வங்கத்தில் புலமை பெற்ற பாரதி சொன்ன கருத்தை நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் அறிவு ஜீவிகள் உணர வேண்டும்.
‘ தமிழ் மிகவும் பண்பட்ட மொழி. தனித்துவமிக்க உயர்ந்த இலக்கியங்களை தன்பால் வைத்திருகிறது அது ‘ என்று சொன்ன ஜெர்மானிய பேரறிஞர் மாக்ஸ் முல்லரின் வரிகளை நெஞ்சில் நிறுத்தி நாம் சிந்திக்க வேண்டும்.
இன்று வரை அரசு நிர்வாகத்தில் முழுமையாக தமிழ் இல்லை. நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பதில் கூட தடுமாற்றம். கோவில் கருவறைகளில் தமிழ் ஒலிக்கவில்லை. பள்ளிக் கல்லூரிகளில் தமிழை தீண்டுவாரில்லை.
கீதாஞ்சலியை ஆகிலத்தில் மொழிப் பெயர்த்ததற்காக நோபல் பரிசு பெற்ற தாகூர், முதலில் அந்த நூலை தன் தாய் மொழியான வங்கத்தில் தான் எழுதினார். காந்தியும் தன்னுடைய சுய சரிதையை குஜராத்தியில் தான் எழுதினார்.
நம் தாயின் கருவறையில் நாம் கேட்ட முதல் சப்தமே தமிழ் தான். அத்தகைய தமிழ் மொழியை வயிற்றுப் பிழைப்புக்காக நாம் மறந்து விட்டதன் விளைவு, சம்ஸ்கிருத வார விழாவை தமிழகத்தில் கொண்டாட வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
நீதியும் அறமும்; மானமும், வீரமும் தமிழரின் தனிப்பெரும் அடையாளங்கள். நம் முன்னோரின் வாழ்வும், நெறியும் மகத்தானது.
உலகில் தோன்றிய முதல் நாகரீகமான தமிழரின் பண்பாட்டு எதிரொலியாகத்தான் மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகமும், நைல் நதிக்கரையில் வளர்ந்து செழித்த எகிப்திய நாகரிகமும், பின்னர் உருவான ஐரோப்பிய நாகரிகமும் அமைந்தது என வரலாற்றுப் பங்கங்களில் நாம் படிக்கிறோம்.
முதன் முதலில் கடலில் மரக்கலன் செலுத்தும் கலையை அறிமுகம் செய்தவன் தமிழன். அதே கடல் கடந்த நாடுகளுக்கெல்லாம் சென்று வெற்றிக்கொடியை நாட்டியவனும் தமிழனே. எகிப்திற்கும், ரோமிற்கும் பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்து வணிகத்தில் தனி முத்திரையை பதித்த தமிழனின் வரலாறுதான் எத்தகைய சிறப்பு மிக்கது.
இத்தனை பெருமைகளை சுமந்து நிற்கும் தமிழரின் தனி அடையாளங்களை பிற இனத்தவரிடமிருந்து வேறுபடுத்தி காட்ட உதவுவது மொழி எனும் கருவி தான்.
அத்தகைய சிறப்புமிக்க தமிழ் மொழியை புறந்தள்ளிவிட்டு சமூக வீதிகளில் நடமாட முனைந்தால் முதலில் அழிக்கப்படுவது தமிழன் என்ற நம் அடையாளம் தான். எத்தனையோ இனங்கள் அதன் அடையாளத்தை இழந்ததன் விளைவு அடிமை வாழ்வை மேற்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளானதை வரலாற்றின் பக்கங்கள் நமக்கு உணர்த்த தவறியதில்லை.
தமிழை நாம் அனைவரும் பயின்று தேர்ந்தால் தான் தமிழ் படித்தவனுக்கும் வேலை வாய்புகள் உருவாகும் சூழல் கனியும். பரந்த அறிவை பெறுவதற்கு நம் தாய்மொழியே நமக்கு உதவும்.
இனியும் பொறுப்பதற்கில்லை. இன்றே தமிழை ஆட்சி மொழியாக்குவோம். கல்வி நிலையங்கள் முதல் கடை தெருக்கள் வரை மணக்கும் தமிழை முழக்கம் செய்வோம் என்ற சபதத்தை நாம் ஏற்காவிடில் “ மெல்ல தமிழ் இனி சாகும் “.